Thursday, September 12, 2019

ஈழத்தில் பாரதி சிலை



====================

இன்றைக்கு முண்டாசுக் கவி பாரதிக்கு நினைவு நாள். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதி ராஜா இன்றைக்கு என்னிடம் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் சொன்னார் யாழ்ப்பாணத்திலும் பாரதிக்கு சிலை இருந்தது என்றும் குறிப்பிட்டார். அது குறித்தான விவரங்களையும் தெரிவித்தார். அது குறித்தான ஒரு பதிவையும் அனுப்பி வைத்தார். 

அவர் அனுப்பிய நாவுக்கு அரசன் பதிவு....

யாழ்பாணத்தில் நம்ம பேட்டை, புவனேகபாகு என்ற சிங்கள மன்னன் நல்லூர் கோவில் கட்டி , சிங்கை நகர் மன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூரில் பாரதி சிலையடி! நிறைய பரராசசேகர, செகராசசேகர செங்கைஆரிய மன்னர்களின் வரலாறுகளில் ஐரோப்பியக் காலனித்துவ போத்துக்கிசர் வர முன்னர் குருக்கல்வளவு என்று அழைக்கப்பட்ட இடம்.

எங்களின் வீடு இந்த பாரதியார் சிலையிட்கு மிக அருகில் முன்னொரு காலத்தில் இருந்தது. அந்த வளவின் பெயர் மின்னேரிஞ்சான் வெளி. அதை தான் என்னோட இலற்றோனிக் பிளாக் இக்கு பெயராக வைத்திருக்கிறேன், மற்றப்படி நாசமாப்போன அந்த வீட்டுக்கும் வளவுக்கும் எனக்கும் இன்றுவரை எந்த தொடர்பும் இல்லை. 

நான் இந்த இடத்தைவிட்டு வெளியேறி இன்றைக்கு இருவதித்தொ ரு வருடங்கள். திரும்பிப் போனதே இல்லை. போகவும் இப்பெல்லாம் விருப்பம் இல்லை . அதன் காரணம் உரிமை இல்லாத வெற்றிடம் தான் .. வேற என்னதான் சொல்ல முடியும் . .

" பொய்யான சில பேர்க்கு புது நாகரகம், புரியாத பல பேர்க்கு எது நாகரீகம்" எண்டு எண்டு சொல்லிக்கொண்டே . பாடிகொண்டே போய்கொண்டு இருக்கின்ற உலகத்தில் வாழ்ந்து முடிய முன் வாசம் இழந்துபோன வீடு அது ! 

சென்றமாதம் யாழ்பாணம் போன நோர்வே வாழ் நண்பர் , புல்லாங்குழல் ஆசிரியர் , திருச்செல்வம்

" அரசன் இவடம் நினைவு இருக்கா ? " என்று கேட்டு இந்தப் photo அனுப்பி இருந்தார் ! 

மிகச் சிறிய வயதில் இந்த சிலை இருந்த இடத்தில அரசமரம் நின்றது.சடைச்சு வளர்ந்த விசாலமான அந்த மரம் சந்தி முழுவதுக்கும் நிழல் கொடுத்து கொண்டு இருந்தது. அது பட்டுப்போய் ஒரு கட்டத்தில் அதை ஒரு முதியவர் கண்டக் கோடாலி போட்டு அடிமரத்தில் இருந்து தறித்து விழுத்தியது நினைவு இருக்கு. அரசமர நினைவுகளில் தான் இவடத்தை அரசடி என்பார்கள்.

இந்த சந்தியில் ஏன் எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதியாருக்கு சிலை வைத்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ பாரதியார் வந்தபின் இந்த இடத்தை பாரதி சிலையடி என்பார்கள்.விடுதலைப் போராட்டம் அகோரமாக நடந்த காலத்தில் எல்லா இயக்கங்களும் தங்கள் எழுச்சிப் பாடல்கள் , வீர மரணம் ,நினைவு நாட்கள் எல்லாத்துக்கும் மஹாகவி பாரதியாரில தான் லவுட் ஸ்பிகர் கட்டி அலற விடுவார்கள். 

