Wednesday, November 21, 2018

தந்தை எப்பொழுதும் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர்

தந்தை எப்பொழுதும் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர். நாம் எமது வாழ்க்கையில் சகல விடயங்களையும் எளிமையாகவே கடந்து வந்திருக்கிறோம். இருக்கும் வீட்டிலிருந்து அணியும் ஆடைகள் வரை எளிமையாகவே அமைந்திருந்தது. நாளாந்த உணவும் அப்படித்தான்.
அது தந்தை கிராம சேவகராக பணியாற்றும் காலம். 8 மணிக்கு வேலைக்கு செல்வதற்கு அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். தாயும் கூடவே எழுந்து இன்று என்ன கறி சமைக்கவேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுவிட்டு சமையல்கட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே அம்மா அப்பாவிடம் கேட்கவும் அப்பா கோழிக்கறி சமைக்கச் சொன்னார். அம்மாவும் சரியென சொல்லிவிட்டு சமைக்கச் சென்றார். அம்மாவும் வீட்டில் கோழி இல்லாத காரணத்தால் கருவாட்டுக்கறியை சமைத்து பொதிகட்டி அப்பாவுக்கு கொடுத்து அன்பாக வேலைக்கு அனுப்பி வைத்தார்.
மதியநேரம் வந்ததும் தான் பிரச்சினை ஆரம்பமானது. அப்பா மதிய உணவை உண்பதற்காக சாப்பாட்டு பொதியை திறந்ததும்தான் அவருக்கு தெரிந்தது கோழிக்குப் பதிலாக கருவாடு சமைக்கப்பட்டிருப்பது. அப்பா சாப்பிடவில்லை, உடனே கிராமசேவகர் அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தார்.
ஏன் இன்று கோழிக்கறி சமைக்கவில்லை என்று கத்திக்கொண்டே அம்மாவைத் தேடினார். அம்மா பயத்தால் அலுமாரிக்குப் பின்னால் ஒளித்துக்கொண்டார். அப்பாவால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு கோபம் இன்னும் அதிகமானது. அவ்வளவுதான். சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக்கொண்டு வீட்டுக்கு வெளியே போனார். எங்கள் வீட்டில் கோழி இல்லாததால் எமது வீட்டுமுற்றத்திலும் பக்கத்துவீட்டு தோட்டத்திலும் சுற்றிக்கொண்டிருந்த ஏழு எட்டு கோழிகளை தாறுமாறாக அறுத்து வீசினார். ஊரே கூடி அப்பாவின் கூத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அவரைப்பற்றி ஏற்கனவே எல்லோரும் அறிந்துவைத்திருந்ததால் அவரை எல்லோரும் அவர்பாட்டில் விட்டுவிட்டு கடந்து சென்றனர்.
எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சிரித்தார் ஒரு சிரிப்பு அதை இன்றும் மறக்கமுடியாது. அப்பாவின் குறும்புகளை நினைத்தால் எமக்கு இன்றும் சிரிப்பு தான்.
- சதுரிகா சிரிசேன எழுதிய "ஜனாதிபதி தாத்தா" புத்தகத்திலிருந்து (பக்கம் 501,502)
தமிழாக்கம்: தஸ்னீம்

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...