Saturday, August 3, 2019

கிழக்குத் தொடர்ச்சி மலை


கிழக்குத் தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலையைவிட பழமையானது கிழக்குத் தொடர்ச்சி மலை என பௌத்த இலக்கியங்களில் கூட சொல்கின்றனர். தெற்கே ஆதிகாலத்தில் இலங்கையில் துவங்கி தமிழகத்தின் வழியாக இன்றைய ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் வரை தொடர்கிறது. இடையிடையே பள்ளத்தாக்குகள், தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தாலும் கிழக்குத் தொடர்ச்சி மலை என்பது இயற்கையின் அருட்கொடை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சிவச்சந்திரன் சில சந்தேகங்களை எழுப்பியதால் இது குறித்தான தேடியபோது கிடைத்த தினமணி நான் எழுதிய பத்தி.
கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுயிலிருந்து தொடங்கி, நெல்லைமாவட்டம் சாயமலை, காரிசாத்தான், கழுகுமலை, கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, சித்தேரி மலை, பழமலை, ஏற்காடு,வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலை, தெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை, வெளிகொண்டா மலை, .நல்லமல்லா மலை, திருமலை, கொண்டாபள்ளி மலை, பாப்பி மலை, மதுரவாடா முகடு, மாலியா மலைத்தொடர், மதுகுலகொண்டா மலைத்தொடர், சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதி, கார்சட் மலைகள்  ஆகியவை இம்மலைத்தொடரில் உள்ள மலைகளாகும்.
கிழக்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. மேற்குத் தொடர்ச்சிமலைகளைப் போல அல்லாமல் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் துண்டுதுண்டாக இணைப்பில்லாதது போல் காணப்பட  வங்காளவிரிகுடாவில் கலக்கும் கிழக்குநோக்கிப் பாயும் , மகாநதி, துங்கபத்திரை, கோதாவரி,  கிருஷ்ணா, காவேரி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் மணல் அரிப்பு முக்கிய காரணம்.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் என்றழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம், தீபகற்ப இந்தியாவின் நான்கு முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு முக்கிய காரணமாகும். ஆனாலும் இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொண்டு இணைந்தே உள்ளன.
கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இம்மலைத்தொடரின் நிலவியல் வரலாறு பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் சிக்கல் நிறைந்த வரலாறு ஆகும்.
சார்னோகைட் பாறைகள், கருங்கல் பாறைகள், உருமாறிய தகட்டுப்பாறையான கோண்டாலைட் மற்றும் படிகப்பாறைகள் கலந்து உருவான மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் காணப்படுகிறது. இம்மலைத்தொடர் நெடுகிலும் பாறை அமுக்கமும் பாறை வெடிப்புகளும் விரவி உள்ளது. மேலும் இம்மலைத்தொடர் முழுவதும் சுண்ணாம்புக்கல், பாக்சைட் மற்றும் இரும்பு தாது போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன.
புவியின் மேலோட்டு பரிணாம வளர்ச்சியில் பண்டைய கால பாறைக் குழுக்களுக்கிடையே உள்ள இடைவெளியை பிரதிபலிக்கும் முக்கியத்துவம் கொண்டதாக திருப்பதி மலைக் குன்றுகள் விளங்குகின்றன. இவ்வுண்மையை பாறை அடுக்கு படிவாய்வுகள் தெளிவாக்குகின்றன. ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலா சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் இத்தகைய பாறைக்குழு இடைவெளி காணப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது போலவே தொடர்புகளற்ற கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன.இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுடைய ஜிந்தகடா மலையாகும். இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆந்திராவின் நல்ல மலை, ஆனந்தகிரி ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சவ்வாது மலை ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு திசையில் உயரம் குறைவான பல மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத் தகுந்தவையாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் துரத்தில் உள்ள நத்தம் சாலையில் சிறுமலை என்ற மலைவாழிடம் உள்ளது.
கொல்லிமலை
காவிரி ஆற்றின் வடக்கில் உயரமான கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, சித்தேரி மலை, பழமலை மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் மேட்டூர் மலைக்குன்றுகள் போன்றவை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. உயர்ந்த இம்மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இங்கு வறண்ட காட்டுப் ப்குதிகளும் காப்பித் தோட்டங்களும் காணப்படுகின்றன.
சேர்வராயன் மலை
சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இம் மலையில் ஏற்காடு என்ற மலைவாழிடம் உள்ளது. இம்மலையில் உள்ள பீடபூமிகள் கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளன.
மதேஸ்வரன் மலை
தெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இம்மலை மைசூரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி மேலே அமைந்துள்ள இம்மலை ஒரு புன்னிய தலமாக விளங்குகிறது.
சவ்வாது மலை
வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறு ஆறுகளுக்கிடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். கிழக்குத்தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம் 32 கி.மீ. அகலத்துடன் வடகிழக்கு-தென்மேற்காக தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ளது.
இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் ஒன்றியங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ. வரை உயரம் கொண்டுள்ளது. 20.7°c முதல் 36.6°c வரை சீதோஷ்ணநிலை நிலவும் பகுதியாக உள்ளது. இம்மலையின் சராசரி மழையளவு 1000.85 மி.மீ.ஆகும். இம்மழையின் பெரும்பகுதி தென்மேற்கு (480 மி.மீ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ.) பருவமழையின் மூலமமாக கிடைக்கிறது.
செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் இம்மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும், மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும் மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலை வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.
கல்வராயன் மலை.
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டத்திலும் மேற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்த்தில் செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது.
