Wednesday, December 4, 2019

நீலகண்ட_பிரம்மச்சாரி

அறியப்படவேண்டிய
#நீலகண்ட_பிரம்மச்சாரி
———————————————-
டிசம்பர் 4 : இன்று ஒரு மாவீரனை நினைவு கூர்வோம்! 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு முன்பே சுதந்திர போராட்டத்தில் துப்பாக்கி பயிற்சி கொடுத்து 6000 இளைஞர்களை உருவாக்கிய மாவீரர், இவரிடம் பயிற்சி பெற்ற ஒரு இளைஞன் தான் வீர வாஞ்சிநாதன். 
திருநெல்வேலி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று பின் தன்னையும் சுட்டு உயிர் நீத்த வாஞ்சிநாதன் வீட்டில் இருந்து எடுத்த கடிதத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நீலகண்ட பிரமச்சாரி ஆஷ் வழக்கில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பர்மா மற்றும் ரங்கூன் சிறைகளில் வைக்கப்பட்டு விடுதலையான பின்பும் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக இந்திய விடுதலைக்கு வறுமையுடன் பணியாற்றியுள்ளார்!



நீலகண்ட பிரம்மச்சாரி - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக வேங்கை. தனது இளம்வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன்.
பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தப்பி பிரெஞ்சு காலனி புதுச்சேரி சென்று கொஞ்சகாலம் இருக்கிறார். பின்னர் மீண்டும் விடுதலைப் போராட்டத்திற்காக சென்னை வருகிறார். தங்க இடம் இல்லை. கையிலும் பணம் இல்லை. வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பகல் எல்லாம் மெரினா கடற்கரை, எழும்பூர் ரயிலடி என சுற்றித் திரிகிறார்.
இரவில் யார் வீட்டு திண்ணையிலாவது உறக்கம். (அப்போது திருவல்லிக்கேணியில் திண்ணை வைத்த பல வீடுகள் இருந்தது) பசித்தால் மாநகராட்சி அடி பம்பில் தண்ணீர் குடித்து 4, 5 நாட்களை கடத்துகிறார். 
பசியின் கொடுமை தாங்காமல் இரவு நேரத்தில் முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டு ராப்பிச்சை எடுத்தார். அப்படி ராப்பிச்சை எடுக்கும்போது ஒரு நாள் யார் வீடு என தெரியாமல் ஒரு வீட்டில் கூனிக் குறுகி பிச்சை கேட்டார். வெளியில் வந்து பார்த்தவருக்கு இந்தக்குரலை எங்கோ கேட்டது போல் உள்ளதே என வீட்டுக்காரர் சில விநாடிகள் யோசித்தபோது, அது பாரதி என கண்டுகொண்டு அவ்விடத்தை விட்டு அகல முற்படுகிறார்.
வெளியில் வந்த புரட்சிக்கவி முக்காட்டை நீக்கி நீலகண்டா.. உனக்கா இந்த நிலை என்று கண்ணீர் சிந்தி வீட்டினுள் அழைத்துச் சென்று பார்த்தால் அவர் வீட்டில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை.
பிறகு தனது சட்டை பையிலிருந்து காலணாவை எடுத்துக் கொடுத்து சாப்பிடு என்று சொல்லி அனுப்புகிறார்! தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று நீலகண்ட பிரம்மச்சாரியின் நிலையைப் பார்த்து பாடுகிறார் பாரதி.
நீலகண்டரின் வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறைகளில் கழித்தது. இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர். 
தனது வாழ்வின் பிற்பகுதியில் மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88-வது வயதில் 1978, மார்ச் 14ம் தேதி காலமானவர்.
நம் காலத்தில், நம் கண்முன்பாக வாழ்ந்து மறைந்த இந்த மாமனிதர் வரலாற்றை மக்கள் மறந்து விடக்கூடாது. 
1911ல் மணியாச்சி ரயில் நிலயத்தில் வாஞ்சிநாதன் எனும் வீர தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட போதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. 
இவர் 1889, டிசம்பர் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன்- சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள், 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான்.
