Tuesday, December 29, 2015

மானமிகு படைப்பாளி ஆ. மாதவன்

மிகத் தாமதமாக மூத்த படைப்பாளி ஆ. மாதவன் அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.  ஒரு முறை 1983 காலகட்டங்களில் ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இது குறித்தான ஒரு கூட்ட நிகழ்வில் கலந்துகொள்ள சென்றேன். அப்போது கி.ரா. வும் திருவனந்தபுரம் வந்திருந்தார். நகுலனை சந்தித்துவிட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் எதிர்முனையில் உள்ள சாலைத் தெருவிலுள்ள அவருடைய கடையில் சந்தித்தோம். 

கி.ரா. மீது அன்பையும் பாசத்தையும் கொண்டிருந்ததை அப்போது பார்க்க முடிந்தது.  திராவிட இயக்க இதழ்களைப் படித்து தமிழ் மீது பற்று ஏற்பட்டு அந்த தூண்டுதலில் எழுதத் துவங்கினார்.  இன்றைக்கு தமிழ் படைப்புலகத்தில் மூத்த நாவல் ஆசிரியராகவும், சிறுகதை ஆசிரியராகவும், தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரையாளராகவும் திகழ்கின்றார். மானிட வாழ்க்கையில் யதார்த்தத்தை எளிதாக தன்னுடைய படைப்பில் சொல்வார்.  அன்றாடம் சந்திக்கும், தட்டுப்படும் மனிதர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக தன்னுடைய கதைகளில் படைப்பார்.  அவருடைய மொழி நடையில் இடதுசாரி பார்வையுடைய அரவணைப்பும் இருக்கும். அன்றாட திருவனந்தபுர வாழ்க்கைதான் இவருடைய படைப்புலகம்.  தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பண்பாட்டு செறிவை இவருடைய படைப்பில் காணலாம். 

இந்த சூழலில்தான் கடைத்தெரு கதைகளை அவர் படைத்தார். அந்தத் தெருவில் யாரிடம் கேட்டாலும் அவரை முக்கியமான மரியாதைக்குரிய ஆளுமை என்று தெரியவந்தது. அவருக்கு சொந்த ஊர் செங்கோட்டை.  அவருடைய தகப்பனார் பேருந்தில் நடத்துனராக இருந்தார்.  அப்போது செங்கோட்டை திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்தது.  மலையாள வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் ஒரு பாத்திரக் கடையில் வேலையில் சேர்ந்து அப்போதுதான் பல்வேறு மொழிகளில் வெளிவந்த குறிப்பாக ரஷ்ய, ஆங்கில, பிரெஞ்சு இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்தார். அதே சமயத்தில் தமிழை சிறுக சிறுக படித்து தொடக்கத்தில் கழுமரம் என்ற படைப்பை படைத்தார்.  கடைத்தெருவின் கதைசொல்லி என்று அவரை அழைப்பதுண்டு. கிட்டத்தட்ட 1953லிருந்து எழுத ஆரம்பித்து 82 வயதில்தான் சாகித்ய அகாதமிக்கு அவருடைய முகவரி தெரிந்துள்ளதோ என்பது வேதனையான விசயம்.  எந்த அரசியல் சார்பு இல்லாமலும் மென்மையாக அமைதியாக தனித்தன்மையோடு தன்னுடைய வணிகத்தை செய்துகொண்டு 62 ஆண்டுகள் தன் இலக்கிய பணிகளை செய்துள்ளார். பல்வேறு கால கட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இலக்கியச் சுவடுகளாக வெளிவந்து அதற்குத்தான் தற்போது சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தகழி, கேசவ் தேவ் போன்றவர்களுடைய படைப்புகளை படிக்க முற்பட்டு இலக்கியத்தில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.  சிறுவர்களுடைய சஞ்சிகைகளையும் படித்து தேவன், லட்சுமி போன்றோருடைய தமிழ் படைப்புகளை படிக்கத் துவங்கினார்.  புதுமைப்பித்தன் குடும்பமும், இவருடைய குடும்பமும் நட்பில் இருந்தது.  கவிக்குயில் என்ற இதழை நடத்திய திருவனந்தபுரத்து எஸ்.சிதம்பரம், புதுமைப்பித்தனுக்கும், தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமியையும் நண்பர்களாக கொண்ட சிதம்பரத்துக்கும் இவருக்கும் நட்பு இருந்தது.

இதனால் இவர் இலக்கிய வட்டத்துக்கு வந்து ரகுநாதன், அழகிரிசாமி, நா.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், லா.ச.ரா. போன்ற ஆளுமைகளோடு ஆ. மாதவனுக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது அரு. ராமநாதன் நடத்திவந்த காதல் என்ற மாத இதழ் இளைஞர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தது.  அந்த இதழில் ஆ. மாதவனும் எழுதினார்.  அதே காலகட்டத்தில் ந.பா.வின் தீபம் இதழிலும் 1966ல் கடைத்தெரு கதைகளின் முதல் கதையாக பாச்சி என்ற சிறுகதை வந்தது.  தி.க.சி. ஆசிரியராக இருந்த தாமரையிலும் தொடர்ந்து எழுதினார். 

