Sunday, January 24, 2021


——————-
“கீசுகீ சென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்!”
பதவுரை
ஆனைச்சாத்தான் - வலியங் குருவிகள்,
கலந்து - ஒன்றோடொன்று கூடி,
கீசு கீசு என்று - கீசு கீசு என்கிற வார்த்தைகளை,
எங்கும் - எல்லாவிடங்களிலும்,
பேசின - பேசின,
பேச்சின் அரவம் - பேச்சின் சப்தத்தை,
கேட்டிலையோ - நீ கேட்கவில்லையோ?
பேய் பெண்ணே - பேய் போல் அறிவில்லாத பெண்ணே,
வாசம்நறு - கந்தத்தால் பரிமளம் வீசுகிற,
குழல் - மயிர் முடியையுடைய,
ஆய்ச்சியர் - இடைச்சிகள்,
காசும் - அச்சுத்தாலியும்,
பிறப்பும் - ஆமைத்தாலியும் கைவளைகளும்,
கலகலப்ப - கலகல என்று சப்திக்கும்படி கைபேர்த்து கைகளை அழுத்தி,
மத்தினால் - மத்தால்,
ஓசைப்படுத்த - ஓசைப்படுத்த,
தயிர் அரவம் - தயிர் கடைகிற சப்தம்,
கேட்டிலையோ - உன் காதில் படவில்லையோ,
நாயகப்பெண்பிள்ளாய்- பெண்களுக்கெல்லாம் தலைமையானவளே,
நாராயணன் மூர்த்தி - நாராயணனுடைய அவதாரமாயும்,
மூர்த்தி - ஸ்வாமியாயும்,
கேசவனை - கேசிஸம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனை,
பாடவும் - நாங்கள் பாடவும்,
நீ கேட்டே - நீ கேட்டுக் கொண்டே,
கிடத்தியோ - தூங்குகிறாயோ,
தேசமுடையாய் - தேஜஸ்ஸு உள்ளவனே,
திற - கதவைத் திற
ஏல் ஓர் - எம்பாவாய்
......................................................
”பேய் போல உறங்கும் பெண்ணே...!
ஆனைச்சாத்தான் என்ற பறவை, பொழுது புலர்ந்ததைக் குறிக்கும் வகையில், ’கீசு கீசு’ என்று ஒலி எழுப்புவது உனது காதுகளில் விழவில்லையா.....?
ஆயர்பாடிப் பெண்கள் அணிந்துள்ள தாலிக்காசின் ஓசையுடன் சேர்த்து, மத்தினால் தயிரைக் கடையும் ஓசையும் உனக்கு கேட்கவில்லையா...?
நாங்கள் அனைவரும் சேர்ந்து நாராயணனை, கேசவனைப் புகழ்ந்து பாடுகின்றோமே...? ஆயர்குலப் பெண்களின் தலைவியான நீ, இவற்றைக் கேட்டும் படுக்கையை விட்டு இன்னும் எழாமல் இருக்கிறாயே....
ஒளிபொருந்திய பெண்ணே.... வந்து கதவைத் திறப்பாயாக...”
என்று உறங்கும் ஆயர்குலத் தலைவியை எழுப்புகிறான் கோதை.,...!
...........................

