இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்த ஒரு ஆய்வை டில்லி, தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நடத்தியிருக்கிறது. சாதி, மத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இவர்களது பின்புலம் என்ன, கல்வித்தகுதி என்ன, நீதி மன்றத்தில் இவர்களது வழக்கு எப்படி நடத்தப்பட்டது, போலீசு இவர்களது வழக்கை எப்படி விசாரித்தது, அந்தக் கைதிகளுடைய சிறை வாழ்க்கை எப்படி இருக்கிறது – என்பன போன்ற பல்வேறு விசயங்களை இக்குழு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. ஜுலை 2013-ல் தொடங்கி ஜனவரி 2015 வரையிலான காலத்தில் நாடு முழுவதும் உள்ள தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது இந்தக் குழு.
இந்தியாவில் #மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் 385 பேரில் 61.6% பேர் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள். 23% பேர் பள்ளிக்கூட வாசலையே மிதிக்காதவர்கள். மொத்தத்தில் சுமார் 85% மரண தண்டனைக் கைதிகள் கல்வியறிவற்றவர்கள். 385 கைதிகளில் 241 பேர் இதற்குமுன் எந்தக் குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. இந்த கொலைக் குற்றம்தான் அவர்களது முதல் குற்றம். பதின் பருவத்தில் குற்றம் செய்தவர்களும் தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ளனர். தமது வயதை நிரூபிப்பதற்கு பல கைதிகளுக்கு பிறப்புச் சான்றிதழே இல்லை.
கைதிகளில் ஆகப்பெரும்பான்மையினரது குடும்பத்தினருக்கு கைது செய்யப்பட்ட விவரமே சொல்லப்படவில்லை. “ஒரு கையெழுத்து போட்டு விட்டு போய்விடலாம் என்று சொல்லி போலீசு கூப்பிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை விட்டு விட்டு வந்தேன். அப்புறம் நான் வீட்டையே பார்க்கவில்லை” என்று குழுவிடம் கதறி அழுதிருக்கிறார், அகிரா என்ற பெண். பெரும்பாலான கைதிகளின் கதை இப்படித்தான் இருக்கிறது என்று சொல்கிறது குழு.
போலீஸ் தங்களை சித்திரவதை செய்து வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டது என்றும், சோடிக்கப்பட்ட சாட்சிகள், தடயங்களின் அடிப்படையில்தான் தாங்கள் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் 82.6% கைதிகள் கூறியதாக இக்குழு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு கைதியும் தாங்கள் எத்தனை நாள் என்னென்ன வகையில் சித்திரவதை செய்யப்பட்டோம் என்று விவரித்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கின்ற அடிப்படை உரிமை. ஆனால், தாங்கள் விசாரித்த வகையில் 169 பேருக்கு வழக்கறிஞர் இல்லை. போலீஸ் விசாரணைக்கு இடையில் வழக்கறிஞரைப் பார்க்கும் உரிமை 97% பேருக்கு வழங்கப்படவில்லை. எனவே, சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அதை வெளியில் சொல்வதற்கான வாய்ப்பு கூட இல்லை.
தனக்காக வாதாடிய வழக்கறிஞரை நீதிமன்ற அறைக்கு வெளியே சந்தித்ததே இல்லை என்று 76.7% கைதிகள் கூறியிருக்கின்றனர். சுமார் 75% கைதிகள் விசாரணை நடைபெற்ற நாட்கள் பெரும்பாலானவற்றில் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படவே இல்லை. வழக்கின் விசாரணையில் என்ன நடக்கிறது என்பதே தங்களுக்குப் புரியவில்லை என்றும் நீதிபதியும் வக்கீல்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்து பார்க்க மட்டுமே தங்களால் முடிந்தது என்றும் பல கைதிகள் கூறியிருக்கின்றனர்.
அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கூறியிருந்த போதிலும், விசாரணை நீதிமன்றங்கள் கடந்த 15 ஆண்டுகளில் 1500 மரண தண்டனைகளை வழங்கியிருக்கின்றன. சித்திரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலம் என்பதில் தொடங்கி பலவிதமான முறைகேடுகள் நிரம்பிய போலீசின் விசாரணையை அப்படியே அங்கீகரித்துத்தான் இத்தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 95% மரண தண்டனை தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அரிதினும் அரிதான என்று சொல்லிக் கொண்டாலும், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.
நீதிமன்றம் குறிப்பாக உத்தரவிடாத வரையில் மரண தண்டனைக் கைதிகளை தனிமைச் சிறையில் வைக்க கூடாது என்பது சட்டம். இருந்த போதிலும் இந்தக் கைதிகள் தனிமைச் சிறையில்தான் வைக்கப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் வரை இந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
இறுதியாக, இந்தக் குழு கூறியிருக்கும் முக்கியமான விவரம் என்ன தெரியுமா? தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களில் 76% பேர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 74.1% பேர் மிகவும் ஏழைகள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்களில் 94% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆகியோரை எடுத்துக் கொண்டால் அவர்களில் 94% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – என்று கூறுகிறது இந்த அறிக்கை.
“மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு கொடிய குற்றத்தை செய்தவர்கள் என்ன சாதியாக இருந்தாலென்ன, என்ன மதமாக இருந்தாலென்ன, ஏழையாக இருந்தாலென்ன, பணக்காரனாக இருந்தாலென்ன, இதெல்லாம் கூடவா சாதி, மத பேதம் பார்ப்பது?” என்று சிலர் இதைக் கேட்டவுடன் கொதித்தெழுவார்கள். அந்த சிலரில் பலர், பாரதிய ஜனதாக் கட்சியினராகவோ, அல்லது கட்சியில் இல்லாத போதிலும், இயல்பாகவே அத்தகைய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினராகவோ இருப்பார்கள்.