40 பக்கங்களுக்கு மேலாக வந்த எட்டாவது நாள் என்ற குறுநாவல் தாமரையின் சிறப்பிதழில் வெளிவந்தது.  அதன்பிறகு காளை குறுநாவலும் மற்ற கதைகளும் தொடர்ந்து தீபம், கணையாழி, தாமரை போன்ற ஏடுகளில் வெளிவந்தன.

மலையாள வட்டார பழக்க வழக்கங்களோடு, அங்கு வாழும் தமிழர்களுடைய ஏற்ற, இறக்க வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு நிகர் இவர்தான்.  புனலும் மணலும் என்ற நாவல் உருப்பெற்ற பிறகுதான் இவரை பலர் திரும்பிப் பார்த்தனர்.  ஆரம்பக்கட்டத்தில் சிறுகதைகளை எழுதி, படிப்படியாக 1960 காலகட்டத்தில் நாவல்களை எழுத ஆரம்பித்தார்.  இவருடைய கதைகளில் அமைதியான நையாண்டியும், கேலியும் இருக்கும். 

இவருக்கென்று ஒரு தனிப் பாணியை வளர்த்துக்கொண்டு இலக்கியத் தளத்தில் அறுபது ஆண்டுகளாக ஓர் ஆளுமையாக திகழ்வது சாதாரண விஷயம் இல்லை.  அக்காலத்து எஸ்.எஸ்.எல்.சி., கல்லூரியில் பட்டங்கள் பெற்றவர் கூட இலக்கியப் படைப்பாளியாக வேண்டும் என்று முயற்சித்து வெற்றி பெறவில்லை. பள்ளிக்கே ஒதுங்காத கி.ரா. வும், பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத ஆ. மாதவனும் தமிழ் இலக்கியத் தளத்தில் பிதாமகன்களாக திகழ்வது ஒரு அதிசயமான நிகழ்வுதான் என்று பார்க்கவேண்டும்.

திருவனந்தபுரம் நகரத்தில் ஜன நெருக்கடியான சாலைத் தெருவில் கடை வைத்துக்கொண்டு வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு சிந்தித்து கதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல.  1974ல் வெளிவந்த கடைத்தெரு கதைகள் சாலைத் தெருவில் நடமாடும் மலையாள தமிழ் மக்களின் சாதாரண மக்களுடைய அன்றாட வாழ்க்கையை சொல்கின்றது. புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து, தூவானம் படைப்புகளையெல்லாம் படிக்க ஆரம்பித்தால் அதை முடித்துவிட்டுதான் வேறு காரியங்களில் ஈடுபட மனம் செல்லும்.  புனலும் மணலும், என்ற படைப்பு திருவனந்தபுரம் நகரத்தில் ஓடும் கரமனை ஆற்றோரத்தில் வாழும் மானிடர்களைப் பற்றி, அவருடைய வாழ்க்கை அம்சங்களைப் பற்றியும் சொல்கின்றது.  அந்தக் கதையில் வரும் அங்குசாமி மூப்பன் காட்டும் உதாசினமும், வில்லத்தன்மையும் கொண்ட பாத்திரத்தை மாதவன் தன்னுடைய சொல்லாடலில் சிறப்பாக சொல்கிறார். இயற்கையை தன்னுடைய பேராசைக்காக மனிதன் எப்படியெல்லாம் நாசப்படுத்துகிறான் போன்றவை இவரது கதையாடலில் உள்ளன.  இவருடைய மனைவியும், இவருடைய மகன் 35 வயதிலே இறந்த துயரங்களையும் ஆற்றிக் கொண்டு இலக்கியப் பணியை மலையாள கரையோரம் செய்வது இவருக்கே உள்ள தனி தைரியம் ஆகும்.  திருவனந்தபுரத்தில் வாழ்ந்த நகுலனும், வாழ்கின்ற நீல. பத்மநாபனும், நெல்லை சு. முத்துவும் போன்ற தமிழ் படைப்பாளிகளையும் இவரோடு சேர்த்து எண்ணிப் பார்க்க வேண்டும்.  தமிழகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்கின்ற அனைவரும் ஆ. மாதவனையும், நீல. பத்மநாபனையும், நகுலன் இருந்தபோது அவரையும் சந்திக்காமல் தமிழகத்திற்கு திரும்ப மனம் ஒப்பாது.

ஆ. மாதவன் அவர்கள் நல்ல பண்பாளர், நட்பையும் தொடர்பையும் வாஞ்சையோடு மதிப்பவர்.  அப்படிப்பட்ட அவருக்கு கால தாமதமாகத்தான் சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது என்பது அனைவரது கருத்து. இவருக்கு இந்த விருதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இவரும் 'கதைசொல்லி' ஆதரவாளர். 'கதைசொல்லி' களத்தில் இயங்குபவரும் கூட. 'கதைசொல்லி' சார்பில் ஆ. மாதவனுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...