தமிழகத்தை பொறுத்தவரையில் நீராதாரங்கள் குறைவு. அண்டை மாநிலங்களிலிருந்து வரும்
நீரை கொண்டு தான் விவசாயமும், குடிநீர், தொழிற்சாலை தேவைகளுக்கு பூர்த்தி செய்து வருகிறது.
தாமிரபரணி மட்டுமே தமிழகத்தின் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம்
புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது. அனைத்து நதிகளிலும் அண்டை மாநிலங்களுடன் சிக்கல்கள்
இருப்பதோடு அங்கு தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்தும் விடுகின்றனர்.
கர்நாடகம் காவிரி ஆற்றில் மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் என்று பல தடுப்பணைகளை
கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு மணலும் தமிழகத்தில் இருந்து தான் செல்கிறது. மேகதாது
கனகபுரா வட்டத்தில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும் 400 மெகாவாட் மின்சார உற்பத்தியும்
கிடைக்க கூடிய வகையில் கர்நாடக அரசு இந்த திட்டத்தினை வகுத்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு
வரவேண்டிய நீர் பாதிக்கப்படும். அதே போல ஒகேனக்கலிலும், தென்பென்னை ஆற்றிலும் பிரச்சனைகளை
கர்நாடகா செய்து வருகிறது.
கேரளாவை பொறுத்தவரை பவானி ஆற்றில் 6 தடுப்பணைகளும், அட்டப்பாடி, பாலக்காடு மாவட்டத்தில்
தமிழக எல்லையோரத்திலும், மஞ்சா கண்டி என்ற இரு இடங்களிலும் தடுப்பணை பணிகளை கேரளா முடித்துவிட்டது.
இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். கேரளா
ஏற்கனவே குமரி மாவட்டம் நெய்யாறு அணையை மூடிவிட்டது. நெல்லை மாவட்டம் அடவிநயினார் அணைக்கு
சிக்கலை உருவாக்கிவிட்டது. செண்பகவல்லி அணையை இடித்தேவிட்டது. அழகர் அணையை கட்ட முடியவில்லை.
முல்லை – பெரியாறு பிரச்சனை அனைவரும்
அறிந்ததே. ஆழியாறு – பரம்பிக்குளம்,
பாண்டியாறு – புண்ணம்புழா, பம்பாறு,
சிறுவாணி என நீராதாரப் பிரச்சனைகளிலும் தமிழகத்தின் உரிமைகளை திட்டமிட்டு மறுக்கின்றது.
ஆந்திரத்தை பொறுத்தமட்டில் பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கின்ற
வகையில் 1990லிருந்து 2005 வரை 23 தடுப்பணைகளை கட்டிவிட்டது. 6 தடுப்பணைகளில் கடந்த
ஓராண்டில் அணைகளின் உயரத்தை உயர்த்திவிட்டது. சித்தூர் மாவட்டத்திலும், கிக்கினபென்டா
என்ற இடத்தில் தடுப்பணை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படியான அண்டை மாநிலங்கள் நீர்வரத்தை தடுக்கக்கூடிய வகையில் தடுப்பனைகளை கட்டிக்கொண்டு
போனால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும் பாராமுகமாக
இருக்கின்றது.
#தடுப்பணைகள்
#நீராதாரங்கள்
#Check_dams
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-07-2017
No comments:
Post a Comment