தெருப் புழுதி எல்லாம் அள்ளிக்கொட்டி இந்த சிலை எப்பவும் பனங்காய்க்கு திருநீறு அள்ளி அடிச்ச மாதிரி இருக்கும் , ஆனால் பாரதியார் நினைவு நாளுக்கு மட்டும் ,சிலையைக் கழுவித் துடைத்து யாழ்பாணம் முனிசிப்பால்டி நிர்வாகம் இந்த சிலைக்கு மாலை போட்டு,கந்தர்மடப் பள்ளிகூடப்பிள்ளைகள் வந்து சுற்றி நின்று " வந்தே மாதரம்... வந்தே மாதரம்... " என்று பாடி இருக்கிறார்கள். அன்றைக்குத்தான் பாரதியார் மாலை போட்டு கொஞ்சம் பளிச் என்று சந்தோசமாக இருப்பது போல இருக்கும் .

பலர் பல இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டுப் போக இந்த சிலையடி ஒரு காரணம். நல்லூர் திருவிழா நேரம் எல்லா இயக்கங்களின் தெருக்கு கூத்து, எழுச்சி நாடகம் சிலையடியில் நடக்கும். ஈபிஆர்எல்எப் இயக்கப் பேச்சாளர் டேவிட்சன் அவர்களின் புரட்சிகர அறைகூவல் சொற்பொழிவுகள் நடக்க, முதல் முதல் பிப்டி கலிபர் வான்நோக்கி சுடும் சுடுகலன் துப்பாக்கி பெரிசுக்கு வந்த நேரம் அதை அவர்கள் பிக்கபில் பொருத்தி சிலையடியில் காட்சிக்கு வைத்தார்கள். 

இருவத்தி ஐந்து வருடங்களின் முன் இந்த இடம் இப்ப இந்தப்படத்தில உள்ள மாதிரி இருக்கவில்லை. முக்கியமா இவளவு வெளிச்சம்,பரபரப்பு ,விளம்பரங்கள்,சீமெந்துச் சுவர்கள் ,அகலமான வீதிகள் இல்லை. மிகவும் அடக்கமாக நிறைய மரங்கள் கிடுகு வேலியில் சாந்து கொள்ள ,அடம்பர அவசரம் இல்லாத மனிதர்கள் ஆசுவாசமாக நின்று கடக்கும் ஆத்மாநாமின் கவிதை போல ஒரு வித ஆனந்தக் கிளர்சியில் இருந்தது. 

1989 இல் இந்திய அமைதிப்படை ராணுவத்துடன் நடந்த முதல் சண்டையில பாரதியாரின் சிலை உடைந்து தலை பறந்தது ! பின்னர் சிலைக்கு முன்னால் இருந்த வீட்டில் காம் அமைத்து சென்றி இல் இருந்த பஞ்சாப் ரெஜிமென்ட் சீக்கிய ஜவான்கள் ,பாரதியாரின் தலைப்பாக்கட்டு , முண்டாசுத் தாடி, அருவாள் மீசையைப் பார்த்த அந்த ஜவான்கள்

" அட இவரு நம்மட பஞ்சாப் சிங் ஆளுப்பா " என்று சொல்லிச் சொல்லி இந்த சிலைய மறுபடியும் திருத்தி அழகான சிலை ஆக்கினார்கள் ! 

அண்மையில் பாரதியார் கவிதைகள் பல Amazen ஒன்லைனில படித்தேன், அதோட பாரதியார் வாழ்ந்தவிதம் பற்றியும் ஒரு புத்தகம் படித்தன் ,பள்ளிபடிக்கிற காலத்தில அப்பா ஒரே இம்சை அதுகளை படிக்கச்சொல்லி,அப்போதெல்லாம் ஆர்வம் இல்லை, கரணம் பாரதியாரின் தமிழ் பண்டிதர்களின் தமிழ் எண்டு நினைத்துருந்தது,ஆனால் அவரின் தமிழ் ஒருவித கவிதைக் கவர்ச்சியான தமிழ் என்று இப்போது அறியமுடிகிறது .

