Wednesday, April 26, 2017

தொலைக்காட்சி விவாதங்களில் நடைபெறுவது சம்பாஷனையா? அரட்டைக் கச்சேரியா? வெட்டிப்பேச்சுக்களா?

தொலைக்காட்சி விவாதங்களில் நடைபெறுவது சம்பாஷனையா? அரட்டைக் கச்சேரியா? வெட்டிப்பேச்சுக்களா?
----------------------------------------------------------------

தற்போது நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் கடமைக்கு நடப்பது போல தோன்றுகின்றது. சில நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்வமுடன் பார்த்த இந்த விவாதங்களை இப்போது தவிர்த்துவிடுகின்றன. ஏனெனில் விவாதங்களின் கருப்பொருள்களில் உயிரோட்டமற்று போய்விட்டது.

நான் தூர்தர்ஷன் காலத்தில் (1986) இருந்தே தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துக் கொள்கின்றேன். நிகழ்காலத்தில் உள்ளது போல் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அப்போது இல்லை. யாரவாது விவாதத்திற்கு வரவில்லை என்றால் இன்ஸ்டட்ட இடியாப்பம் போல் "சார், வரமுடியுங்களா" என அழைத்து சிக்கலில் மாட்டி விடுவதெல்லாம் கிடையாது.

இரா.செழியன், முரசொலி மாறன், வேலூர் அமைச்சர் விஸ்வநாதன், செ. மாதவன், குமரி அனந்தன், வாழப்பாடி இராமமுர்த்தி மற்றும் பலர் விவாதத்தில் கலந்துக் கொள்வோம். விவாதங்கள் ஏறத்தாழ ஒருநாள் முழுவதும் கூட நடந்துள்ளது. ஏன் ஒரு நாள்? என நீங்கள் யோசிக்கலாம். ஏனெனில் அரைமணி நேரம் குளிர்சாதனம் இன்றி வியர்த்து விறுவிறுக்க தொலைக்காட்சி படப்பதிவு நடக்கும். இதற்காகவே இரண்டு மாற்று உடைகளும் எடுத்துச் செல்வது வழக்கம்.

நாங்கள் விவாதத்திற்கு செல்லும் போது செய்திதாள் குறிப்புகள், அரசாணை பிரதிகள், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் போல் புத்தகம் கூட எடுத்து சென்றது உண்டு. இவற்றை எல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் விவாதத்தில் கூறப்படும் வரலாறுகள், புள்ளிவிவரங்கள் எதுவாக இருந்தாலும் சரியாக இருக்கும். காண்பவர்களுக்கு சரியான விவரங்கள் கிடைக்கும். தவறான தகவலை ஒருபோதும் கடந்த காலத்தில் அளிக்க மாட்டோம்.

சமீபத்தில் நடந்த விவாதங்களில் விவசாயிகள் துப்பாக்கி சூடு குறித்தும், காவேரி நதிநீர் பங்கீடு குறித்தும், முல்லை பெரியாறு, கச்சத்தீவு போன்ற பல தமிழக உரிமைப் பிரச்சனைகளில் தவறாக ஆண்டுகள், தரவுகள், தகவல்கள், ஒப்பந்தங்களின் விவரங்களை குறித்து விவாத விருந்தினர்கள் தவறாக விவாதித்தனர். அவர்கள் தான் தவறாக சொல்கின்றார்கள் என்றால் சில நெறியாளர்களும் அந்த தவறை திருத்தவில்லை.

இவற்றால் தமிழகத்தின் உரிமைகள் என்ன என்பதில் ஐயமும் பின்னடைவுமே ஏற்படுகிறது. இதில் கவனமாகவும் கண்டிப்போடும் இல்லாமலிருப்பது வேதனையை தருகின்றது.

இவற்றின் காரணமாகவே நான் விவாதங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றேன்.

என்ன விவாதமோ??? தரமற்ற தவறான இந்த வெட்டிப் பேச்சுகளால் எந்த பலாபலனும் இல்லை. இதை திருத்துவோர்  யாரோ? தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும்.

#KSRpostings
#KSradhakrishnanpostings
#தொலைக்காட்சிவிவாதங்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-04-2017

No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...