Monday, September 1, 2014

மீண்டும் நாளந்தா!

வரலாற்றில் கீர்த்தி பெற்ற நாளந்தா பல்கலைக் கழகம், நூற்றாண்டுகளுக்குப் பின் இன்று (01.09.2014) மீண்டும் உதயமாகிறது. இதுகுறித்து தினமணியில் 23.11.2010 அன்று வெளியிடப்பட்ட என் கட்டுரை தங்களின் பார்வைக்கு.

                                                                                                  - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்






                                                    
  மீண்டும் நாளந்தா!

இந்தியத் திருநாட்டின் பெருமைகளை பண்டித நேருவின் ‘நான் கண்ட இந்தியா’வில் பார்க்கலாம். மனித நாகரிகங்கள் வளர்ந்த தொட்டில் இந்தியா. மனித குலம் தமிழ் மண்ணில் தோன்றியது. பல்வேறு தேசிய இனங்கள், பல கலாசாரங்கள் கொண்ட தொகுப்பே இந்தியா. இவ்வாறான கலாச்சாரமிக்க இந்தியாவில் ஆதியில் பல கலாசாலைகள் இருந்தன. நாளந்தா, காஞ்சி, தட்சசீலம், நாகார்ஜுனா, உஜ்ஜயினி என்று நீண்ட பட்டியலிடலாம்.

இன்றைக்கு மேலை நாடுகளின் முன்னேற்றம், நாகரிகம், அங்குள்ள வாய்ப்புகள் குறித்து பல உயர்வான எண்ணங்கள் இருந்தாலும், நாளந்தா செயல்பாட்டில் இருந்த (கி.மு.415) காலத்தில் மேலை நாடுகளில் இம்மாதிரியான கலாசாலைகள் அங்கு இல்லை. கிரேக்க நகர் நிர்வாக அமைப்பு, ரோமானிய அரசு நிர்வாகம் போன்றவை யாவும் நாளந்தாவிற்கு பின்னால் ஏற்பட்டது. உலகத்திற்கு நாகரிகத்தை, கல்வியை வழிகாட்டிய பெருமை நமது மண்ணிற்கு உண்டு. இன்னும் வரலாற்றை திரும்பி பார்த்தால் நாளந்தாவிற்கு முந்தையது நமது தமிழனின் சங்க காலம்; காஞ்சியிலும் நாளந்தா மாதிரி புத்த அமைப்புகள் அமைத்த கல்விக் கூடங்கள் இருந்தன என்ற பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு.
1193ஆம் ஆண்டு கீர்த்திப் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகம், துருக்கியைச் சேர்ந்த மன்னர் பக்தியார் கில்ஜியால் சீரழிக்கப்பட்டது. கல்வியின் கலங்கரை விளக்கமாக அன்று விளங்கிய நாளந்தா பாடலிபுத்திரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்த புகழ்மிக்க கல்வி கூடம் உலகத்திற்கே முதன் முதலில் போதனை செய்தது. நாளந்தா என்றால் ‘குறைவற்ற கொடை’ என்று பொருளாகும். நாளந்தா அமைந்த மாமரத் தோப்பில் 1 கி.மீ. அளவிற்கு அகழ்வாய்வு நடந்தது. அப்போது மொகஞ்சதாரா, ஹரப்பா போன்று, நாளந்தாவிலும் கட்டடச் சுவர்கள் தென்பட்டன. சுட்ட செங்கற்களால் நேர்த்தியாக கட்டப்பட்டு, டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் போல் செங்கல் வண்ணத்தோடு வரலாற்று சாட்சியங்களாக இன்றும் எழுந்து நிற்கின்றன.
நாளந்தாவை குப்த மன்னர்களும், மௌரிய அரசர்களும் கட்டினர். கி.மு.415 - 455 இருந்த மன்னர் சக்ரதித்யா என்ற குமர குப்தா இதற்கான கட்டுமானப் பணிகளைத் துவக்கினார். செங்கல், சுண்ணாம்பு, வெல்லம், வில்வம், உளுந்து ஆகியவற்றைக் கொண்டு வான் உயரக் கட்டடங்கள் இங்கே அப்போது எழுப்பப்பட்டது. இந்தப் பல்களைக் கழகத்தைச் சுற்றி மதில் சுவர்களும், நான்கு நுழைவு வாயில்களும் அமைந்திருந்தன. அங்குள்ள காவலர்கள் அனுமதித்தால் தான் உள்ளே செல்ல முடியும்.