நான் கிடாரில ஆங்கில பாடல்கள் பாடும்போது, அவைகளின் Lyrics கொஞ்சம் ரசித்து நோண்டி பார்ப்பவன். பாரதியார் பாடல் படித்தபோது,அவரும் அதே Lyrics ஸ்டைலில பாடல்கள் எழுதியுள்ளார், இசை அமைக்க தேவையான மாதிரி அவரே அழகா எழுதி இருக்கிறார். அதில் பல கவிதைகள் பாடல்களாக வந்துள்ளது உங்களுக்கு தெரியும். 

பாரதியார் ஏழை , அவரோட அன்பு மனைவி செல்லம்மாவுக்கு ஒரு பட்டுசேலை வாங்கவே தையதக்க தையதக்க போட்டிருகிறார், ஆனால் கற்பனையில கன்னம்மா என்ற காதலிக்கு பட்டு கரு நீல சேலை கட்டினால் எப்படி இருப்பா எண்டு,அந்த சேலையில வைரங்களைப் பதித்து கவிதை எழுதியுள்ளார், அது இப்படி முடியும் " பட்டுக் கருநீல புடவை பதித்த நல் வைரம் நட்ட நடு நிசியில் தெரியும் நடச்சத்திரங்களடி " எண்டு இயலாமையில் விலாசம் எழுப்பி எல்லா வறுமையான கவிஞ்சர் , புலவர் போலப் பாடியுள்ளார்.

பாரதியார் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பிறந்த பிராமண சமுகத்தை விமர்சித்தவர், அதுக்கே அந்த நேரம் நிறைய " தில்" வேண்டும் ,அவர் எட்டயபுர கவிஞ்சன் ஆனபின் பல்லகில் ஏறி பவனிவர வாழ்நாள் முழுவதும் விரும்பி இருக்கிறார், ஆனால் அது நடக்கவே இல்லை .கடைசியாக அவரை யானை தள்ளி விழுத்தியத்தில் இருந்து எழுந்துவர முடியாமல் அவர் இறந்தபோது வெறும் 20 பேர் தான் போனாப்போகுது எண்டு பாடை தூக்க வந்திருகிறார்கள்.

பாரதியார் சிலைக்கு அண்மையில் பிறந்து வளர்ந்ததாலோ என்னமோ தெரியலை நானும் இப்பெல்லாம் கவிதை போல சிலதுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.இந்த சிலைக்கு அருகில் இருந்த " ஞானப்பிரகாசம் ஹோட்டல் " என்ற சாப்பாடுக் கடை பற்றி ஒரு சிறுகதையும், இவடத்தில கிடந்தது அலைந்த எங்கள் உள்ளூர் தத்துவஞானி " சிங்கி மாஸ்டர் " என்ற சிறுகதையும் சென்ற வருடம் எழுதிப்போட்டு அதைப் பலர் ரசித்து வாசித்தார்கள்.

பெடிசம் பாலசிங்கம், கவிஞ்சர் கந்தப்பு , புண்ணியக்குஞ்சி, சில்லறைக்கடை சுப்பிரமணியம்,கீரை விக்கிற குஞ்சரம்,மசுக்குட்டி மாமி , ஒப்பெரேசன் செல்லத்துரை ,மாப்பிளை மாமா, சாமியம்மா, பாவானி, அண்டனிப்பிள்ளை மாஸ்டர்,பிலோமினா அக்கா எண்டு பல கதைகளை இதைச் சுற்றிதான் உருவாக்கினேன் , இன்னும் எழுத இருக்கு, பார்க்கலாம்..!

#பாரதி #ஈழம் #bharathi #srilanka #ksrposting #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...