Sunday, September 20, 2015

நெல்லை நெல்லையப்பர் நெடுஞ்சாலை - Tirunelveli.

கலாப்ரியா தயவில் கிடைத்தபடம்.



 பிரசித்திபெற்ற நெல்லை சந்திரவிலாஸ் ஓட்டலில் ஒருகாலத்தில் இந்தப்படத்தைப் பார்த்ததுண்டு.

தென்னை மரங்கள் நிமிர்ந்து நிற்க மாண்டுவண்டி செல்கின்ற நெல்லையப்பர் நெடுஞ்சாலை. எனக்குத் தெரிந்தவரையில் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்  இந்த கருப்பு வெள்ளைப்படம் .

கல்லூரியில் படிக்கும்போது திரைப்படங்கள் படம்பார்த்துவிட்டு ரதவீதிகள் வழியே  இந்த  சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் (S.N.High road) காலாற நடந்த  காலம் உண்டு. தற்போது அந்தப்பகுதிகள் பரபரப்பாக மாறிவிட்டது.

இன்றைக்கு லண்டன், நியூயார்க், பாரீஸ், சிட்னி என்று பல்வேறு நாடுகளில் காலாற நடந்தாலும் 1960-70களில் நெல்லை டவுண் ரதவீதிகளும் இந்த நெடுஞ்சாலையிலும்  நடந்த நினைவுகள் பசுமையானவை.

செண்ட்ரல், ரத்னா, பார்வதி, லெட்சுமி, ராயல், நெல்லை ஜங்ஷன் பேலஸ் டி வேலஸ்,  பாளை அசோக் போன்ற திரையரங்கங்களில் அப்போது படம் பார்த்ததுண்டு. லண்டனில் போய் பெரிய திரையரங்கங்கள், பழம்பெரும் நாடக அரங்கங்களையும் பார்த்தால் நெல்லை திரையரங்கங்களின் நினைவுதான் வரும்.

சாலைகுமாரன் கோவில் அருகில் உள்ள சந்திரவிலாஸ் ஓட்டலும், எஸ்.ஆர்.சுப்பிரமணியபிள்ளை புத்தகக்கடையும், நடராஜ் ஸ்டோரும், சிவாஜி ஸ்டோரும், ராதாசாமி வாட்ச்கடையும், மார்க்கெட்டில் உள்ள (பெயர் சரியாக நினைவில்லை)  புரோட்டா கடையும், ஜங்ஷன் மீனாட்சிபுரத்தில் உள்ள விருதுநகர் புரோட்டாக்கடையும், திமுக நிர்வாகிகள் நம்பியின் சைவ ஓட்டலும் ( துவாரகா ஓட்டல் உள்ளே), கீழரதவீதியில் வாகையடி முக்கு அருகே உள்ள சூர்யநாராயணன் ஹோட்டலும், மற்றும்  இருட்டுகடை அல்வாவும், நியாஸ் ஓட்டல் பிரியாணியும் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட்டுவிட்டு டவுண் பஸ் ஏறுவதற்காக ஜங்ஷனில் பஸ் ஸ்டாண்டிலே ஒலிக்கவிடும் திரைப்படப் பாடல்களை ரசித்துக்கொண்டே காத்திருப்பதும் உண்டு.

ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் உள்ள செய்தித்தாள் விற்கும் கடையில் சனிக்கிழமையன்று ஒரு வாரத்துக்கான குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, சுவராஜ்யா, கண்ணதாசன் ஏடு, தீபம், கணையாழி,  கலைமகள் என இருக்கிற காசு அனைத்துக்கும் தைரியமாக புத்தகங்களாய் வாங்குவதுண்டு.  அந்த வாரம் முழுவதும் விடுதியில் இவற்றை படித்து முடிப்பதுண்டு. சக நண்பர்கள் என்ன இவ்வளவு புத்தகங்களா என்றும் கேட்பதுண்டு.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் ஏடுகள் வாங்கவும், சினிமா பார்ப்பதற்கும் நெல்லை ஜங்ஷனுக்கும் டவுணுக்கும் தவறாமல் செல்வது வாடிக்கை.  பழைய புகைப்படத்தைப் பார்க்கும்போது மனதை எவ்வளவு நெகிழவைக்கின்றது என்பது அந்த மண்ணோடு திரிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-09-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #Tirunelveli

No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...