Friday, September 20, 2019

*#திராவிடம் - #சில_வரலாற்றுக்_குறிப்புகள்.*



———————————


திராவிடத்தின் தொன்மையையும் வரலாற்றைக் குறித்தான வரலாற்றுப் பதிவு. ஆதி சங்கரரருக்கு முன்பே காஷ்மீர் பண்டிட்கள் திராவிடம் என்ற பதத்தை தங்களுடைய வடமொழி நூல்களில் பதிவு செய்துள்ளனர். திராவிடம் குறித்தான முழுமையான வரலாற்றினை கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த மீள்பதிவு இது.

விந்திய மலைக்குக் கீழே இருக்கும் இந்திய தேசத்துக்கு திராவிட தேசம் என்று பெயர். அதற்கு மேலே இருக்கும் பகுதிக்கு கௌல தேசம் அல்லது கௌட தேசம் என்று பெயர். தென்னிந்தியாவைக் குறிக்கும் திராவிடம் என்கிற தமிழ் சொல், த்ராவிடம் என்கிற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்து உருவானது. திருவிடம் தான் திராவிடமாயிற்று என்று நாம் கேள்விப்படவில்லை.
“திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிர்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு”
(சாசனம் – 714, பக் – 670, South Indian Temple Inscriptions Volume – 2)
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூர் தற்போதைய தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதை சொல்வதாக வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சோழ மன்னர் விக்கிரம சோழனின் 11வது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும். தேசம் என்பது பெரிய அழகு. அதில் உள்ள சிறிய அழகு தான் நாடு என்றாகிறது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி.1129 ஆக இருக்கலாம்.
அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை காணலாம்.
“யிப்படி அநேகஞ் சதுர்யுகம் பூசை கொண்டருளிய தேவர் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோர்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தர் பிரியன் பக்தவத்சல பார்பதி வல்லவன் பார்பதி மநோகரன் பார்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவர்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பார்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்”
(பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் – புலவர் ராசு)
இந்த செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவர் ராசு என்பவர் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த செப்பேடும் 1584ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உண்டு. இதற்கு வலு சேர்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூர்காங்கேயர் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.
“செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பார்வதி தேவியம்மான அர்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்…”
(பக் – 222, கொங்கு சமுதாய ஆவணங்கள் என்ற புத்தகத்தில் இந்த ஆவணம் தமிழ் துந்துவி ஆண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.) 
இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், “ திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் பேர் பெற்றவரான, சான்றோர் குளத்தில்”,
 “மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகர் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான…” (பக் – 231, மேலது)
இந்த ஆவணத்தின் குறிப்புகளின்படி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. எனினும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் இந்த ஆவணத்திலும் திராவிட நாடு என்ற பெயர் பயன்படுத்தப்படுவது முக்கியமான ஒன்றாகும்.
மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழகத்தின் ஆவணங்களை கொண்டே திராவிட தேசத்தினை சுட்டிக்காட்டப்பட்டது. சிங்காரவேலு முதலியாரின் அடித்தன சிந்தாமணியும் ஐம்பத்தாறு தேசங்களின் பட்டியலில் கேரளம், பாண்டியம், சோழம் போன்றவற்றோடு திராவிடத்தையும் குறிப்பிடுகிறது.
“பௌண்டரம், ஓளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள்”. (அதிகாரம் – 10, 44வது செய்தி, மனுதர்ம சாஸ்திரம்)
நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரங்களாகும். அதுபோல, சேரமன் மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் என்ற பழ. அதியமான் எழுதிய நூலில் தமிழகம் பிற்காலத்தில் திராவிட நாடாக அறியப்பட்டதை காண முடிகிறது. அதன்படி, டி.வி.கபாலி சாஸ்திரி என்பவர் காவிய கண்ட கணபதி சாஸ்திரி என்பவரின் வாழ்க்கை வரலாற்றை சமஸ்கிருதத்தில் எழுதிய பகுதி மேற்கோள் காட்டப்படுகிறது.  அதில்,
“திராவிட தேசத்தில் ‘சேர்மாதேவி’ என்ற இடத்தில் கிர்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவர்களால் பாரத்வாஜாச்ரடம் ஒன்று நிறுவப்பட்டது…” (பக். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – பழ. அதியமான்.)
இந்த நூலினை சமஸ்கிருதத்தில் எழுதய கபாலி சாஸ்திரி அதற்கு வாசிஷ்ட வைபவம் என்ற பெயரில் 1994இல் வெளியிட்டார்.
எனது பத்தி வருமாறு,
திராவிடம் என்ற பதம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்ற ஆளுமைகள் பயன்படுத்தும்  இன்றுநேற்று வந்த சொல் அல்ல.  தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் திராவிடம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். ரபிந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தில் “திராவிட உத்கல வங்கா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்பாடலை ஆந்திரத்தில் உள்ள மதனபள்ளியில் இறுதிசெய்து முடித்தார் என்றும் சிலர் சொல்வார்கள்.