1905ல் கர்சன் பிரபு வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நீலகண்டனும் ஒருவர்.
1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றினார்.
தஞ்சை மாவட்டத்தின் பிராமண குடும்பத்துச் சார்நத நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். 
தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட ரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார்.
அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணன் ஒருவர். இவர் 1908ல் சென்னை வந்தார். இந்த காலகட்டத்தில் நீலகண்டனை ரகசியப போலீசார் கண்காணிக்கத் தொடங்கினர். 
போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த 'அபினவ பாரதம்' எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு.
பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் அங்கே சென்றார். சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் இவர் 'சூர்யோதயம்' எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண்டார். வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் இருந்தார்.
அப்போதுதான் வ.உ.சிக்கு தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் நீலகண்டனும் தேடப்பட்டார். 1911 ஜூலையில் நீலகண்டன் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார்.
ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கர கிருஷ்ணனுக்கு 22. 
ஆஷ் கொலை நடந்த தேதி ஜுன் 17, 1911. இந்த வழக்கு திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 11-ல் விசாரணைக்கு எடுத்துக் கொல்லப்பட்டது.
1912 பிப்ரவரி 12-ல் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனைக் காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார்.
சிறையிலும் இவரது புரட்சி ஓயவில்லை. சிறையில் தனக்குக் கடுங்காவல் தண்டனை என்பதால் விறகு வெட்டச் சொல்கிறார்கள், நான் ஒரு அரசியல் கைதி. எனக்கு இந்த வேலைகள் தரக் கூடாது, படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். இவர் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். 
அங்கிருந்து இவர் பாளையங்கோட்டைக்கு சிறைக்கு மாற்றப்பட்டார், பிறகு பெல்லாரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். 1914ல் உலக யுத்தம் தொடங்கியது. அப்போது இவர் சிறையிலிருந்து தப்பியோடி பிறகு மாட்டிக்கொண்டு, அதற்கும் சேர்த்துத் தண்டனை அடைந்தார்.
இவர் சிறையில் ஒழுங்காக நடந்துகொண்டால் ஏழாண்டு சிறை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றார்கள். ஆனால் இவரது செயல்பாடுகளால் இவரது தப்பிச் செல்லும் முயற்சியும் சேர்த்து இவருக்குத் தண்டனைக் காலம் ஏழரை ஆண்டுகளாக்கப்பட்டது. 
1912 பிப்ரவரி 15ல் தொடங்கி இவரது தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார்.
அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாரைத் தொடர்பு கொண்டார். பாரதியாரும் இவருக்கு அவ்வப்போது உதவி புரிந்தார். பாரதியார் இவருக்கு அறிமுகப்படுத்திய தொழிலாளர் இயக்கங்களின் முன்னோடியும், பொதுவுடமைவாதியுமான தேசபக்தர் சிங்காரவேலரின் தொடர்பு இவரைப் 'போல்ஷ்விக் பிரசுரங்கள்' வெளியிடத் தூண்டின. 
சிங்காரவேலருடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பின் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு பொதுவுடமை இயக்கத்தின் மேல் நாட்டம் வந்துது. இந்திய கம்யூனிஸ்ட் சமஸ்டி கழகத்திலும் இவருடைய ஈடுபாடு இருந்தது.
அது ஆயுதப் புரட்சியைத் தூண்டும் பிரசுரங்கள். இந்த குற்றத்துக்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை 1922 முதல் தொடங்கியது. சிறையில் நன்னடத்தைக்காக சில ஆண்டுகள் குறைக்கப்பட்டு 1930ல் ரங்கூன் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். 
இந்த தண்டனைக் காலம் முழுவதும் இவர் நாட்டின் பல்வேறு ஊர்களில் இப்போது பாகிஸ்தானிலுள்ள முல்டான், பெஷாவர், பர்மாவில் ரங்கூன் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார். விடுதலையானதும் சென்னை திரும்பி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி', 'இந்து' பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.
