Sunday, July 25, 2021

#ருசியும்_ரசைனை…..

#ருசியும்_ரசைனை…..
———————————————————
ருசியும் ரசைனையுமே உயிர்த்துடிப்புடன் கூடிய எல்லாவற்றின் சாரமாக இருக்கிறது. ரசனையின் பின்னால் எல்லாவற்றின் மீதன ஈர்ப்பும் அக்கரையும் இருக்கிறது என்றால் அதற்க்கும் அடியில் ஒளிந்திருப்பது ஆழ்ந்த சிந்தனையும் தேடலுமே. ராஜரத்தினம் பிள்ளையின் பெயரை நாம் அடிக்கடி கி.ரா.வின் வாயில் இருந்து கேட்கக் கிடைத்தது பெரிய பரிசு. கரிசல் பகுதியின் ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் சவுண்ட் சர்வீஸ்காரர் சுழலச் செய்யும் முதல் ஒலித்தட்டு அந்த நாதஸ்வரம்தான். விளாத்திக்குளம் சுவாமிகள், காருக்குருச்சி அருணாச்சலம் என்று விருயும் அவரது இசை இரசனை எல்லா ஞானங்களுக்கும் அப்பாற்பட்டது.

எங்கள் வெட்டவெளிக் கரிசலில் இசை பிரம்மாண்டமானதொரு மெளனமாக வேனலின் வெட்கையின் கானல்வரிகளாக ஆகாயம் முட்ட எங்கும் வியாகித்திருப்பது. எங்கள் வெம்பூர் மேளக்காரர் அழகிரியார் குடும்பத்தில் நாதஸ்வரம், வேலு அண்ணனின் பெரிய தவில், கண்ணப்பரின் உறுமிமேளம் கிருஷ்ணனின் இரட்டைச் சிறு மேளம், சிங்கி, ஊமை குழல் என்ற குழுவின் எல்லாருக்கும் சங்கித ஞானம் உண்டு. அழகிரி சகோதரர்களுக்கு அத்தனை ராகங்களும் அத்துபடி. திடிரென ஊருக்கு வருகை தந்த விளாத்திகுளம் சுவமிகள், ஒருவரும் இல்லாத ரெடியார் மடத்தில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாராம். நூற்றாண்டுகள் தாண்டிய வேப்ப மரத்தில் பால் சொட்டுவது வடியாமல் உறைந்து நின்றது என்றும் பட்சிகள் கூட்டம் அரவம் எழுப்பாமல் பாட்டுக் கேட்டு மயங்கி நின்றன என்றும் கூறினார்கள். பெரிய அழகிரியும் வேலுவும் மற்ற பிற ஆட்களும் ஓடிவந்து சுவாமிகளைச் சுற்றிலும் உட்கார்ந்து ஒரு பகல் முழுவதும் நாதஸ்வரமும் காளைமாட்டுத் தோள் இழுத்துக் கட்டிய பெரிய மேளமும் வெங்கல் சிங்கியும் ஊமைக் குழலும் வாசித்தார்கள்.




கம்மஞ்சோற்று உறுண்டைகளும் பசுந்தயிரும் கரிசலின் மிதுக்கம்பழ மோர் மிளகாய் வத்தல்களும் கோடங்கிபட்டி நார்த்தங்காய் ஊறுகாய்களும் பசியாற்றித் தொடர்ந்த இசை, மறுநாள் காலையில்தான் முடிந்த்தாம். எல்லாரும் அடுத்த ஒரு பகல் முழுவதும் மடத்திலேயே தூங்கிப் போனார்களாம். இதை நான் ஏன் இழுதுகிறேன் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் மிகபெரிய ரசனை என்பது இசை ரசனை தான். ஏனெனில் அதற்கு எப்பொதுமே நிகழ்காலம் மட்டும்தான். அந்த ஒற்றைக் காலத்துக்குள் எல்லாகாலமும் அடுக்கடுக்காக புதைந்து இருக்கும் என்பதுதான் சீவளிகளில் புகுந்த எச்சிலில் எழுதப்பட்ட இரகசியம். ராக ஆலாபனைகளில் எண்ணற்று விரியும் கல்பனா ஸ்வரங்களின் நெஞ்சு குளிரும் ருசி.

அதுபோலத்தான் உணவுகள் மேல், உடைகளின் பால் கி.ரா. கொண்டிருந்த ரசனை. எந்தெந்தக் பழங்களை எப்படியப்படி உண்பது என்பது குறித்து நாட்கணக்காக கி.ரா.வால் பேச முடியும். கனிகளைப் பொறுத்தவரை நன்கு பழுத்து, அழுகும் நிலைக்கு முந்தைய நிலையில் சாப்பிட வேண்டும் என்பார். மலேசியாவின் துரியன் பழத்தின் நாற்றம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் கூறியவற்றை பெரிய கட்டுரையாக எழுத முடியும். பழங்கள் பற்றிய பேச்சு வரும் சமயங்களில் எல்லாம் தவறாமல் கி.ரா. குறிப்பிடும் ஒரு பெயர், ரசிகமணி  டி,கே.சிதம்பரநாத முதலியார். ரசிகமணியிடம் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து சாப்பிடச் செய்தால், திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், குற்றாலம் பகுதிகளில் எந்த ஊரில் எந்தத் தோப்பில் விளைந்த பழம் என்று கூறி விடுவாராம். ரசிக மணியின் மீது பெரும் பிரம்மையும் அன்பும் கொண்டிருந்த கி.ரா.வின் உடலில் ஒரு பக்கம் ரசிகமணியே குடியிருப்பது போலத் தோன்றும். ரசிகன் என்ற சொல் இன்று திரைப்பட ரசிகன் என்னும் அளவில் பல பரிமாணங்களை அடைந்துவிட்டது.

-சமயவேல்…

(தமிழ்வெளி)

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...