Monday, July 3, 2017

தி.ஜானகிராமனின் படைப்புகளும் , கொதிக்கும் கதிராமங்கலமும்.






-----------------------------------
தி.ஜானகிராமன் சிறுகதை , நாவல்கள் ,பயணக் கட்டுரைகள் என 600க்கும் மேற்பட்ட படைப்புகளின் சொந்தக்காரர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் பலவும் இவர் பிறந்த தஞ்சையின் மண்வாசனையை நமக்கு உணர்த்தும். கதையின் களம் கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மாயவரம்,  குத்தாலம், திருவிடைமருதூர்,  கும்பகோணம், திருவையாறு,  தஞ்சாவூர்  என பட்டுக்கோட்டை எல்லை வரையும் கிழக்கே கொரடாச்சேரி, திருமருகல்,  மன்னார்குடி வரை  பயணிக்கும். கதைக்கான களத்தை மனதில் தேக்கிக் கொண்டு அதனை வார்த்தைகளில் நமக்கு காட்சியாக எழுத்து வடிவில் இறக்கி வைப்பார். 

மோகமுள் நாவல் படமாக்கப்பட்டது.  படம் பார்த்தவர்களுக்கு தெரியும்,  கும்பகோணத்துவீடுகளும்,தெருக்களும்,கோயில்களும், நீர் நிறைந்து ஓடிய காவிரியும், காவிரி வெற்றிலைக் கொடிகளும் படத்தில் காட்சிளாக எடுத்திருப்பார்கள்.அந்தபடக்காட்சியை நாவல் வாசிக்கும் போதே நான் உணர்ந்தேன். காட்சியை  கண்முன்னே கொண்டு வரும் எழுத்து நடை.நடந்தாய் வாழி காவிரி எனும் பயணக் கட்டுரை வாசித்தவர்கள் தஞ்சைக்கு பயணம் செய்யாமலே தஞ்சையையும் அதன் எழில்மிகு இயற்கை சூழலையும் இருந்த இடத்தில் இருந்தே உணர்திருப்பார்கள். இசையமுது, நளபாகம் , ரயில்வே ஸ்டேஷன், ஜட்கா வண்டி என காட்சியமைப்புகள் இருக்கும். இவற்றில் தஞ்சை இசையும், நளபாகமும் அருகி வருகின்றது.  ஜட்காவண்டி அழிந்தே விட்டது. மிச்சம் இருப்பது தஞ்சையின் இயற்கை வளம் மட்டுமே. 

அத்தகைய எழுத்தோவியத்தில் உணர்ந்த  தஞ்சை அழகுக்கு தான் ONGC கதிராமங்கலம் பகுதியில் கொள்ளி வைத்து அழிக்க தொடங்கி இருக்கின்றது. கதிராமங்கலம் காப்பாற்றப்படாமல் விட்டால் தஞ்சை மாவட்டத்தின் அழகை தி.ஜானகிராமன் போன்றோரின் எழுத்துக்களில் மட்டுமே வாசித்து உணர முடியும் என்பது வேதனைக்குரிய செய்தி. 

#cauveridelta
#தி_ஜானகிராமன்
#கதிராமங்கலம் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...