ஆறாம் பாட்டில் புதியவள் ஒருத்தியை எழுப்புவதைச் சொன்ன நாச்சியார் இப்பாடலில் பழையவளாயிருந்தும் புதியவள் போல் தன்னைப் பாவித்துக் கொள்ளும் ஒருத்தியை எழுப்பும் செயலைக் குறிப்பிடுகின்றார்.
இவளிடத்திலும் ‘பொழுது விடிந்துவிட்டது. எழுந்திராய்’ என்கிறார்கள் புறத்து நிற்கும் பெண்கள். ‘ஓகோ..... அப்படியாயின் அதற்கு அடையாளம் யாது?’ என்கிறாள் அவள்.
‘கீசு கீசு’ என்று ஆனைச்சாத்தான் பறவை ஓசை செய்கின்றது. அதுவே அடையாளம் என்று இவர்கள் செப்புகின்றார்கள். ‘ஒரு பறவை குரல் கொடுத்தால் விடியலாகி விடுமோ? என்று சலித்துக் கொள்கிறாள் உள்ளிருப்பவள். ‘ஒன்றல்ல எங்கும் ஆனைச்சாத்தான் பறவைகள் பேசுகின்றனவே’ என்று விளக்கம் தருகிறார்கள் இவர்கள்.
‘அப்பறவைகளை நீங்கள்தான் கலைத்து விட்டிருப்பீர்கள்’ என்று அவள் குற்றம் சாட்டுகின்றாள். ‘நாங்கள் கலைக்கவில்லையடி அம்மா! அவைகளே ஒன்றுடன் ஒன்று கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ’ என்று கோபத்தோடு மறித்தார்கள். அப்படி மறிக்குங்கால் உள்ளே இருப்பவளை ஆதங்கத்தால் ‘பேய்ப் பெண்ணே’ என்று கடிந்து கொள்கிறார்கள். செல்லமாகக் கோபித்துக் கொள்கிறார்கள்.
அதனைப் பொருட்படுத்தாத அவளோ, ‘விடிந்து போயினமைக்கு மற்ற அடையாளங்கள் உண்டோ?’ என்று கேட்டு வைக்கிறாள் அதற்கு விடையளிக்கும் முகமாக,
‘காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?’
காசும் பிறப்புமாகிய அச்சுத்தாலியும், ஆமைத்தாலியுமாகிற ஆபரணங்களின் ஓசையெழ ஆய்ச்சியர் தயிர் கடைகிறார்களாம். அப்படிக் கடையும்போது கை பெயர்க்கக் கையும் சோர்கிறதாம். தயிரின் பெருகிய வளமும், கண்ணனை அடையாத நினைவும் சேரக் கைபெயர்ப்பது மந்திரகிரியைக் கொண்டு பாற்கடல் கடைந்தாற் போலே மலைபெயர்கிற காரியமாய்த் தெரிகின்றதாம். அப்படி அசைந்தசைது தயிர் கடையும் வேளையில் கட்டிய கூந்தலும் கலைந்து அசைகிறதாம். அதனாலே கூந்தல் நெகிழ்ந்து வாசனையும் அசைந்தசைந்து வருகின்றதாம். இந்த அழகையெல்லாம் தெவிட்டால் இன்றி தெரிவிக்கும் ஆழ்வாரின் திருமகள் ‘ஆபரணங்கள் அசையும் ஒலியும், தயிர் கடையும் ஒலியும், கூந்தலின் பரிமள வாசனையும் உன்னை எட்டவில்லையோ?’ என்று கேட்பதாகக் கூறுகின்றார்.
அப்படியும் அசைந்து கொடுக்காத அப்பெண், ‘ஓ..... கண்ணன் பிறந்த பிறகு ஆயர்பாடியில் தயிருக்கும் வெண்ணெய்க்கும் பஞ்சம்தான் ஏது? எவ்வேளையும் தயிர் கடையக் கூடுமே’ என்று பதில் பேசாது கிடந்தாள்.
பேய்ப் பெண்ணே என்று முன்பு கடிந்தோம். இப்போது நல்வார்த்தை கூறியழைப்போம் என்று ‘நாயகப் பெண் பிள்ளாய்’ என்று அழைத்தார்கள். ‘எங்களுக்கெல்லாம் தலைவி நீயன்றோ’ என்று கொண்டாடினார்கள். அப்போதும் அவள் மறுமொழி கூறவில்லை.
அதனால் கண்ணனின் மெச்சத்தகு புகழை உச்சிமேல் வைத்து வியந்து ஓதினார்கள். ‘நாராயணனாகிய பர வாசுதேவ மூர்த்தியை, கேசி என்ற அசுரனை மாய்த்த கேசவனை வாயாராப் பாடுகின்றோம். அப்போதும் நீ கேட்டே கிடத்தியோ; என நொந்து போகின்றார்கள். அவளோ அந்த அவதார மகிமைகளைக் கேட்டு சொக்கிக் கிடக்கின்றாள்.
‘நியாயமல்லடி பெண்ணே இது - கரனை அழித்தது கண்டதும் இராமனைப் புல்கியணைத்த பிராட்டி போலே - அவன் கேசியை அழித்த திறம் ‘கேட்டதும் நீ கண்ணனை ஓடி அரவணைக்க எண்ணம் கொள்ளவில்லையே’ என்று வருந்துகின்றார்கள். உறங்குவதாய் நடிக்கின்றவளோ ஒளிமிகுந்த எழில்மிக்கவள். உன் ஒளியால் எங்களைச் சூழ்ந்த அந்தகாரமும் பட்டொழிய வாசல் திறவாய் என்னை வேண்டி,
’தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்’ என்று மன்றாடுகின்றார்கள்.
சில சொல்லிப் பல சிந்திக்குமாறு இந்த சித்திரத் திருப்பாவை, செவிக்கும் சிந்தைக்கும் அமுதமாகின்றது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-12-2020.

No comments:

Post a Comment

2023-2024