இளம் வயது தொடங்கி புரட்சிப் பாதையில் பயணித்த நீலகண்டனுக்கு இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 'பரிவிராஜக' (பற்றுக்களை விடுத்த சந்நியாச வாழ்க்கை) வாழ்க்கையை மேற்கொண்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். 
தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் இவை எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்வது அவருக்கு ஒரு மாறுதலாக இருந்தது.
வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்த இவர், வேறு எதிலும் மனம் ஈடுபடாதிருக்க வேண்டி சதா சர்வ காலமும் அனைத்துக்கும் மூலாதாரமான பிரணவ மந்திரமான "ஓம்" எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார். 
இவரை இப்படிப் பார்த்தவர்களுக்கு இவர் எருக்கஞ்சேரி நீலகண்டனாக இல்லாமல், சுவாமி ஓம்காரானந்தாவாகத் தெரிந்தார். இவரது மனஉறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார். பரதேசி வாழ்க்கை மேற்கொண்ட இவர், அதனை விரும்பாமல் ராணியிடம் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப்பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான்பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார்.
இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.
அந்த மலைவாழ் மக்கள் சிலர் அடிக்கடி சாது ஓம்காரை வந்து சந்தித்துத் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அப்படியொரு முறை அவர் கொடுத்த பூஜை தீர்த்தம் அவர்களது நோய்களைத் தீர்த்தது என்ற செய்தி பரவ, பலரும் இவரிடம் தீர்த்தம் பெற்றுக்கொள்ள வரலாயினர். 
1934ல் இவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது இவர் மனத்தில் ஓர் கேள்வி எழுந்தது: "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நோய்களை குணப்படுத்தும் அதிசய மனிதன் என்ற பெயரும் புகழும் பெறவா என்னை ஆண்டவன் படைத்தான். எப்போதும் கூட்டம் சூழ்ந்திருக்க மன அமைதியின்றி தியானத்தில் ஈடுபடமுடியாமல் இருப்பதற்கா இங்கு வந்தேன். என் யோகப் பயிற்சி என்ன ஆவது?" என்பது அவர் மனம் எழுப்பிய கேள்வி.
அவ்வளவுதான், அவர் அந்தக் கூட்டத்திலிருந்தும், பெயரும் புகழும் தேடிவரும் சந்தர்ப்பத்தைக் கைகழுவிவிட்டு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்னகிரி மலையின் உச்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓர் பாழடைந்தில் தங்கினார். இந்தப் பணிகளில் அவருக்கு உதவிய கிராம மக்களுக்கு 1934ல் அவர் ஓர் சமாராதனை செய்து உணவளித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் இவர் பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார்.
1936 முதல் அவர் சுமார் 30 ஆண்டுகாலம் சுற்றுப்பயணம் செய்தார். பிறகு 1966ல் முதுமை காரணமாக ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொண்டு ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். 
அவர் இருந்த சென்னகிரி உச்சியில் காட்டுத்தீ பரவியதால் மறுபடியும் சுவாமி ஓம்கார் மலையடிவாரத்துக்குத் தனது ஆசிரமத்தை மாற்றிக் கொண்டார். 
இவருக்கு சமூகத்தின் பலமட்டத்திலும் சீடர்கள் உருவானார்கள். பல சாதியினர், கடவுள் நம்பிக்கை உள்ளோர், அற்றோர், அரச குடும்பத்தினார், அடிமட்ட மக்கள், இளையோர், முதியோர் என்று இவரைத் தேடி வரும் மக்கள் அதிகமானார்கள்.
இவர் தனது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை 'மெய் ஒப்புதல்' எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.
இவரது இரண்டாவது நூல் 'உபதேஷ்' எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் 'தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்'. இதுவும் பெங்களூரில் வெளியானது. 
தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவியாக மாறிய இவரது வாழ்க்கை, இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.
துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் அச்சம் ஏற்படுத்திய நீலகண்ட பிரம்மச்சாரி, 1978 மார்ச் 4ம் தேதி அன்று மறைந்தார்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
4-12-2019.
#நீலகண்ட_பிரம்மச்சாரி
#KSRPostings
#KSRadhakrishnanPostings


No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...