Tuesday, December 10, 2019

இலங்கை இலங்கையில்.... இனி என்ன?

*#இலங்கையில்_இனி_என்ன?* 
என்ற தலைப்பில் இன்றைய தினமணியில் (10.12.2019) என்னுடைய பத்தி வெளிவந்துள்ளது.
கோத்தபய பொறுப்பேற்றவுடன் தமிழர்களுக்கு அவர் என்னசெய்யவேண்டும் என்பது குறித்து அந்தப் பத்தியில் விரிவாக உள்ளது. பழைய மாதிரி எதிர்வினை ஆற்றாமல் இருப்பதே ஆரோக்கியமான அரசியல் ஆகும். 
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
10.12.2019

#இலங்கை இலங்கையில்.... இனி என்ன?
-------------------------------------
-வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
 
இலங்கை அதிபராக கோத்தபயே ராஜபக்சே 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று 8வது அதிபராக பதவியேற்றபின் இந்தியாவிற்கு வந்து திரும்பியுள்ளார். இலங்கையில் இரண்டு கோடிக்கு மேல் உள்ள மக்கள் தொகையில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டு 69,24,255 வாக்குகள் பெற்று சஜீத் பிரேமதாசாவை தோற்கடித்து கோத்தபயே வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மை சிங்களர்கள் தென் இலங்கையில் இவரை ஆதரித்தனர். இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் முழுமையான ஆதரவு கோத்தபயேவிற்கு இருந்தது. தமிழர்களின் பகுதியான யாழ்ப்பாணம், வவுனியா, திரிகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, நுரேலியா பகுதிகளில் 4,52,842 வாக்குகள் தான் சஜீத்துக்கு கிடைத்தது. தமிழர்களுடைய ஆதரவு இருந்தும் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த தேர்தலில் நண்பர் சிவாஜிலிங்கமும் டெலோவின் ஆதரவில் களத்தில் இருந்தார். ஆனால், அவருக்கோ 0.09% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இஸ்லாமிய மக்களின் சார்பில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவுக்கு 0.29% வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதற்கு முந்தைய தேர்தல்களில் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தான் பிரேமதாசா, சந்திரிகா, ரணில், ராஜபக்சே, மைத்ரி போன்றோர்கள் வெற்றி பெற்றனர். கடந்த காலங்களில் தமிழர்களுடைய வாக்குகள் தான் நிர்ணயித்தது. ஆனால் சமீபத்திய தேர்தல் எதிர்மறை மாற்றங்களாக ஆகிவிட்டன.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் மூலமாக தமிழர்களுடைய நலன் எப்படியிருக்கும் என்று சில அச்சங்களும், ஐயங்களும் நமக்கு ஏற்படுகிறது. கோத்தபயே தமிழர்கள், முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். கொழும்பு நகருக்கு வெளியில் அனுராதபுரத்தில் நடந்த தனது பதவியேற்பை கோத்தபயே ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாக வெளிப்படுத்தினார். எப்படியெனில் ராஜராஜனின் வழிவந்த தமிழ் மன்னன் எல்லாளனை சிங்கள மன்னன் துட்டகம்மன் தோற்கடித்த நிகழ்வை மனதில் கொண்டு தான் வேண்டுமென்று அங்கே தன்னுடைய முதல் அரசு நிகழ்வாக நடத்தினார்.
மேலும் வெற்றி பெற்றவுடன் தமிழர் பகுதியில் பீதியைக் கிளப்பக்கூடிய வகையில் இராணுவம், காவல் துறையின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி தமிழர்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பதை கவனிக்க வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இந்தியா மட்டுமல்லாமல், உலக சமுதாயமும் இந்த விடயங்களில் தங்களுடைய ஆதரவையும், குரலையும் எழுப்ப வேண்டும்.
ஈழத் தமிழர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கீழ்க்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா?
1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.
2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
4. இறுதிப் போர் 2009ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
5. மேலும் அங்குள்ள 90,000 தமிழ் விதவைகள் நிலைமையைக் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
6. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
7. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.
தமிழர்களின் வாக்குகளைப் பெற கடந்த காலங்களில் சிங்களர்கள் பிரபாகரனையும், சம்மந்தனையும் யாழ்ப்பாணம் வரை வந்து சந்தித்து கையை, காலைப் பிடித்து பல உறுதிமொழிகளைக் கொடுத்து நம்பவைத்து எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.
தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழர்களுடைய நலன் காக்க சிங்கள அரசுகள் இப்படி பல உறுதிமொழிகளை கொடுத்தும், ஒப்பந்தங்களை கையெழுத்திட்டும், ஒன்றுமே நடக்காமல் அவை குப்பைக் கூடைக்கு தான் சென்றன. இந்நிலையில் இந்தியாவிற்கு வந்த கோத்தபயே பிரதமர் மோடியை சந்தித்தபின், இந்தியா இலங்கைக்கு கடனாக 450 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இதில் 400 மில்லியன் டாலர் இலங்கையின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கும், 50 மில்லியன் டாலர் இலங்கையின் பாதுகாப்பு என்ற பெயரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இப்போது இலங்கையில் எங்கே பயங்கரவாதம் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், வடக்கு – கிழக்கு மாநிலங்களில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கும், 2009 இறுதிப் போர் முடிந்தவுடன் 46,000 வீடுகள் தமிழர்களுக்கு கட்டப்படும் என்ற அப்போது அறிவிக்கப்பட்டாலும் 14,000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என்ற நிலை. கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வீடுகட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து கொண்டு வருகிறது. இதுவரை இருந்த சிங்கள அரசுகளுக்கு இந்த திட்டத்தில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை.
இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாக அமைய வேண்டும். இலங்கையின் தான்தோன்றித்தனத்தால் இந்து மகா சமுத்திரத்தில் சீனா, டீகோகார்சியா தீவில் அமெரிக்கா, திரிகோணமலை அருகே ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியப் பெருங்கடலின் மேற்குப்புறத்தில் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதிக்கங்கள் உள்ளது இந்தியாவிற்கு நல்லதல்ல. புவியரசியலில் சீனா தனது வியாபாரத்தை ஆப்பிரிக கென்யா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருக்கிக் கொள்ள பட்டுவழிச் சாலையை இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் உதவியால் அத்துமீறி பயன்படுத்திக் கொண்டது. அதேபோல, அம்பன்தோட்டா துறைமுகத்தை ராஜபக்சே சீனாவிற்கு அனுமதி கொடுத்தார். ரனில் விக்ரமசிங்கே கடன்பெற்று 99 ஆண்டுகள் சீனாவிற்கு குத்தகைக்கு விட்டுவிட்டார். இத்தகைய நிலை இந்தியாவின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல. அம்பன்தோட்டா துறைமுகத்தின் 99 ஆண்டுகால குத்தகையை மறுபரிசீலனை செய்வோம் என்று சிங்கள அரசு, கோத்தபயே டெல்லி வந்தபோது அறிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் முக்கியத்துவம் இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் மாற்றம் செய்வோம் என்றும் கூறியதாக தகவல்கள். அதேபோல, திரிகோணமலை கேந்திரப் பகுதி தொடர்பாக முக்கியமான சிக்கலான விடயங்களும் உள்ளன. அங்கும் குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்த காய்களை நகர்த்துகின்றது. இந்தியாவும் திரிகோணமலை பகுதியை சில வியாபாரத் தொழில் முனைப்புக்காக கவனத்தை செலுத்துகின்றது. நீண்டநாட்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையத்தை செயல்பட இந்தியாவிற்கு அனுமதியை இலங்கை அரசு வழங்கியது. சம்பூர் மின் உற்பத்தி ஒப்பந்தத்தையும் கிடப்பில் போட்டு இந்தியாவிற்கு பதில் சொல்லாமலேயே மௌம் காக்கிறது இலங்கை. கொழும்பு – யாழ்ப்பாணம் வரை இரயில்வே பாதையை இந்தியா சீரமைத்து தந்துள்ளது. இதுவேறு வழியில்லாமல் கடந்த காலத்தில் மைத்ரிபால சிறிசேனே அனுமதியை வழங்கினார்.
இலங்கை இறுதிப் போரின் பின்பு, இந்தியா வழங்கிய நிதி சரியாக தமிழர்களுக்கு சென்றடையவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் இந்தியா வழங்கிய நிதியில் ராஜபக்சே காலத்தில் அவருடைய தொகுதியின் அருகே காலியில் சிங்களப் பகுதியில் பெரிய ரயில்வே நிலையம் கட்டப்பட்டு அன்றைக்கு இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா திறந்து வைத்தார் என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது? தமிழர்களின் நலனுக்காக இந்தியா வழங்கிய நிதியை சிங்களர்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற கேள்வியைக் கூட இந்திய அரசு இலங்கையிடம் எழுப்பவில்லையே?
தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று இருநாட்டு அதிபர்கள் சந்திப்பின்போது, முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதற்கு இலங்கை கட்டுப்பட்டு இந்திய மீனவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கக்கூடிய வகையில் என்ன செயல்திட்டங்கள் வைத்துள்ளன என்பதும் தெரியவில்லை.
இப்படியான நிலையில் இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர், முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்களின் அழிவுக்கு காரணமான கோத்தபயே ராஜபக்சே அதிபர். பார்ப்போம்.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான நிலையை கண்காணிப்பது இந்தியாவின் கடமை என்பதை தொப்புள் கொடி உறவு மட்டுமல்லாமல், புவியரசியல் நிலையிலும், பன்னாட்டு அரசியல் ராஜதந்திர நிலையிலும் இதயசுத்தியோடு உணர வேண்டும்.

#ஈழத்தமிழர்
#ksrposts
#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...