Tuesday, July 11, 2017

தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-

தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-

ம.பொ.சி
-------------------------------------
போராட்டங்கள் மலிந்த எனது பொது வாழ்க்கையிலே நான் சந்தித்த மிகப் பெரியதும் கடுமையானதுமான போராட்டம் தட்சிணப் பிரதேசத் திட்டத் திணிப்பு எதிர்ப்பேயாகும். தலைநகர் காத்தல், வடக்கு-தெற்கு எல்லைப் பகுதிகளை மீட்டல், திராவிட இயக்க எதிர்ப்பு ஆகிய போராட்டங்களிலே எனக்குத் துணைபுரிந்த தமிழ் நாளேடுகள் தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பிலே என்னை அடியோடு கைவிட்டுவிட்டன. இந்த நேரத்தில்தான் தி. க., தி. மு. க., கம்யூனிஸ்டு, சோஷலிஸ்டு அமைப்புகளின் உதவியை நாடினேன். அதை நான் அன்று செய்திராவிடில், இன்றுள்ள புதிய தமிழகம் தோன்றியிருக்க முடியாது. தமிழகம், ஆந்திரம், கன்னடம், நிலைத்திருக்கும்.
அது இற்றை நாள்வரை நீடித்திருக்குமா?-என்பது வேறு விஷயம். ஆனால், தட்சிணப் பிரதேசத்திட்டம் ஒரு இடைக் காலத்திற்கேனும் நடைமுறைக்கு வந்திருக்கும். தார் கமிஷன் 1948ஆம் ஆண்டில், இந்திய மாநிலங்கள் மொழி அடிப் படையில் திருத்தியமைப்பது பற்றி ஆலோசித்து அறிக்கை தர மத்திய அரச கமிஷன் ஒன்றை நியமித்தது. நீதிபதி தார் என்பவர் அதன் தலைவராக இருந்தார். கோயமுத்தூர்வாசியும், அரசியல் நிர்ணய மன்ற உறுப்பினருமான திரு. டி.ஏ. இராமலிங்கம் செட்டியாரும் ஆந்திரரான திரு. இராம கிருஷ்ண ராசும் கமிஷனில் அங்கம் வகித்தனர். நாடு விடுதலை பெற்ற ஓராண்டிற்குள்-அதாவது, இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் தயாரித்து முடிவதற்கு முன்பு-தார் கமிஷன் நியமிக்கப்பட்ட தென்பதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆம்; இந்தியாவில் சுதந்திர அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலேயே மொழிவாரி மாநிலங் களை அமைத்து விடுவதென்ற நல்ல நோக்கத்துடனேயே நேரு ஆட்சி தார் கமிஷன் நியமித்தது. இந்தக் கமிஷன் நாடு முழுவதையும் சுற்றி, மாநிலந் தோறும் சென்று ஏராளமான சாட்சியங்களைப் பெற்றது. கமிஷன் சென்னைக்கு வந்தபோது, 13.9.48ல் தமிழரசுக் கழகத் தலைவன் என்ற முறையில் அதன் முன் சாட்சிய மளித்தேன். தார் கமிஷன் தனது பரிந்துரையில், மாநிலங்களை மொழி வாரித் திருத்தியமைப்பதே கூடாதென்றும், அப்படித் திருத்தியமைப்பதானாலும், அதற்கு இது தருணமல்லவாத லால், அதைக் காலங்குறிப்பிடாமல் ஒத்திப்போட வேண்டு மென்றும் அறிக்கை தந்தது. கமிஷனின் அறிக்கை எனக்கு வியப்பையும் வேதனையையும் தந்தது. ஏன் பிரதமர் நேருவும் வியப்படைந்தாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
ஆந்திரப் பிரிவினையின் போதே சென்னை நகரம் பற்றிய சிக்கல் தீர்ந்துவிட்டது. தமிழகத்திற்கு ஆதரவான வகையிலே! பினனர் நடந்த வடக்கெல்லைக் கிளர்ச்சியின் போது அதுபற்றி விசாரணை நடத்தத் தனியாக எல்லைக் கமிஷன் நியமிப்பதாக பிரதமர் நேரு உறுதி கூறிவிட்டதால், அந்தப் பிரச்சினையும் பஸல் அலி கமிஷன் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இந்தது. ஆகவே, அகில இந்திய ரீதியில் மொழிவாரி மாகாணங்கள் அமைப்பது பற்றியும், தமிழக அளவில் திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றியுமே பஸல் அலி கமிஷன் சென்னையில் விசாரணை நடத்தியது. பஸல் அலி கமிஷன் சென்னைக்கு வந்தபோது – அதன் அழைப்பின் பேரில் 11.5.54ல் செயின் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தமிழரசுக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தேன். அதன் சுருக்கம் வருமாறு: “அமைய விருக்கும் புதிய தமிழகம் இந்தியக் குடியரசில் சுயாட்சியுடைய அங்கமாக இருக்க வேண்டும் என்பதே தமிழரசுக் கழகத்தின் கொள்கை. “குடியரசு இந்தியாவில் குழவிப்பருவத்திலிக்கும் ஜனநாயகம் செழித்தோங்கி