இவர்களுக்கும் முன்பே திராவிடம் என்ற கருத்தியல் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டன. கார்டுவெல் பிஷப்பும், திராவிட மொழிகளின் இலக்கணத்தைப் பற்றியும் ஆய்வுகள் செய்துள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திராவிடம் என்ற வார்த்தை  அச்சில்  வெளிவந்தாலும், அதற்கு முன்பே  சுவடிகளிலும் திராவிடம் என்ற சொல்லாடல் இடம்பெற்று இருக்கின்றது.
’மனு ஸ்மிருதி’யிலிருந்து நாம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அதில் திராவிடம் என்ற சொல் ஒரு பகுதியைக் குறிக்கக் கையாடப்பட்டுள்ளது.
“தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹூ ஆஸ்வாத்ய தவயத்”
                                                                -ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரி -10.
திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் துவாரகம்’ சொல்கிறது என்றும் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றார்.
பனிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீர் சுவட்டில் தென்னாட்டு பிராமணர்களை திராவிட பிராமணர்கள் என்று குறிபிட்டுள்ளது. பார்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள்  ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றார் எல்லீஸ்.
சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல பாகவதம் என்ற நூலிலும்  திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது  அழைக்கப்பட்ட 56நாடுகளில் திராவிட நாடும் ஒன்று. விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை ”பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன்முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் உள்ளோம்.
இராமானுஜர் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், திருக்கோளூர்  ‘பெண்பிள்ளை இரகசியத்தில்’ இராமானுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப்  பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே  அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.
“திரமிளம்”, “திராவிடம்” என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ”திரமிள சங்கம்” மதுரை சமண முனிவர் வஜ்ர நதியால் கி.பி 470ல் நிறுவப்பட்டது.  திரமிள் என்பது திராவிட என்றப் பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“திரமிள” என்ற பிராகிருதச் சொல் சமஸ்கிருதத்தில் “திரவிட” என்று குறிப்பிடப்பட்டு, தமிழில்  “திராவிடம்” என்று கையாளப்பட்டது. இப்படியாக வர்ணாசிரத்தை ஆதரிக்கும் பண்டைய சுவடிகளில் சொல்லப்பட்ட கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்ள  மாட்டோம் என்றாலும், திராவிடம் என்ற சொல்புழக்கத்தை நாம் பழமையிலிருந்து அறிகிறோம்.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில், பயன்படுத்தப்பட்ட தெலுங்கு இலக்கண நூலில், “காம்பல்” என்பவர் திராவிடத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.   பிஷப். கார்டுவெல் 1856ல் திராவிட- தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் திராவிடம் என்ற பதம் நிலைநாட்டப்பட்டது. அதே காலக் கட்டத்தில் அயோத்தி தாசர், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பையும் தொடங்கினார். 
பிஷப் கார்டுவெல்லுக்கு முன்பு, மனோன்மணியம் சுந்தரனார், “திராவிட நல் திருநாடு” என்று குறிப்பிட்டதும், எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907ல் “திராவிடாபிமானி” என்ற தனி வார இதழை தொடங்கினதும், இரபிந்திர நாத் தாகூரின் தேசியகீதத்தின் மூலமாகவும்  திராவிடம் என்ற சொல் ஆதியிலிருந்து புழக்கத்தில் இருந்தது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.
தந்தைப் பெரியார், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போதும், தலைவர் கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் செல்லும் போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழமையை  இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
மேற்குறிப்பிட்டவாறு, ஆதிசங்கரர், இராமானுஜர்,  சமஸ்கிருத, பாலி மொழிச் சுவடுகள், சமண, பௌத்த மதங்கள் நிலைத்த காலங்கள் ஆகியவற்றுக்கும் பின்னும் தாயுமானவர் (18ம் நூற்றாண்டு),  கால்டுவெல்(1856),  மனோன்மணியம் சுந்தரனார் (1891), இரபீந்திரநாத் தாகூர் (1911), மறைமலை அடிகள், போன்றோர் “திராவிடம்” என்ற சொல்லை பயன்படுத்திய செய்திகளும் தகவல்களும் உள்ளன.
திராவிடம் என்பது 19ம் நூற்றாண்டில் புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல் என்பது இதன்மூலம் நமக்குத் தெரியவருகின்றது. இவை குறித்து மேலும் நாம் ஆய்வுகள் செய்யவேண்டும்.  பிறகு எப்படி தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், தாய்த் தமிழிலிருந்து  தோன்றியிருக்க முடியும்?.
”கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று பழமையான இலக்கியத்தில் பாடப்பட்டிருக்கின்றதே......

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#Dravidam
#திராவிடம்
#கல்வெட்டுகள்
#வரலாற்றுத்_தரவுகள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20/09/2019.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...