தென்மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு கல்வராயன் மலை அமைந்துள்ளது. வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் இம்மலையின் எல்லைகளாக உள்ளன. கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது. கோமுக்கி ஆறு இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
வெளிகொண்டா மலை
ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே உள்ள வெளிகொண்டா மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
நல்லமல்லா மலை
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நல்லமல்லா மலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல், மகபூப்நகர், குண்டூர்,பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பென்னாறு ஆறுகளுக்கிடையே கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது.
இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான பல்நாடு வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் பைரானி கொண்டாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் குண்டலா பிரம்மேஸ்வராவில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது.
திருமலை
திருமலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம் வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம் மலையைச் சுற்றிலும் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி,அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் இடம்பெற்றுள்ளது.
கொண்டாபள்ளி மலை
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக காணப்படுகிறது.
பாப்பி மலை
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்ம்லைத்தொடர் பரவிக் காணப்படுகிறது. இம்மலை பாப்பி கொண்டாலு என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்வையாளர்களைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையமாகவும் பாப்பி மலை விளங்குகிறது.
மதுரவாடா முகடு
கிழக்குத்தொடர்ச்சி மலையில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு வடக்கில் மதுரவாடா முகடு உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவி ஓடு பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இப்புவி ஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளாள் ஆனது.
மாலியா மலைத்தொடர்
இந்த மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக 900 – 1200 மீட்டர் உயர அளவாக இம்மலைத்தொடர் விரவியுள்ளது, இருப்பினும் இம்மலைத் தொடரின் உச்சி சில இடங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. இம்மலைத்தொடரில் உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது.
மதுகுலகொண்டா மலைத்தொடர்
கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் இம்மலைத்தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் உயரமாக உள்ளது. பொதுவாக 1100 முதல் 1400 மீட்டர் உயர எல்லையில் இம்மலைத்தொடர் விரவியுள்ளது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா(1643மீ), சிங்கராம்குட்டா(1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான மலைச் சிகரங்களாகும்.
சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதி
ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்ந்த மலைச்சிகரமான தியோமாலி(1672மீ) சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இம்மலைத் தொகுதி ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்று பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தீபகற்பத்தின் பகுதியாக உள்ள இம்மலைத் தொகுதி பண்டைய நில மக்களின் நிலப்பகுதியான கோண்ட்வானா நிலப்பகுதியில் அங்கம் வகித்ததாக் புவியியல் ரீதியாக கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளைஆறுகளும் நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உண்டாக்குகின்றன.
கார்சட் மலைகள்
கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மலைகள் மற்றும் குன்றுகளால் ஆக்கப்பட்டது கார்சட் மலைப்பகுதியாகும். கிழக்கில் இம்மலைப்பகுதி திடுக்கிடும் செங்குத்தாய் உயர்ந்தும் மேற்கில் மெல்ல மெல்ல வடமேற்கு மயூர்பன்சிலிருந்து தென்மேற்கு மல்கான்கிரி வரை சரிந்து காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்திலுள்ள உயர் மேட்டு நிலப் பகுதிகள் கார்சட் மலைகள் என்றழைக்கப்படுகின்றன. இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச் சம்வெளிகளை இணைக்கும் பல உயர் மேட்டுநிலப் பகுதிக்ள் காணப்படுகின்றன். கிழக்கு தொடர்ச்சி மலையானது, பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ள சமவெளிகளல் பல இடங்களில் தடுக்கப்படுறது.
கார்சட் மலைப் பகுதியின் சராசரி உயரம் சராசரி 56கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரமாக உள்ளது. கோதாவரிக்கு வடக்கில் கிழக்கு தொடர்ச்சி மலையின் உயரம் அதிகமாகி ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடகிழக்குப் பகுதியில் வெகுதொலைவுக்கு நீட்சி பெற்றிருக்கும் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத் தொகுதி எனக் கருதப்படுகிறது.
இந்தமலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரிய மூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள், நறுமணப்பொருட்கள் ஆகியவை இங்கு வாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது. மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைகாலங்களில் வறட்சியாகவும் தென்படும். இங்கு வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கைமுறைகளும், பழக்கவழக்கங்களும்  தொன்மைவாய்ந்தவை. மத்திய அரசு தொடர்ந்து கிழக்கு தொடர்ச்சிமலைகளின் பாதுகாப்பிலும், வன அடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் 8,200ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாழும் விவசாயிகளுக்கும் பழங்குடிகளுக்கும் இந்த மலைத்தொடர்களில் விளைகின்ற பொருட்கள் தான் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றது. மேற்குத் தொடர்ச்சியை விட உயரத்தில் குறைவாக இருந்தாலும். இம்மலைத்தொடரின் அடிப்பாகம் பூமியின் அடிஆழம்வரை பரவியுள்ளதாகவும் செய்திகள் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி துறைமுகம அருகே அமைந்துள்ள பாறைவரைக்கும் நீள்கிறது. ஆங்கிலேயர்காலத்தில் துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும் பணியின் போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்கமுடியவில்லை. அவ்வளவு சக்திவாய்ந்த பழமையான மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன.

#கிழக்கு_தொடர்ச்சி_மலைகள்
#Eastern_Ghats
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-08-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...