தனித்தனியாக 10 வளாகங்கள், 10 கோவில்கள், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகள், கருத்தரங்க அரங்குகள், தியான மண்டபங்கள் என்ற இவை யாவும் செங்கற்களால் கட்டப்பட்டவை. வகுப்பறைக்கு பேராசிரியர்கள் வந்து பாடம் நடத்த, இன்றைக்கு இருப்பதுபோல மேடைகள், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் அமரக்கூடிய காற்றோட்டமான வசதிகள், தருமத்தின் புதையல் என்று அழைக்கப்பட்ட ‘தர்மா கஞ்ச்’ என்ற 9 மாடி நூலகம் போன்றவை அமைந்திருந்தன. இந்த நூலகத்தை பக்தியார் கில்ஜி எரித்தபொழுது அங்கிருந்த உயிரோட்டமான ஓலைச் சுவடிகள் எரிந்து சாம்பலாகவே ஆறு மாதங்கள் ஆகின என்று வரலாறு கூறுகிறது. இந்த நூலகத்தில் பௌத்தம், இந்து மதம், வானிலை, அறிவியல், மருத்துவம், கணிதம், தர்க்கவியல், யோக சாஸ்திரம், வேதங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விதவிதமான ஓலைச் சுவடிகள் நிரம்ப இருந்தன.
மாணவர்கள் தங்க 11 விடுதிகளில், 11,500 அறைகள் அனைத்து வசதிகளோடு இருந்தன. அங்கு வசதியான குளியலறைகளும் இருந்தன. மாணவர்களுக்கு உணவு சுவையாக, சுத்தமாக, தாராளமாக வழங்கப்பட்டது. மொத்தம் 10,000 மாணவர்கள், 2,000 பேராசிரியர்கள் நாளந்தாவில் இருந்தனர். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு துருக்கி, கிரீஸ், இந்தோனேஷியா, சீனா, திபெத், ஜப்பான், கொரியா, பெர்சியா போன்ற வெளிநாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கி கல்வியை பயின்றனர். பல்கலைக் கழக மதிற்சுவரின் வெளியே பெரிய ஏரிகளும், பூங்காக்களும் இருந்தன. இங்கு வெறும் மானிடவியல் மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் பொது சுகாதாரம் போன்றவை பற்றிய கல்வியும், பயிற்சியும் மாணவர்களுக்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டது.

குறிப்பாக பௌத்த தத்துவங்களுக்கு கல்வி கேந்திரமாக திகழ்ந்தது. நாளந்தா சிதையுண்ட பின்பு பல காலம் கடந்துதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. அப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் இல்லை. இன்றைக்கு உலகளவில் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம், மொராக்காவில் உள்ள ஃபெஸ் நகரிலுள்ள அல் கரோயின் பல்கலைக் கழகமாகும். இது கி.பி.895இல் தான் துவக்கப்பட்டது. அதேபோல கெய்ரோவில் கி.பி.975இல் அல் அழர் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. இவ்விரண்டைவிட நாளந்தா பழமை வாய்ந்தது. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் நாளந்தாவின் பெருமைகளை தன்னுடைய பயணக் குறிப்பில் சிறப்பாக சொல்கிறார். நாளந்தாவின் கட்டிடங்கள், கோபுரங்கள், கோவில்கள், கலையரங்குகள் பற்றி தெளிவாக சொல்கின்றார். வானுயர கோபுரங்கள் பனிப்படலத்தைத் தொடுமளவிற்கு இருந்ததாக குறிப்பிடுகின்றார். பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ் இ சிரஜ், பக்தியார் கில்ஜியின் படையெடுப்பால் பல்கலைக் கழகம் மட்டும் எரியாமல், பல புத்த பிட்சுகள் எரிக்கப்பட்டும், ஆயிரகணக்கான பிட்சுகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டது என்று குறிப்பிடுகின்றார்.
நாளந்தா பல்கலைக் கழகம் புத்துயிர் பெற 90களிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சியால் 2006இல், உலக அளவில் ஆலோசனைக் குழு அமர்தியாசென் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் சிங்கப்பூர் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் யோ, வரலாற்று ஆய்வாளர் சுகதா போஸ், தேசாய் பிரபு, சீன அறிஞர் வாங் பான்வெய் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் குறித்த மசோதாவும் நிறைவேறியுள்ளது.