வளரவேண்டுமானால், கிடைத்த சுதந்திரத்தை மக்கள் எல்லோரும் சமமாக அனுபவிக்க சந்தர்ப்ப மளிக்க வேண்டுமானால், ஒவ்வொரு மாகாணமும் அதனதன் மொழியாலேயே ஆளப்பட வேண்டும் அந்த வகையில் தமிழகம் தமிழ் மொழியிலேயே ஆளப்பட வேண்டும்; தமிழர் எல்லோரும் சமமாக முன்னேற சந்தர்ப்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழரசுக் கழகம் தமிழ் மாகாணம் கோருகின்றது. “திருவிதாங்கூர் – கொச்சியை தமிழ்நாடோடு சேர்த்து, “தட்சிண ராஜ்யம்” அமைக்க வேண்டுமென்று கேரளத் தலைவர்களில் சிலர் கூறி வருவதைத் தமிழரசுக் கழகம் பலமாக எதிர்க்கிறது. அப்படிச் செய்தால் தென்னிந்தியாவில் விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். “மாகாணங்களை மொழிவாரித் திருத்தி அமைப்பதை இனியும் தள்ளிப் போடக்கூடாது. அப்படிச் செய்வது தேசத்தைத் துண்டாடக் கோரும் தீய சக்திகள் வெற்றி பெறு வதற்கு சந்தர்ப்பமளிப்பதாகுமென்று எனது கழகம் எச்சரிக்கின்றது.”
கேரளரின் ஆக்கிரமிப்பு வெறி:
கேரள இனத்தின் சார்பில் அப்போதைய திருவிதாங்கூர்கொச்சி ராஜ்ய காங்கிரஸ் கமிட்டி, கமிஷனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தது. அந்தமனுவின் முக்கிய பகுதிகள் வருமாறு: “தென் கன்னடம், காசர்கோடு, குடகு, மலபார் (கொச்சி சித்தூர் உட்பட) மாவட்டம், கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, திருவிதாங்கூர் – கொச்சி ராஜ்யம் (தமிழ்த் தாலூ காக்கள் உள்பட), லட்சத் தீவுகள், மாலத் தீவுகள் ஆகியவை அடங்கிய ஐக்கிய கேரள அரசை அமைக்க வேண்டும். “திருவிதாங்கூர் – கொச்சி ராஜ்யத்திலுள்ள கொச்சின் சித்தூர், தேவிகுளம், பூருமேடு, செங்கோட்டை, நெய்யாற்றின் கரை, விளவங்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை ஆகிய 9 தாலுக்காக்களைத் தமிழ் ராஜ்யத்தில் சேர்க்க வேண்டு மென்று திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும், தமிழரசுக் கழகமும், சென்னை ராஜ்ய அரசும் கோரியிருப்பதாகக் கூறப் படுகிறது. அம்மாதிரிச் செய்வது நேர்மையற்றதாகும். அதனால், கேரள ராஜ்யத்திற்கே பெரும் கேடு ஏற்படக்கூடும். அந்தத் தாலுக்காக்களில் வாழும் மக்களின் நலன்களுக்கும் தீங்கு விளையும். இதற்கு மொழி ஒரு ஆதாரமாக இருந்தாலும், அதையே ஒரே ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பூகோள, சரித்திர, நிர்வாக, பொருளாதாரக் காரணங்களும் புதிய ராஜ்யங்களை அமைக்கும் விஷயத்தில் சிந்தித்துப் பார்க்கப் பட வேண்டும். இந்த நிலைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், தமிழ்த் தாலுக்காக்களைத் திருவிதாங்கூர்-கொச்சி ராஜ்யத்திலிருந்து பிரிப்பதற்குக் காரணமே இராது. ஆகவே, அவை கேரள ராஜ்யத்திலேயே இருக்க வேண்டும். “தேவிகுளம், பீருமேடு தாலுக்காக்களில் தோட்டத் தொழிலே அதிகம். இந்தத் தாலுக்காக்களில் சதேச மக்கள் (நிலையான குடிகள்) கிடையாது. தோட்டக் காடுகளை ஒரு வாரத்திற்கு மூடினால்கூட இந்தப் பிரதேசத்தில் 110க்கு ஒருவர் கூடத் தங்கியிருக்கமாட்டார்கள். பீருமேடு தாலுக்காவில் தமிழ் பேசுகிறவர்களும் மலையாளம் பேசுகிறர்களும் சரி சமமான எண்ணிக்கையில் இருப்பார்கள். தேவி குளமும், பீருமேடும்தான் எதிர்கால கேரள ராஜ்யத்திற்கு மலைவாசப் பகுதிகளை அளிக்க வல்லன. ராஜ்யத்தின் எல்லா முக்கிய (நதிகளும் நீர்ப்பாசனத்திற்கும் மின்சார சப்ளைக்கும் பயன் படுவன) இவ்விரு தாலுக்காக்களில்தான் உற்பத்தியாகின்றன. இவற்றில்தான் இந்த ராஜ்ய ஹைடிரோ மின்சார அலுவலகமும் பவர் ஸ்டேஷன்களும் இருக்கின்றன. “தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம் விளவங்கோடு ஆகிய 4 தமிழ்த் தாலுக்காக்களும் மிகுந்த செல்வமும் பொருந்திய பிரதேசங்களாதலால், அவை கேரள ராஜ்யத்திற்குத் தேவைப் படுகின்றன. இவை சிறந்த மீன் பிடிக்கும் இடங்களைக் கொண்டிருக்கின்றன.
