Friday, April 7, 2017

பணத்திற்கு வாக்குகளை விற்பனை

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மக்களே கள்வர். அவர்களை விலைக்கு வாங்குபவரே வெல்வர். 
-------------------------------------

கிரேக்கம், ரோம் , இங்கிலாந்து ஆகியவை ஜனநாயக அரசியலை படிப்படியாக பரிணாம வளர்சிக் கண்டிருந்தாலும்  குடவோலை முறை எனும் ஜனநாயக வாக்கெடுப்பு அல்லது தேர்தல் முறையை உலகுக்கு பறைசாற்றியது பணடைய தமிழர்கள் தான். இந்த செய்தியை தாங்கி நிற்கின்றது உத்திரமேரூர் கல்வெட்டு. 

அந்த குடவோலை காலத்தில் கூட பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு தகுதிகள் தேவைப்பட்டன. அதாவது 

1. வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30மேல் 60க்குள் இருக்கவேண்டும் 
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
5.நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.
6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது. இவ்வாறாக  நேர்மையும் ஒரு அங்கமாக இருந்தது. குற்றவாளிகளுக்கு தடை இருந்தது. ஆனால் இதே மண்ணில் தான் இன்று வாக்குக்கு தன் சக்திக்கு தகுந்தாற் போல் பணம் வழங்கும் பழக்கமும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது .  செல்வம் மிகுந்த குற்றவாளியை தேர்வு செய்ய மக்கள் லஞ்சம் வாங்குகின்றார்கள். இப்படியாக பணம் வாங்கி வாக்களித்து விட்டு , பண்டமாற்று முறையில் வாக்குரிமையை வியபாரம் செய்து விட்டு நாளை எங்கள் குறை தீருங்கள் என எந்த முகத்துடன் தங்கள் பிரதிநிதியை அனுகுவார்கள் என தெரியவில்லை. 

இந்த மக்கள் மன்றத்தில் நேர்மையானவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? ஜல்லிக்கட்டு உரிமை வேண்டும், சுத்தமான குடிநீர் வேண்டும் என போராட்டாங்கள் ஏன்  தோல்வி அடைகின்றது என்றால் போராளிகள் நெஞ்சை நிமிர்த்தி தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க முடிவத்தில்லை. மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர்கள் போராளிகளை ஏளனமாக பார்க்கின்றார்கள்.  பணம் வாங்கிவிட்டு தானே ஓட்டுப் போட்டீர்கள், நியாயமான முறையில் நீங்கள் வாக்களிக்காத போது நான் மட்டும்  நியாயமான முறையில் நடந்துக் கொள்ள வேண்டுமா என கேட்பார்கள், கேட்கின்றார்கள். மக்களை பார்த்து பயப்பட வேண்டிய அரசியல்வாதியை கண்டு மக்கள் தான் பயப்படுகின்றனர்.  வாக்கு கேட்கும் போது கையெடுத்து கும்பிடும் வேட்பாளர்கள் , வெற்றிக்கு பின் கும்பிடுவதில்லை என்றால் இடையில் பரிமாற்றம் செய்த பணம் தானே காரணம்? 

எஜமானர்களின் எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்படும் நாய்களை போல் வாக்கு செலுத்த  கையேந்தும் மக்கள் மக்கள் உள்ளவரை நாடு நாசமாகவே போகும். அப்பழுக்கு அற்றவர்கள் முதுகுடைந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கத் தான் வேண்டும். இந்த சூழலில் தகுதியே தடை என தகுதியானவர்களும், நியாயமானவர்களும் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்புகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். அரசியலில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர்கள் இந்த வாக்கெடுப்பு முறையில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படுவது என்பது சவாலாக உள்ளது. 
கையில துட்டு, பையில என்ற புதிய கொள்கையால் தான் இன்று 60% - 75% வரை குற்றவாளிகளே ச.ம.உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அண்மையில் வெளிவந்த புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது..

பணத்திற்கு வாக்குகளை விற்பனை செய்வது குறித்தும், அதனால் விளையும் சீர்கேடுகள் குறித்தும் Ferderic Charles Schaeffer எழுதிய நூலை வாக்களர்கள் வாசித்தால் ஒருவேளை சிறிய மாற்றம் வரலாம். இந்த நம்பிக்கையும் கேள்விக்குறி தான். 

இந்திய அரசியலில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து.

#இந்தியஅரசியலில்ஜனநாயகம்
#குடவோலை
#பணத்திற்குவாக்குகளைவிற்பனை

#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
6/4/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...