இப்பல்கலைக் கழகத்தை திரும்பவும் அமைக்க 500 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்திய - சிங்கப்பூர் அரசுகள் இப்பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு, யேல், பாரிஸ், பொலோனா போன்ற பல்கலைக் கழகங்கள் நாளந்தாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளன. உலகில் சிறந்த 25 பல்கலை கழகங்களில் ஆசியாவில் சிறப்பான பல்கலைக் கழகங்கள் டோக்கியோ, ஹாங்காங், கியோடோ ஆகும். இந்த வரிசையில் பழமையான நாளந்தா ஆசிய கண்டத்தின் முழுமைக்கும் ஏன் உலக அளவில் மேம்பாட்டிற்காள பணிகளை செய்யும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் எழுந்துள்ளது. பன்னாட்டு அளவில் அமையும் இப்பல்கலைக் கழகம் 250 கோடி கட்டுமானத்திற்கும், மற்ற செலவுகளுக்கு 250 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில், ராஜ்கீர் செல்லும் பில்கி மகதேவா என்ற பகுதியில் முட்புதராக இருந்த இடம், பல்கலைக் கழகம் அமைய கையகப்படுத்தப் பட்டுள்ளது.

பன்னாட்டுத் திட்டமாக அமையும் இப்பல்கலைக் கழகம் எதிர்காலத்தின் நம்பிக்கை. ஹான்ஸ் என்ற காட்டுமிராண்டிகள் ரோம் பேரரசை அழித்தது போன்று இந்தியாவின் அடையாளமாக திகழ்ந்த நாளந்தாவை அழித்தாலும் அதனுடைய தரவுகள் ஓரளவு நம்முடைய பெருமைகளை பேச செய்கின்றது. யுவான் சுவாங் குறிப்பிட்டவாறு அறிவுக் கோவிலாக மட்டுமல்லாமல் சகிப்புத் தன்மையுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து மனித நேய சந்திப்பாக இவ்வளாகம் இருந்தது. அமைக்கப்பட உள்ள பல்கலைக் கழகம் அம்மாதிரி அமைந்தால் எதிர்காலத்தில் யுவான் சுவாங்கின் கருத்து மெய்ப்படும். 800 ஆண்டுக்கு முற்பட்ட அறிவுச் சுரங்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இந்திய அறிவியல் வரலாற்றில் ஆர்ய பட்டரை மறக்க முடியாது. பூஜ்யத்தை நாம் கண்டுபிடித்தோம். பூஜ்யத்தின் அளவை நம்மிடமிருந்து அரேபியர்கள் எடுத்துச் சென்றாலும் வரலாற்றில் நாம்தான் நிற்கின்றோம். பி.பி.சி. தொலைக்காட்சியில் எபிக் ஹிஸ்ட்ரி தொடரில் மனித நாகரிகத்தின் வரலாற்று தொட்டில் இந்தியா. அங்கு தொடர்ச்சியாக நாகரிகங்கள் இருந்தன என்று குறிப்பிடுகின்றது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் யாவும் மதிக்கத்தக்க சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. நாளந்தாவை அழித்த பக்தியார் கில்ஜி பெயரில் உள்ள பக்தியார்பூரில் பிறந்தவர்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். எவ்வளவு உதவிகள், முயற்சிகள் இருந்தாலும் அடிப்படையில் பீகாரில் பொறுப்பில் உள்ளவர்கள்தான் இந்த பல்கலைக் கழகம் அமைக்க ஆர்வம் காட்ட வேண்டும். நிதிஷ்குமார் தனக்கே உரித்தான பாணியில் இதில் கவனம் செலுத்துகின்றார்.
பண்டித நேரு அலகாபாத் பட்டமளிப்பு விழவில் உரையாற்றியபோது, பல்கலைக் கழகம் என்றால் மனித நேயம், அறிவாற்றல், கருத்து உரிமை, புரிதல், உணர்தல், கண்டு கொள்ளுதல், பகுத்தறிதல், உண்மையைத் தேடல், சகிப்புத் தன்மை என்பதின் வெளிப்பாடு ஆகும். இந்த உயர்ந்த லட்சியத்தை நோக்கி நாளந்தா பயணிக்க வேண்டும். டாக்டர் அமர்தியா சென் குழுவினர் இதற்கான பணிகளில் இறங்கினாலும் இதை அமைக்க பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் நெருடல்; தர்மசாலாவில் 50 ஆண்டுகளாகத் தங்கி பணி செய்யும் தலாய் லாமா, சீனா வற்புறுத்தலால் இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலக அளவில் உள்ள ஒத்துழைப்பு இவற்றையெல்லாம் கடந்து நாளந்தா மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாளந்தா வரவேண்டும் என்பது அனைவரின் கனவாகும்.

- தினமணி, 23.11.2010


No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...