இங்கே முக்கியமான உலோகங்ளும் ஏராளமான நெல் வயல்களும் உள்ளன.” ஆம்; கேரள காங்கிரஸ்காரர்கள் தமிழகத்திலிருந்து கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தி லுள்ள கூடலூர், உதகமண்டலம் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து ஐக்கிய கேரளத்துடன் இணைக்க வேண்டுமென்று விண்ணப் பித்தனர். திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள 9 தமிழ்த் தாலுக்காக் களையும் ஐக்கிய கேரளத்திற்கே உரிமையாக்கிவிட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பு வெறியே வெளிப்படுத்தியவர்கள் யாரோ அல்லர்; காங்கிரஸ் காரர்களே! சுருங்கச் சொல்வதானால், “மலையாள மொழி வழங்கும் பகுதிகளெல்லாம்-ஒரு அங்குலம் விடாமல்-மலையாளி ளுக்கே! இதுமொழி அடிப்படையில்! இத்துடன், மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டின் எல்லையிலுள்ள தமிழ்த் தாலுக்காக்களும் மலையாளிகளுக்கே! இது தேவையின் அடிப்படையில்!”-என்பதே கேளர காங்கிரஸ்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. இப்படிக் கேட்குமளவுக்கு அவர்கள் துணிவு பெறக் காரணம், பஸல் அலி கமிஷனில் மலையாளியான சர்தார் கே. எம். பணிக்கர் அங்கம் வகித்த தாகும். மலையாளி எங்ககிருந்தாலும் மலையாளிதானே!
எங்கெங்கும் மலையாளிகளே!:
பஸல் அலி கமிஷன் தென்னிந்தியா வந்து விசாரணை நடத்தியபோத, மலையாளிகளின் மனப்போக்கு எப்படி இருந்த தென்பதற்கு அறிஞரொருவரின் பேச்சு சான்று பகரும். “இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. “சர்தார் பணிக்கர் கூறுவது பிரதமர் நேருவுக்கு வேத வாக்காகும். பணிக்கரம், அவர் கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் முடிவாகின்றன. “சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதி காரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி! “பிரதமர் நேருவின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமுலாக்குபவர் ஒரு மலையாளி. “பீகிங்கிலும் மோஸ்கோவிலும் வாஷிங்டனிலும் இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்ப வர்கள் மலையாளிகளே! “இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே! “நேருஜியின் அந்தரங்கச் செயலாளருமி ஒரு மலையாளிதானே!” (‘தினமலர்’, 15.9.59 இதழில் வெளியானது) இப்படிப் பேசியவர், திரு-கொச்சி ராஜ்யப் பிரமுகரும பிரபல வழக்கறிஞருமான மள்ளூர் திரு. கோவிந்தப் பிள்ளை என்ற மலையாளியாவார். கொல்ல கொளத்தூர் என்ற ஊரிலே கூடிய நாயர் சமுதாய சங்கக் கூட்டத்தில்தான் அவர் இப்படிப் பேசினார். அந்தச் சமயத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் களில் ஒருவர் மலையாளியாக இருந்தார். இந்தியப் பாராளு மன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும் மலையாளி தான்! இவர்களைச் சொல்ல மள்ளூர் கோவிந்தப் பிள்ளை மறந்துவிட்டார். இந்தப் பின்னணி பலத்தால்தான் கேரள காங்கிரஸ் காரர்கள் ‘ஐக்கிய கேரளம்’ என்ற பெயரில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு-‘ஆதிக்கக் கேரளம்’ படைத்துவிட முடியுமென்று நம்பினர்.

#தட்சிணப்பிரதேசம்
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-07-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...