Tuesday, July 22, 2025

ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்...


 #ராஜாஜியினசுதாந்திரா #காங்கிரஸ்

ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்... சந்தைப் பொருளாதார கொள்கைகள், தாரளவாதம், மதசார்பின்மை ஆகியவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த சுதந்திரா கட்சி 1959இல் மும்பையில் மினு மாசானி, ஏ.டி.ஷ்ராப், ராஜாஜி, என்.ஜி.ரங்கா, காசா சுப்பா ராவ் ஆகியோரால் தொடங்கபட்டது. சோசியலிச கொள்கைகளை காங்கிரஸ் அரசு அமல்படுத்தியதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடக்கப்பட்டு, தனியார் துறை நசுக்கப்பட்டு, ஊழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதாக சுதந்திரா கட்சி கருதியது. அதை தடுக்க, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இந்தியா முழுவதும் இருந்து அகற்றுவது தான் ஒரே வழி என்று முடிவு செய்தது. அன்று இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் காங்கிரஸ் அசுர பலத்துடன் ஆட்சி நடத்தியது. கிட்டதிட்ட ஏகபோக ஆட்சி. காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, ஒவ்வொரு மாநிலத்திலும் அன்று உருவாகியிருந்த மாநில கட்சிகள், சிறிய கட்சிகளுடன் சுதந்திரா கட்சி கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் எதிர்ப்பு என்று இந்த கூட்டணிகள் அனைத்து மாநிலங்களிலும் உருவாகின. தமிழகத்தில் திமுகவுடன் சுதந்திரா கட்சி கூட்டணி அமைத்தது இந்த அடிப்படையில் தான். 1962 நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட சுதந்திரா கட்சி, 7.89 சதவீத வாக்குகளை பெற்று, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்ட மன்ற தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பிகார், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா மாநிலகளின் சட்டமன்றங்களில் பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. 1967 நாடாளுமன்ற தேர்தலில் 8.7 சதவீத வாக்குகளை பெற்ற சுதாந்திரா கட்சி, 44 தொகுதிகளில் வெற்றி பெற்று, மக்களவையில் பிரதான எதிர் கட்சியாக மாறியது. சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட இதர எதிர்கட்சிகள் இதை விட குறைவான தொகுதிகளில் தான் வெற்றி பெற்றன. 1967 ஒடிசா சட்டமன்ற தேர்தலில் சுதாந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சுதாந்திரா கட்சியின் ராஜேந்திர நாத் சிங் தியோ ஒடிசா முதல்வராக பதவியேற்றார். அது வரை ஒடிசாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி எதிர் கட்சியாக மாறியது. தமிழகத்திலும் ஏறக்குறைய இதே தான் 1967இல் நடந்தது. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. திமுக கூட்டணியில் இருந்த சுதந்திரா கட்சி, 27 இடங்களில் போட்டியிட்டு, 20 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சி 66 இடங்களில் வென்று, பிரதான எதிர் கட்சியாக தொடர்ந்தது. 1969 நவம்பரில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. பிரதமர் இந்திரா தலைமையில் உதயமான இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான காங்கிரஸ் எம்.பிகள் ஆதரவு இருந்ததால், அவர் பிரதமராக தொடர்ந்தார். சோசியலிச கொள்கைகளை மேலும் தீவிரமாக அமலாக்கினார். காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய், சஞ்சீவ ரெட்டி, எஸ்.கே.பட்டில், ஒய்.பி.சவான், அதுல்யா கோஷ் ஆகிய சின்டிக்கேட் குழு தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் பலமிழந்து இயங்கினர். இவர்களில் காமராஜர் ஒருவரை தவிர இதர தலைவர்கள் யாரும் சோசியலிஸ்டுகள் அல்லர். முதலாளித்துவத்தை ஏதோ ஒரு வகையில் ஆதரித்த ’வலதுசாரிகள்’. சுதாந்திரா கட்சி, ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எதிர்த்து வந்தது. பிளவுக்கு முந்தைய பழைய காங்கிரஸின் தொடர்ச்சியாக இந்திரா காங்கிரஸை கருதியது. 1970இன் இறுதியில், திமுக, இந்திரா காங்கிரஸுடன் நெருங்கியது. 1971 சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில், திமுக இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனால். இந்திரா காங்கிரஸ் கட்சியை வீழ்த்த இந்திய அளவில் போராடிக் கொண்டிருந்த சுதாந்திரா கட்சி, ஸ்தாபன காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதாவது ராஜாஜியும், காமராஜரும், இந்திரா காந்திக்கு எதிராக கூட்டணி அமைத்தனர். படு தோல்வியடைந்தனர். 1972 டிசம்பரில் 94 வயதில் ராஜாஜி காலமானார். அதன் பிறகு சுதந்திரா கட்சி கலைந்தது. சரி, இத்தனை நீண்ட வரலாற்றை படித்த பின், காமராஜர் மீது ராஜாஜிக்கு பகை, வன்மம், பழி உணர்ச்சி இருந்ததால் தான் அவர் 1962, 1967 தேர்தலிகளில் திமுகாவுடன் கூட்டணி அமைத்தார் என்ற கருத்து சரியானது என்று நினைக்கிறீர்களா ? சுதாந்திரா கட்சி என்பது ராஜாஜியின் சொல்படி நடந்த அடிமை கட்சி அல்ல. மினு மாசானி, ஏ.டி.ஷ்ராப், என்.ஜி.ரங்கா, பிலு மோடி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் நடந்த லிபரல் ஜனனாயகக் கட்சி. ராஜாஜி என்ற தனி மனிதரின் விருப்பு, வெறுப்புகளினால் அதன் கொள்கைகள், கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. காங்கிரஸை வீழ்த்த இந்தியா முழுவதும், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முடிவை அனைவரும் சேர்ந்து எடுத்தனர்.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh