Monday, December 14, 2015

Nellai Naicker Canals ; Tamil Hinndu14/12/2015

உடைப்பெடுத்து ஓடுகின்றன நவீன கால்வாய்கள்... கம்பீரமாக நிற்கின்றன #நாயக்கர்அணைகள்!இன்றைய தமிழ் ஹிந்து நாளிதல் கட்டுரை.

திருநெல்வேலி தாமிரபரணியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வெள்ள நீர் கால்வாய் கடந்த வாரம் பெய்த மழையில் உடைப்பெடுத்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. நமது நவீன கட்டுமானத்தின் நிகழ்கால சாட்சி அது. ஆனால், அதே தாமிரபரணியில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களாலும் நாயக்கர்களாலும் கட்டப்பட்ட அணைகள் இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன. அவை இன்றைக்கும் நமது குடிநீர் தேவையையும் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.
 
நாயக்கர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் கி.பி. 1190 - 1258 காலகட்டங்களில் பாறைகள், சுண் ணாம்புக் காரை, இரும்பு இணைப்பு களைக் கொண்டு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அப்படி கட்டப்பட்டதுதான் கன்னடியன் அணை. கும்பகோணம் மகாமகம் குளத்தை கட்டியவர் தஞ்சை நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். 1524 - 1700 காலகட்டத்தில் நாயக்கர்கள் கற்கள், சுண்ணாம்புக் காரை கொண்டு அணைகளைக் கட்டினார்கள். அவை அனைத்தும் திட்டமிடப்பட்டு பொறியியல் தொழில்நுட்பங்களுடன் ஒழுங்கான அமைப்பில் கட்டப்பட்டன. மன்னர் திருமலை நாயக்கரின் அணைக் கட்டுமானம் பற்றிய குறிப்பு ஒன்று ‘திருப்பணி மாலை’யில் உள்ளது.

“அரைத்த சுண்ணாம்பை வெல்லச்சாறு விட்டு நன்றாகக் குழைத்துச் செங்கல்லும்

அடுக்காய்ப் பரப்பி கடுக்காயோடு ஆமலகம் அரிய தான்றிக்காய் உளுந்து

ஒருக்கால் இருக்கால் இடித்து நன்னீரில் ஊறிய கடுஞ்சாறும் விட்டு

ஊழிக் காலங்களில் அசையாத வச்சரிக்காரை.”

என்கிறது அந்தக் குறிப்பு.

நாயக்கர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏழு அணைக்கட்டுகள் கட்டப்ப ட்டன. அவற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு மட்டும் தளவாய் அரிய நாதரால் கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டு கிடைத்துள்ளது. மற்ற அணைக்கட்டுகள் யாரால் கட்டப்பட்டன என்று குறிப்பிடப்படவில்லை. இதில் முதல் அணைக்கட்டு கோடை மேலழகியான் அணைக்கட்டு. இது பாபநாசம் கோயிலுக்கு மேற்கே இருக்கிறது. இரண்டாவதாக கோட்டாரங் குளம் அருகே இருக்கிறது நதியுண்ணி அணைக்கட்டு. மூன்றாவதாக தாமிர பரணி ஆறும் மணிமுத்தாறும் சேரும் இடத்துக்கு கீழே ஆலடியூரில் இருக் கிறது கன்னடியன் அணைக்கட்டு. இது இரண்டு ஆறுகளும் சேரும் இடத்துக்கு கீழே ஆற்று நீரோட் டத்துக்கு சாய்வாகவும், தலை மதகு முன் ஆற்றின் ஒரு பகுதியை வாய்க்காலாக பயன்படும் வகையிலும் மிக சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அணையில் 10 மணல்வாரிகள் அமைக்கப்பட்டுள் ளதால் அணையில் மணல் சேர்வதில்லை. தாமிரபரணியுடன் பச்சையாறும் சேரும் பகுதி வரை பாசனம் அளிக்கிறது கன்னடியன் கால்வாய்.

