Sunday, December 20, 2015

விவசாயிகளின் தலைவர் யோகேந்திர யாதவுடன் சந்திப்பு

சுவராஜ் அபியான் அமைப்பின் தலைவரும், வட மாநிலங்களில் விவசாய உரிமைகளுக்கும், நலன்களுக்கும் போராடும் யோகேந்திர யாதவுடன் தமிழக விவசாய நலன்கள் புது தில்லியில் கடந்த டிசம்பர் 17, 2015 அன்று தினமணி ஆசிரியர் நண்பர் கே. வைத்தியநாதனும், நானும் காந்தி ஃபவுண்டேஷன் வளாகத்தில் மாலை நேரத்தில் சந்தித்தோம். அப்போது, இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பல செய்திகளை யோகேந்திரா எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.


விவசாயிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் மாறுபட்டாலும், முற்றிலும் அடிப்படையில் அவர்கள் உற்பத்தி செய்யும் சாகுபடி பொருட்களுக்கு விலையில்லை. கடன் தொல்லைகள், தற்கொலைகள் என்பது இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன என்பதை பல பரிமாணங்களோடு எடுத்துரைத்தார்.  வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் கோவையில் ஏற்பாடு செய்துள்ள விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அதற்கும் ஒப்புக் கொண்டார். கோவையில் நடக்கும் இந்நிகழ்வுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் போன்ற முக்கிய ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வு நடக்க இருக்கின்றது. வெறும் கூடிக் கலைவது மட்டுமில்லாமல் ஆக்கப்பூர்வமான முடிவுகளை பிப்ரவரி 7ம் தேதி கோவையில் நடக்கும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் விவசாய இடுபொருள் விலையேற்றம், விவசாய விளைபொருட்களுக்கான இலாபகரமான விலை, கடன் தொல்லைகள், தற்கொலைகள், விவசாயிகளின் உரிமைகள், மறைந்த நாராயணசாமி நாயுடுவுக்கு அவர் மறைந்த கோவில்பட்டி நகரிலும், கோவையிலும் சிலை அமைப்பது குறித்தான பொருள்களை விவாதிக்க இருக்கிறோம்.  ஆர்வமுள்ளவர்கள், அக்கறையுள்ளவர்கள், விவசாயி வீட்டில் பிறந்த இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.  

இதை அரசியல் லாபத்திற்காக நடத்தவில்லை. மறைந்த நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தை நடத்தும்போது தமிழகமே திரும்பிப் பார்த்தது. அச்சமயத்தில் அந்த அமைப்பை கல்லூரிகளில் கட்சி சார்பில்லாத நிலையில் அமைத்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் மீது ஏவப்பட்ட ஜப்தியையும், கடன் தொல்லைகளையும் நிறுத்தி நிவாரணங்கள் பெற்றவன் என்ற நிலையில் மட்டுமல்லாமல் வானம் பார்த்த தெற்கு சீமையில் உள்ள கரிசல் பூமியில் ஒரு குக்கிராமத்தில் விவசாய வீட்டில் பிறந்த சுக்காங்கல் போன்ற அடியேன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.  

எனது குருஞ்சாக்குளம் கிராமத்தில் 31 டிசம்பர் 1980, வருட கடைசி நாளில் 7 விவசாயிகள் காவல்துறையின் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இதைப் பொறுக்க முடியாத எனது கிராமத்து விவசாயிகள் மந்திரம் என்ற காவல்துறையை சேர்ந்த காவலைரை அடித்துக் கொன்றனர். அது கொலை வழக்காகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வழக்கு மன்றத்தில் திருநெல்வேலி, சென்னை உயர்நீதிமன்றம் என்று அலைந்து மிகவும் பாதிக்கப்பட்டனர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தி விடுதலையும் பெற்றுத் தந்தேன். 

No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...