Wednesday, July 28, 2021

#*பாரதி போற்றிய செங்கோட்டை ஆவுடையக்கா*

#*பாரதி போற்றிய செங்கோட்டை ஆவுடையக்கா*
————————————
பத்தமடையில் பிறந்து சுவாமி சிவானந்தர் ஆற்றிய அருந்தொண்டுகளுள், அதிகம் தெரியாத ஞானி,அவர் தன் எழுத்துகளின் மூலம் அறிமுகமாகிய பெயர் பெண் கவி ஆவு
டையக்கா. 

ஏறக்குறைய இரு நூறாண்டுகளுக்கு முன், கன்னி கழியாமலேயே, கணவனை இழந்து, பால்ய விதவையாகி, பல பாடல்களை இயற்றி, உலகோர் ஏத்தி வணங்கும் உன்னத நிலை பெற்றவர் ஆவுடையக்கா என்றழைக்கப்பட்ட ஆவிடை அம்மாள்.

1894-லிருந்து 1910-க்குள் அச்சிட்டு வெளியான நூல்கள், பக்கங்களை புரட்டினாலே கிழிந்துவிடக்கூடிய நிலையில் அவை இருந்தன. அவற்றை மிகுந்த ஜாக்கிரதையுடன் படித்த போது, பெருவியப்படைந்தேன்.

தென்காசிக்கடுத்த செங்கோட்டையில் சைவ பெற்றோர்களுக்கு ஏறத்தாழ 1810ஆம் ஆண்டு மகளாக பிறந்தாள் ஆவிடை. இளமையிலேயே திருமணம் நடந்தது. முதலிரவில் அவள் கையை தீண்டும் முன் கணவன் இறந்து விட்டான். அக்கால வழக்கப்படி தலை மொட்டை அடிக்கப்பட்டு, அணிகலன்களை இழந்து, அறைக்குள் அடைபட்டு கிடந்தாள் ஆவிடை பால்ய விதவையாக. ஆனால் அவளுடைய மனத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. கைம்பெண்களுக்கு விதிக்கப்பட்ட விரதங்களையும் அனுஷ்டானங்களையும் தவறாது செய்தாள். அவற்றுள் ஒன்று பிறர் எழுந்திருக்கும் முன் எழுந்து, ஆற்றில் சென்று நீராடிவிட்டு வருவது. ஒரு நாள் அதிகாலையில் குளிக்கச் சென்ற அவள் கீழே கிடந்த மாவிலையொன்றை எடுத்து பற்களைத் துலக்கத் தொடங்கினாள். உடனேயே அறிவுக்கப்பாற்பட்ட ஓர் உள்ளுணர்வின் பரவசம் அவளை ஆட்கொண்டது. நடந்தது என்னவெனில் சதாசிவப் பிரம்மேந்திரரின் உருவான அய்யாவாள் தன் பற்ககளைச் சுத்தம் செய்த மாவிலையை அங்கே எறிந்துவிட்டு ஒரு மரத்தடியில் தியானத்தில் இருந்தார்.
அன்றிலிருந்து வேதாந்தப் பாடல்கள் வெள்ளமென ஆவிடையிடமிருந்து பொங்கி வழிந்தன. மக்கள் அவளது பெருமையை உணர்ந்துகொண்டனர். ஆவிடை ஒரு முறை திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவரை பற்றிகேட்டிருந்த திருவாங்கூர் மகாராஜா அவரது பூஜைக்காகத் தங்கத்தாலான வில்வ இலைகளை அனுப்பி வைத்தார். வழிபாடு முடிந்ததும், தங்க இலைகளையும் சேர்த்து, பூஜை செய்த மலர்களை வழக்கமாக எறிவது போல, ஆவிடை குளத்தில் எறிந்து விட்டார். ஓட்டையும் பொன்னையும் ஒக்க நோக்கும் அவரது பற்றின்மையை அறிந்து அரசர் பெருவியப்படைந்தார். மற்றொரு சமயம் பல்வேறு மதத் தலைவர்களின் கூட்டத்திற்க்கு அவர் சென்றிருந்தார். அப்போது பலரும் அவளது இளம்வயதையும், கைம்மை நிலைமையையும் கண்டு, அவரைக் கேவலமாகப் பேசி, மொட்டையென்று அழைத்தனர். உடனேயே ஆவிடை, யார் மொட்டை? என் உடலா, மனமா, மூச்சா, என் ஆத்மாவா? என்று அவர்களிடம் கேட்க, அவர்கள் வெட்கித் தலைகுனிந்து தங்கள் தவறையும், ஆவுடையின் பெருமையையும் உணர்ந்து, அவரது அடி பணிந்தனர்.
பின்னர் ஆவிடை, அய்யாவாளை மீண்டும் சந்தித்து அவரது சீடர்கள் குழுவில் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் அச்சீடர்களோ அவளை மதிக்காது மிக கேவலமாக நடத்தினர். அதையும் ஆவிடை சட்டை செய்யவில்லை. ஒரு நாள் அனைவரும் காவிரியாற்றின் நடுவில் இருந்த மணற்திட்டுக்களில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த போது, திடீரென வெள்ளம் பெருகி வந்தது. அதை கண்டு பிறசீடரனைவரும் பயந்து கரைக்கு ஓட, ஆவிடை மட்டும் அதையரியாது கண்மூடி தியானத்தில் நிலைத்திருந்தார். ஆற்றுவெள்ளம் அவரிருந்த மணற்த்திட்டை மட்டும் தொடாது, இரு கூறாகப் பிரிந்து ஓடியது. அதைக் கண்ட சீடர்களும், பிறரும் ஆவிடையின் மகிமையை உணர்ந்து போற்றினர்.
ஆவிடை அம்மாளின் பாடல்கள் பிரம்ம ஞானம் என்ற ஆத்மானு பூதியையும், அமைதியடையும் சாதனங்களையும் கூறும் பாடல்கள் ஆகும்.