தூக்கு தண்டனைக் கைதிகள் அனைவரும் குற்றமே செய்யாதவர்கள் என்பது நமது வாதமல்ல. அவர்கள் இத்தகைய குற்றங்களை இழைப்பதற்கான அரசியல், சமூகச் சூழலில் இருத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன், பலர் பொய்வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், சட்ட ரீதியாகத் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிக்கையிலுள்ள விவரங்கள் காட்டுகின்றன.
கேள்வியை இப்படி திருப்பிப் போடுவோம். பார்ப்பன – ‘உயர்’ சாதியினரும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும் தூக்கு தண்டனையில் சிக்காமலிருப்பது ஏன்? ஏனென்றால், அவர்கள் தமது சொந்தக் கைகளால் கொலை முதலான ‘கொடுஞ்செயல்களை’ செய்வதில்லை. போலீசுக்கோ கூலிப்படையினருக்கோ அத்தகைய பணிகளை ‘அவுட் சோர்ஸ்’ செய்து விட்டு, வெள்ளைக் காலர் குற்றங்களை மட்டும் தமக்கென ஒதுக்கிக் கொள்கிறார்கள்.
தூக்கு தண்டனைக் குற்றவாளிகளுடைய குற்றச் செயல்களுக்கு அவர்களுடைய கல்வியறிவின்மை ஒரு காரணமாக இருக்கிறது என்றால், வெள்ளைக் காலர் குற்றவாளிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு குற்றமிழைப்பதற்கு கல்வியறிவு முக்கியக் கருவியாகப் பயன்படுகிறது. ‘கீழ்சாதி’ கொலைக் குற்றவாளிகளைப் போல உணர்ச்சி வயப்பட்டு இவர்கள் குற்றமிழைப்பதில்லை. அறிவுபூர்வமாகவும் நிதானமாகவும் குற்றங்களைத் திட்டமிடுகிறார்கள்.
ஒரு வீட்டைக் கொள்ளையடிப்பது, ஒரு நபரை அல்லது குடும்பத்தைக் கொலை செய்வது என சிறிய இலக்குகளை இவர்கள் வைத்துக் கொள்வதில்லை. சீட்டுக் கம்பெனி மோசடி முதல் பங்குச் சந்தை மோசடி, ஆன் லைன் டிரேடிங் முதலான கலர் கலரான குற்றங்கள் மூலம் கோடிக்கணக்கானோரைக் கொள்ளையடித்து தற்கொலைக்குத் தள்ளுகிறார்கள்.
இவர்களைத் ‘தனிப்பட்ட’ ஆதாயத்துக்காக கொலை செய்யும் குற்றவாளிகளாகச் சட்டம் கருதுவதில்லை. அம்பானி, அதானி, எஸ்ஸார், டாடா போன்றவர்கள் தனிநபர்கள் அல்ல. அவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைவர்கள். கம்பெனி என்ற ‘பொது’ நிறுவனத்தை தனிநபராக கருத முடியாது என்பதால், அவர்களது செயல்கள் தனிநபர்களின் கிரிமினல் குற்றங்களாக கருதப்படுவதில்லை. மாறாக, இலாபமீட்டுதல் என்ற நியாயமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளாகவே சட்டத்தால் பார்க்கப்படுகின்றன. அதனால்தான் ஆயிரக்கணக்கான பேரைத் தற்கொலைக்குத் தள்ளும் நில ஆக்கிரமிப்பு முதல் சீட்டுக் கம்பெனி மோசடி வரையிலான குற்றங்களை ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற கடும் தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் கருதுவதில்லை.
வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்படாத நிலையிலும் மென்மையாகவே தண்டிக்கப்படுகின்றன. கொலை, கொள்ளை, வல்லுறவு போன்ற குற்றங்களைத் தூண்டுகின்ற விளம்பரங்கள், ஊடக காட்சிகள், சாதி மதவெறிப் பிரச்சாரங்கள் போன்றவை தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, கொலை, கொள்ளை, வல்லுறவு போன்ற குற்றங்களை இழைக்கின்ற தனி நபர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அதிலும்கூட உழைக்கும் வர்க்கத்தினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் சிறுபான்மை மதத்தினர் ஒரு தலைப்பட்சமாக தண்டிக்கப்படுகிறார்கள்.
நேரடி சாட்சியங்களே இல்லாத வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். குல்பர்க் சொசைட்டி படுகொலையின் சூத்திரதாரிகள் முதல் மேலவளவு கொலைகாரர்கள் வரை யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்பதை இவை காட்டுகின்றன. தனிநபர் குற்றங்கள் தண்டிக்கப்படுவதும், சமூக குற்றங்கள் அங்கீகரிக்கப்படுவதும், சட்டமே சமமாக இல்லை என்பதை விளக்குகின்றன. சட்டம் சமமாக இருக்க முடியும் என்று கருதுவது ஏமாளித்தனம் என்பதைத்தான் மரண தண்டனைக் குற்றவாளிகள் குறித்த இந்த ஆய்வு தெளிவு படுத்துகிறது.
No comments:
Post a Comment