Saturday, May 11, 2024

#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம்

#மாண்புமிகு  முதல்வர்  மு.க.ஸ்டாலின்         அவர்களுக்கு எனது கடிதம்
———————————————————-




கே. எஸ் . இராதா கிருஷ்ணன் 
முகாம் - குருஞ்சாக்குளம், கோவில்பட்டி.8-5-2024.






பெறுநர்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,
சென்னை.
—————-



மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

 வணக்கம்

 கோவில்பட்டி குருஞ்சாக்குளத்தைச் சேர்ந்த கே எஸ் இராதாகிருஷ்ணன் அப்பகுதி மக்கள் உடன் இணைந்து எழுதிக் கொள்வது…… 

 உங்களிடம் எனக்கு இத்தகைய அறிமுகம் தேவை இல்லை தான் என்றாலும் உங்கள் தந்தையார் தலைவர் கலைஞர் மற்றும் காமராஜர், இந்திரா காந்தி, நெடுமாறன்,எம்ஜிஆர், நாராயணசாமி நாயுடு, வேலுப்பிள்ளை பிராபாகரன் போன்றவர்களுடன், 52 வருட காலமாக  அரசியலில் இருந்தவன். இன்னும் இருந்து கொண்டிருப்பவன் என்கிற முறையில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எல்லாவற்றையும் விட இந்த கடிதம் எழுதும் நோக்கம் மிக 
முக்கியமானது. 

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, பழைய திருநெல்வேலி மாவட்டம் உள்ள குருஞ்சாக்குளம் என்கிற என் கிராமத்திலிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன். 

கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு என நீங்கள் எங்கள் கிராமங்களுக்கு வந்துள்ளீர்கள்.

சமீபகாலமாக எங்கள் பகுதிகளில் கிராஃபைட் கிடைப்பதாக ஆய்வு செய்து அதற்கான இடங்களை கையகப்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருப்பதாக அறிகிறேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இதில் எங்கள் ஊர் மட்டும் இல்லாமல் சுற்றுப்பட்டு 20 கிராமங்கள் அனைத்தையும் இந்த கிராபைட் அகழ்வு பாதிக்கும் என்று தெரிகிறது.

கிழக்கே கோவில்பட்டி நகரம் வரைக்கும் மேற்கே சங்கரன்கோவில் நகரம் வரைக்கும்
வடக்கே விருதுநகர் மாவட்டம்  தெற்கே ஏறத்தாழ கயத்தாறு வரைக்கும் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை யாவும் மோசமாக பாதிக்கப்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நான் விமானத்தில் மதுரை வழியாக கோவில்பட்டி சென்று அங்கு எனது வாக்கை பதிவு செய்து கொண்டிருந்தபோது இந்த கிராபைட் விவகாரத்தால் பாதிப்பு ஏற்பட போகும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அனைவரும் அதற்கு எதிர்வினையாக இந்தத் தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என்கிற செய்தியை எனக்கு தெரிவித்தார்கள்.

நான் அங்கிருந்து புறப்பட்டு கிராமத்திற்கு சென்று எல்லோரையும் அழைத்து கூட்டம் போட்டேன், அரசுத்துறை அதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள் இந்த விவகாரம் பெரிதாக எங்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்று நாங்கள் அவர்களிடம் சொன்னோம்.

ஆனால் நான் தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக கடமையிலிருந்து  தவறுவதாகும் என்று  அங்கு கூடியிருந்த  கிராமத்து மக்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லி முதலில் வாக்களித்துவிட்டு பிறகு பேசுவோம் என்று சொன்னேன். வேண்டுமானால் எல்லோரும் இந்த கிராபைட் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு வாக்களிக்கச் செல்வோம் என்று நான் சொன்னவுடன் கிராமம் முழுக்கக் கருப்பு கொடியேற்றி  ஆடைகளில் கருப்பு பேட்ச் அணிந்து அனைத்து மக்களும் வாக்களிக்கச் சென்றார்கள்.

இதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நான் அங்குள்ள மக்களிடம் இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் இதற்கு நல்ல நல்லதொரு முடிவை எட்டுவோம் என்று சொல்லி வாக்குறுதி கொடுத்து விட்டு வந்தேன்.

ஊரில் இவ்வளவு பிரச்சனைகள்  மக்களிடையே கொந்தளிப்பாக இருக்கும் போது உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏக்கள் யாருக்கும் இது பற்றி எந்த அக்கறையும் இல்லை கவலையும் இல்லை. வழக்கம் போல கார்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

அந்தப் பகுதியில் சாத்தூர் கே கே எஸ் ஆர். ராமசந்திரன் இருக்கிறார். மாவட்டச் செயலாளர் யார் என்றே எனக்கும் தெரியவில்லை. யாரோ ராஜா என்கிறார்கள். பிறகு அந்த பகுதியில் அப்பாவு இருக்கிறார் மந்திரி கீதா ஜீவன் இருக்கிறர். யாருமே வந்து என்ன நடக்கிறது என்ன செய்கிறீர்கள்  என்று  ஆலோசிக்க கூட ஒருவரும் இந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. 

இது ஒருபுறம் இருக்க 
எங்களின்  கிராமப் பகுதி மக்கள் அனைவரும் இதுகுறித்து உங்களைச் சந்தித்து நேரில் முறையிட வேண்டும் என்று ஏக மனதாக முடிவெடுத்து என் தலைமையில் ஒன்று சேர்ந்து உங்களை பார்க்க வருவதாக ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இதில் அரசியல் உள்நோக்கம் எதையும் நீங்கள் கற்பித்துக் கொள்ள வேண்டாம். நான் திமுகவிலிருந்தது அதில் தொடர்ந்து பணியாற்றியது செய்த கடமைகள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை நீக்கியதெல்லாம் இப்போது பேச வேண்டியது இல்லை அது ஒருபுறம் இருக்கட்டும். 

ஊர் மக்கள் முடிவின்படி அவர்களுக்கான பிரதிநிதிகளோடு என் வழிகாட்டுதலில் உங்களை சந்திக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கான நாள் ஒன்றை நீங்கள் குறிப்பிட்டு அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,
(Sd)………..
(கே. எஸ்.இராதாகிருஷ்ணன்)

கடிதமாகவும், E mailஆகவம் அனுப்பட்டுள்ளது

#kurunjakulamgraphite
#குருஞ்சாக்குளம்கிராபைட்

#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸட்
11-5-2024


No comments:

Post a Comment

பொதுவாகவே அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

*பொதுவாகவே  அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்...