கன்னடியன் அணை கட்டுமானம் பற்றி வாய்வழி கதை ஒன்று அந்தப் பகுதியில் சொல்லப்படுகிறது. இந்த அணையைக் கட்ட ஒரு அரசன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு அவர் ஒரு பசு மாட்டை அந்தப் பகுதியில் விட்டு அது ஓடும் வழியை வாய்க்கால் வெட்டவும், படுக்கும் இடங்களில் குளம் வெட்டவும், சாணம் கழிக்கும் இடத்தில் மடை வெட்டவும் அறிவுறுத்தினாராம். அதாவது, மாடு சரிவான இடங்களில் ஓடும். அங்கு கால்வாயை அமைப்பது நீரியல் ஓட்டத்துக்கு சாதகமாக அமையும். மாடு ஓடும்போது மேடான பகுதி வரும்போது மூச்சிறைத்து படுக்கும். மேடான பகுதியில் குளம் வெட்டுவதும் நீரியல் அம்சத்துக்கு சாதகமானதே. மீண்டும் இறக்கமான பகுதியில் அது ஓடும் பகுதியில் சாணம் கழிக்கும். அந்த இடத்தில் மடை வெட்டுவது நீரியல் அம்சத்துக்கு சாதகமாகும்.

நான்காவது அரியநாயகிபுரம் அணைக்கட்டு. முக்கூடலுக்கும் சேரன் மகாதேவிக்கும் இடையே இருக்கிறது இது. இதன் கோடகன் கால்வாய் மூலம் திருநெல்வேலியின் தாழையூத்து பகுதிகள் வரை பாசனம் பெறுகின்றன. ஐந்தாவது அணைக்கட்டான பழவூர் அணைக்கட்டு மேலச்சேவல் பகுதி யில் உள்ளது. இதிலிருந்து செல்லும் பாளையங்கால்வாய் மூலம் பாளையங்கோட்டை தொடங்கி தூத்துக் குடி மாவட்டம் வசவப்பபுரம் வரை பாசனம் பெறுகின்றன.

ஆறாவது அணைக்கட்டான சுத்தமல்லி அணைக்கட்டு திருநெல் வேலி நகரில் இருக்கிறது. பழந் தமிழரின் அதிசயக்கத்தக்க இதன் கால்வாயில் சாக்கடையை கலக்க விடுகிறோம் நாம். குளத்தூர் ஜமீனின் வீடு இன்று நெல்லை டவுன் - பேட்டை சாலையில் இருக்கிறது. அவரது வீட்டின் பின்புறம்தான் சுத்தமல்லி அணைக் கட்டின் திருநெல்வேலி கால்வாய் ஓடுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தக் கால்வாயில் படகு கள் ஓடியதை பார்த்ததாக குறிப்பிடுகிறார் குளத்தூர் ஜமீனின் மகனான குட்டி என்கிற சண்முகசுந்தரம்.

ஏழாவது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டு மருதூரில் இருக்கிறது. இதன் அபாரமான தொழில்நுட்பம் குறித்து ஏற்கெனவே விரிவாக பார்த்து விட்டோம். இன்னொரு தகவலையும் பார்ப்போம். இந்த அணையின் மேலக் கால்வாயை ஒட்டி மருதவள்ளி - சோமவள்ளி கோயில் இருக்கிறது. அந்தக் காலத்தில் மழை பொய்த்துவிட்டது என்றால் மக்கள் திரண்டு வந்து இந்தக் கோயிலில் கெடா வெட்டி வழிபாடு நடத்துவார்கள். வழிபாடு முடிந்து கோயிலில் இருந்து கிளம்பும்போது கும்ப லாக கால்வாய் வழியாக நடந்தே சென்று மண்வெட்டிகளையும் இதர சாதனங் களையும் கொண்டு வழி யெங்கும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டே ஊர் சென்று சேர்வார்கள். அவர்கள் ஊர் சேர்வதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருக்கும்.

ஆம், அன்றைக்கு மக்கள் இயற்கை மீது நம்பிக்கை வைத்தார்கள். இயற்கையும் நம்பினாரை கைவிடவில்லை. அன்று மட்டுமல்ல; இயற்கை என்றுமே நம்மை கைவிடாது.நன்றி  Tamil hindu news paper

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...