Sunday, February 5, 2023

வாணி ஜெயராம்..

வெகு காலத்திற்கு முந்தைய சம்பவம் இது...
அதி காலையிலே வாலி மயிலாப்பூரில் கச்சேரி சாலையை ஒட்டிய ஒரு வீதியில் ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்திருப்பார்.
காலை 09:00 மணியளவில் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வருவார்..
வாலியை பார்த்ததும் புன்னகையோடு வாய்யா வாலி! என்று அன்போடு அழைத்து தன்னுடைய டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு போவார்.
பனகல் பூங்கா அருகில் வாலியை இறக்கி விட்டு இரண்டோ ஐந்தோ ரூபாயை கொடுத்து விட்டு போவார்.

நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே..வெகு காலத்திற்கு முந்தைய சம்பவம் என்று.இரண்டு,ஐந்து ரூபாய் தான்..
ஆனால் நிறைந்த மதிப்பு ரூபாய்க்கு இருந்த காலம் அது..
அப்படி வாலி திண்ணையில் ஜி.கே.வெங்கடேஷைத எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் தருணங்களில் பாவாடை தாவணி அணிந்த ஒரு பெண் பால்,காய்கறி என்று ஏதாவது வாங்கி கொண்டு போவதை பார்த்திருக்கிறார்.

தான் மிக பிரபலமான கவிஞர் ஆவோம் என்றும் அந்த பெண் பாடுவதற்கு தான் சில அருமையான பாடல்களை இயற்றுவோம் என்றும் எண்ணியதில்லை என்று வாலி எழுதியிருந்தார் புதிய பார்வை இதழில்..
அந்த பெண் வாணி ஜெயராம்..

 பெண் குரலில் பாடல்கள் என்றால் என் காது கேட்காது..
ஆண் குரல் பாடல்கள் மட்டுமே எனக்கு சங்கீதம்,சாகித்யம் எல்லாம்..
14 -15 வயதில் நான் கேட்ட ஒரு பாடல் தான் எனக்கு பெண் குரல் மீது ஒரு மயக்கத்தை உண்டு பண்ணியது..
அந்த பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

மாலையில் ஏழு மணி அளவில் இருந்தே மணமான பெண்கள் எல்லாம் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ! என்று தலை நிறையமணக்கும் மல்லிகையும் மயக்கும் புன்னகையுமாக இருப்பார்கள்.
வாணி ஜெயராம் அவர்கள் செய்த ரசவாதம் தான் இது..
தாம்பத்யம் அவ்வளவு இனிமையாக இருந்தது இந்த ஒரே பாடலால்.
சத்தியம் இது.
உயர்வு நவிற்சி ஏதும் இல்லை.

மேகமே மேகமே பால்நிலா தேயுதே!
இந்த பாடல் ஒலித்த தருணங்கள் எல்லாம் மனம் துயரில் ஆழ்ந்து போகும்..
இப்போதும் துயரில் ஆழ்ந்து தான் கிடக்கிறது மனம்..

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு..
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று..
பூமியில் உங்களுக்கான கடமைகள் இன்னும் தீர வில்லையே!



அறிவிக்கப்பட்ட விருதை கூட இன்னும் நீங்கள் வாங்க வில்லையே..
உங்களுக்காக அழவில்லை.
எனக்காக அழுகிறேன்..

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...