அக்காலத்து மக்களிடையே வழங்கி வந்த எளிய சந்தங்களிலும், பாடல் வகைகளிலும் அவர் பாடியிருக்கிறார். பள்ளு, அம்மானை, சோபனம், கும்மி, சிந்து, பந்து, வண்டு, கப்பல் அனைத்திலும் அவர் பாடியிருக்கிறார். அவர் காலத்தில் திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி மிகப் பிரசித்தமாகி இருந்தது. திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப் பட்டும், தெருக்களில் நடிக்கப்பட்டும் வந்தது. எனவே அக்குறவஞ்சி வகையிலும் ஆவிடை வேதாந்தக் குறவஞ்சி நாடகம் ஒன்று இயற்றினார்.
குறவஞ்சி என்பது குறத்திப் பட்டு. இதில் தலைவன் பவனி, அவனது அழகில் கதாநாயகி மயங்கி மையல் கொள்ளுதல், நிலா மன்மதனைப் பழித்தல், குறத்தி வருதல், குறத்தி – நாயகி சம்வாதம் குறவஞ்சியிலும் இவை அத்தனையும் உள்ளன. நாடகத்தின் விஷயம் என்ன என்று நூலின் முகவுரையில் கூறப்பட்டது, “பரமாத்மா ஜீவாத்மாக்கள் அந்தக்கரணங்கள், காமாதிகள், விவேகாதிகள், ஜாக்ராதிகள், மூன்றவஸ்தைகள் முதலியவற்றையே நிடர்களாகவும் உருவகப்படுத்தியோர் குறவஞ்சி நாடகமாக கூறியுள்ளது”.
குறத்தியின் மலைவள, நாட்டுவள வர்ணனைகள் மிகச் சிறப்பாகத் துள்ளும் நடையில் அமைந்திருக்கின்றன.
இதோ நாட்டு வளம் கூறுகிறாள் குறத்தி :
காலமூன்றும் கடிந்திடுநாடு
கர்ம பந்தம் ஒழிந்திடுநாடு
கோலவெல்லை யில்லாத தொருநாடு
குறிக்கும் ஞானம் கொடுத்திடுநாடு
பாலசூரியப் பிரகாசமா நாடு
பாபம் தீர்த்திடும் நாடெங்கள்நாடே
அண்ட பிண்டம் அவருண்டநாடு
அசங்கமான தற் கப்புறநாடு
பண்டையுண்டான பாங்குள்ள நாடு
ப்ரளய காலத்தும் பேராத நாடு
அண்டர் லோகத்துக் கப்புறநாடு
அனந்தயோகியர் தேடிடும் நாடு
கண்டு மாதவன் தூணிலுதித்துக்
களித்திருந்திடும் நாடெங்கள் நாடே.
 
இந்த குறவஞ்சியில் பரமாத்மாவே நாயகனாகவும், குறத்தியாகவும், குருவாகவும் வந்து அருள் பாலிக்கிறார். குறத்தியின் இருதி உபதேசமும் அதை பெறும் ஜீவாத்மா, நாயகியின் பேரனுபவமும் மிகச் சிறந்த பாடல்களாக அமைந்துள்ளன.
 
 அயமாத்மா பிரம்மமென்னும் ஆரண வாக்யார்த்தம்
அறிந்து பார்த்ததுவே நீ யாவாயென்றுரைத்தாள்
உபதேசம் பெற்றவுடன் ஓவியம்போல் நின்று
உள்ள தன்னறிவாலே உணர்ந்து அகமகிழ்ந்தாள்
தளராத நிலைதன்னில் தங்கினாள் மனத்தால்
தானே யெல்லாமாகத் தரிசனம் கண்டாள்.
 
”வேதாந்த வித்யா சோபனக்கும்மி” என்ற நூலில் சார்வகர், பௌத்தர், தர்க்கர், சாங்கியர் என்ற பிற தத்துவவாதிகளைச் சாடி வேதாந்தத்தின் பெருமையை நிலைநாட்டுகிறார்.

மாகவி பாரதிக்கு கவி ஞானம் அளித்த
ஆவுடையக்கா…

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
28-7-2021.


No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...