Tuesday, August 13, 2019

தமிழகத்தில் புதிதாக 345 கி.மீ மின்வழித்தடம் அமைக்கும் திட்டம்.


தமிழகத்தில் புதிதாக 345 கி.மீ மின்வழித்தடம் அமைக்கும் திட்டம்.
-------------------------------------

நகரமயமாக்கல், வளர்ச்சி எனும் பெயரில் ஏற்கனவே பல தொழிற்சாலைகளுக்கும், எட்டு வழிச்சாலைத் திட்டம் போன்ற விரிவாக்க பணிகளுக்கு மட்டுமல்லாமல் மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் என ஆபத்தான திட்டங்களுக்கும் விளை நிலங்களை தாரைவார்த்த விவசாயிகளுக்கு மேலும் ஒரு பேரிடியாக விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளால் படிப்படியாக வேளாண் விளை நிலங்கள் குறைந்து வரும் சூழல் உருவாகியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பருவமழை பொய்த்தல், இயற்கை இடர்பாடுகள், உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலையின்மை, சாகுபடி செலவு உயர்வு, இடுபொருட்கள் விலையேற்றம், கடன் சுமை என எண்ணற்ற துயரங்களுக்கு மத்தியில் வேளாண்மையை கைவிடாமல் தொடர்ந்து விவசாயிகள் அதில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தமிழகத்து விவசாயிகளுக்கு அடுத்தடுத்து பேரிடிகள் விழுவது வாடிக்கையாகிவிட்டது. 

இனி வரும் காலங்களில் உணவு உற்பத்தி வெகுவாக சரியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது எட்டுவழிச் சாலை திட்டத்தால் தொடரும் நெருக்கடிகள் விவசாயிகளின் விளைநிலங்களை சுருட்டி சூறையாடுவதாக மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக வந்துள்ளது ராட்சத உயர்மின் கோபுர நிறுவும் திட்டம்.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களின் வழியாக உயர் மின்அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இந்த மின்பாதை திட்டங்களின் பெரும்பகுதி வேளாண் விளைநிலங்கள் வழியாகவே அமைகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும் பாதிப்புகளும் மிக அதிகம். உயர் மின்அழுத்த கோபுரங்கள் அமையும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப் போகிறார்கள். 

மின் கோபுரம் செல்லும் பாதையின் இருபுறமும் சுமார் 33 மீட்டர் தூரம் வரை எவ்வித பயிர் சாகுபடியும் செய்ய இயலாது. மரங்கள் வளர்க்க முடியாது. ஏற்கனவே உள்ள மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும். மின் கோபுரங்களுக்கு அருகே பாசனக் கிணறுகள் ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைக்க முடியாது. மொத்தத்தில் மின்கோபுரம் அமையும் விளை நிலம் தரிசாக இருக்கும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் உயர் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது நாட்டின் வளர்ச்சிக்காக மின் வழித்தடங்கள் அமைப்பது அவசியம் தான். ஆனால் ஊருக்கே சோறு போடும் விவசாயத்தை அழித்து விட்டு வேறு என்ன வளர்ச்சியை அடைந்துவிட முடியும். 

கரூர் மாவட்டம் புகளூர் மின் பகிர்மான மையத்திலிருந்து ஆந்திரம் தெலுங்கானா மாநிலங்கள் வழியாக சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் வரை சுமார் 1,843 கிமீ தூரம் மின் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதற்காக 5,530 உயர் மின்அழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் மூலம் 6000 மெகா வாட் மின்சாரம் கொண்டு செல்லலாம். பவர் கிரிட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புகளூரிலிருந்து ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாக உயர் மின்அழுத்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மூலம் அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்பு திட்டம், ராசிபாளையம் முதல் பாலவாடி வரை என பல்வேறு உயர் மின்அழுத்தப் பாதைத் திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. இந்த மின் பாதை திட்டங்களின் பெரும்பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கெயில் திட்டத்ததால் பல பகுதிகளில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பல விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 345 கிலோ மீட்டர் தூரம் மின் பாதை அமைகிறது என அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் புகளூருடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மின் நிலையங்களை இணைக்கும் 30 வழித்தடங்கள் ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக எட்டுவழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு நீதிமன்ற தலையீடு காரணமாக நிம்மதி அடைந்து இருக்கிற சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்களும், ராட்சத மின் வயர்களும் கடந்து செல்கிறது.

நிலத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு குறு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரிப்பது மிகப் பெரிய கொடூரம் இழப்பீடு என்னும் பெயரில் மிக குறைந்த தொகையை தருவது மோசடியாகும். மின்கோபுரம் அமையும் இடத்துக்கு 85 சதவீதமும் மின் வயர் அமையும் இடத்திற்கு 15 சதவீதமும் இழப்பீடு என்ற அறிவிப்பை முறையாக செயல்படுத்தவில்லை. மேலும் மின்கோபுரம் அமையும் விளைநிலம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நிலத்தின் சொத்து மதிப்பு குறைகிறது. 

உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பெரிதாக கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. அவர்களது நிலத்திற்கான இழப்பீடு எவ்வளவு என்ற விபரங்களை அறிவிக்கவில்லை. காவல்துறையின் அச்சுறுத்தலுடன் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் விளைநிலங்களில் அத்துமீறி மின் கோபுரங்கள் அமைப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இது தொடர்பாக நடந்த விவசாயகளின் எந்த போராட்டத்தையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை.

உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைத்து கம்பி வழி தடம் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்வதால் அதிகபட்சம் 12 முதல் 15 சதவீதம் வரை மின் இழப்பு ஏற்படும் என்கிறது மின்வாரியம். ஆனால் சாலையோரங்களில் பூமிக்கடியில் புதை வழித்தடம் அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் மின்இழப்பு தவிர்க்கப்படும்.

அதோடு விளை நிலங்களை அழிக்கும் நிலையும் ஏற்படாது உயர் மின்னழுத்த கோபுரம் அமையும் இடத்துக்கு ரூபாய் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்க நியாயம் உள்ள நிலையில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. ஏற்கனவே மின் கோபுரங்கள் அமைந்த விளைநிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தனியார் நிலங்களில் கட்டிடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைத்தால் மாத வாடகை வழங்குவது போல உயர் மின் கோபுரம் அமையும் நிலத்தின் உரிமையாளருக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-08-2019

Image may contain: one or more people, sky, outdoor and nature

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...