Friday, December 27, 2019

திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை
#கோதைமொழி 10.மார்கழி 

" *நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்* "

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் = அம்மாடி, நோன்பு நோற்றுச் சுவர்க்கம் போறவளே!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற = நோன்பு நோற்றால் தேவலோகம்/ சொர்க்கலோகம் கிடைக்கும்! 
"சுவர்க்கம்" என்று இந்திரலோகத்தைச் சொல்லவில்லை ஆண்டாள்! 
* சுவர்க்கம் > இந்திரலோகம்!
யாருக்கு வேணும் அந்த இந்திரலோகம்? இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!

* சுவர்க்கம் = சு+வர்க்கம்!!
நல்ல வர்க்கம்! நல்ல குலம்!
குலம் தரும், செல்வம் தந்திடும் = அடியார் குலம்! அதுவே சு+வர்க்கம்!

வைகுந்தம் என்னும் கைங்கர்ய சாம்ராஜ்ஜியம்! அதுவே நம்-அவன் வீடு! அதுவே சு+வர்க்கம்! அதைத் தான் கோதை குறிக்கிறாள்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? = ஒருத்தர் குரல் கொடுத்தா, நாமளும் பதில் குரல் கொடுக்கணும்! நாங்க உன்னைக் கூப்புடறோம்? நீ வாசக் கதவைத் தான் திறக்கலை! மாற்றமும் தர மாட்டியா? மாற்று பதில் கூடவா கொடுக்க மாட்டே? - என்று கேட்கிறாள் கோதை!

நாற்றத் துழாய் முடி நாராயணன்! 
துழாய் = தமிழுக்கே உரிய ழகரம் துலங்கும் துழாய் = தமிழ்க் கடவுளான மாயோனுக்கு பிடித்தமான மலர். 
 
திருப்பாற்கடலிலே தோன்றியது துளசி! மகாலக்ஷ்மிக்கும் முன்னால்!

நம்மால் போற்ற, பறை தரும் புண்ணியனால் = நாம் அவனைப் பாட, நமக்கு அவன் பறை தருவான்! என்ன பறை? மோட்சப் பாதைக்கு வேண்டிய உபகரணங்கள் (பறை) = சிந்தனை, சொல், செயல்! அதை நமக்குத் தருவான்! தயார் படுத்துவான்!

பண்டு ஒரு நாள், கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் = அன்னிக்கி ஒரு நாள், எமன் வாயில் விழுந்து மாண்டு போனானே! கும்பகர்ணன்!

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? = அவன் தோற்றுப் போய், தன் தூக்கத்தை உனக்குக் கொடுத்திட்டுப் போயிட்டானோ? 
ஆற்ற+அனந்தல் உடையாய் = ஆற்ற(செயல்) = கர்மச் செருக்கு! அனந்தல் = ஞானச் செருக்கு!

அருங்கலமே = தயாபாத்திரமே! தாயார்-பெருமாளின் கருணைக்கு உரிய பாத்திரமே!
(ஆற்ற+அனந்தல்) செருக்கு தந்த சுகத்தில், சுகமாத் தூங்குபவளே! போதும்! புரிஞ்சிக்கோ! விழிச்சிக்கோ!

தேற்றமாய் வந்து திற = தேற்றமாய் வா! வேகமாய் வா! வந்து கதவைத் திற! தேற்றம் = வேகம்/தேறுதல்! நீ தேறணும்-ன்னா தேற்றமாய் வா!
(ஆற்ற+அனந்தல்) மேல் உள்ள பிடிமானத்தை/செருக்கை விட்டுட்டுத் தேற்றமா வா!

ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...