Monday, September 18, 2017

கி.ரா

நன்றி! நன்றி!!
--------------
கி.ரா அகவை 95, புதுவையில் தமிழர் பெருவிழா, 

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏராகத் திகழும் தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என  அழைக்கப்படும்  கி.ராஜநாராயணன் அவர்களின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் மாபெரும் இலக்கிய விழா  நேற்று முன் தினம் நடைபெற்றது. 
கி.ரா அவர்களின் இந்த விழாவிற்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்,  ராம்விலாஸ் பஸ்வான், வைகோ, சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கமல்ஹான், தமிழருவி மணியன்  என பலர் தங்களது வாழ்த்து செய்தியை அனுப்பி இருந்தனர். 

நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியின்திரு வேங்கட பிரகாஷ் ஒருங்கிணைப்பு வார்த்தைகள்
நயத்தோடு சிறப்பாக செய்தார்..

விழாவில் நான்  வரவேற்பு
உரையாற்றினேன். 

திரு பழ.நெடுமாறன்தலைமை
உரையாற்றினார், தனது உரையில் கி.ரா தமிழர்களின் அடையாளம் என குறிப்பிட்டார்.

திரு நல்லகண்ணு பேசுகையில் 
கால் சட்டை உடையுடன் சீனிவாசராவ் கம்யூனிச வகுப்பெடுத்த தருணத்தையும் கி.ரா அவர்கள் கம்யூனிச இயக்கத்தில் எனக்கு முன் உறுப்பினர் என பழைய நிகழ்வுகளை  விவரித்தார்.
மேடையில் கி.ராவின் பெயர்த்திக்கு மதமறுப்பு செய்து வைத்ததை வெகுவாக பாராட்டினார். 

நீதிபதி ஆர்.மகாதேவன் தனது உரையில் கி.ரா அவர்கள் கிராம அடையாளத்தை, கிராம சொல் வழக்குகளை  உலகுக்கு பறைசாற்றிய எழுத்தாளர் என குறிப்பிட்டார்.

திரைக்கலைஞரான சிவகுமார் புராண இலக்கியத்தையும்,கி.ரா.வின் கோபல்ல கிராமம் போன்ற படைப்புகள் உணர்த்திய பண்பாட்டையும் பரவசத்துடன் பேச்சில் அடுக்கினார்.


திரு நாஞ்சில் நாடன் பேசினார் என்பதை விட கொந்தளித்தார் என சொல்லலாம். கி.ரா அவர்களுக்கு  எடுக்கின்றோம். இதில் தமிழக அரசியல்ஆளுமைகளுக்கு கலந்துக் கொண்டு பாராட்ட ஏன் மனமில்லை என கேரளாவையும், மேற்கு வங்கத்தையும் ஒப்பிட்டு விளாசினார். 

சிபிஎம் முன்னனி தலைவர்களில் ஒருவரும், செம்மலர்  ஆசிரியருமான திரு எஸ்.ஏ பெருமாள் பேசுகையில் தெற்குச்சீமை இலக்கிய படைப்பாளிகளின் முன்னத்தி ஏர், எங்களுக்கு எழுத்துல வாசலை திறந்த திறவுகோல் என குறிப்பிட்டு கெளரவித்தார். 

சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சிறப்பாக , மண்வாசம் மிக்க வார்த்தைகளால்   நூல் ஆய்வுரை வழங்கினார்.புதுவையில் அமர்ந்
திருக்கின்றோமா நெல்லையில் தேநீர் கடையில் அமந்திருக்கின்றோமா என எனக்குள் கேட்டுக் கொண்டேன். அவருக்கேயுரிய கிராமத்து சொல்
நடையில் சிறப்பித்தார். 

கி.ரா அவர்கள் இந்த விழாவில் மிகுந்த மகிழ்சியும் நெகிழ்ச்சியும் கொண்டு ஏற்புரை வழங்கினார்.  தனது 95வது வயதிலும் கூட  ஏறத்தாழ 80நிமிடங்கள் நீண்டது அவரது ஏற்புரை. அவர் தனது ஏற்புரையில் "தாடிக்கும் பொடிக்கும் இடையில் பிறந்தவர் என குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் ஆனால் என்னிடம் தாடியும் தடியும் தான் இருக்கின்றது.  பொடி பொடுவதில்லை  பொடி வைத்து எழுதுவதில்லை என்ற பொருளில் கூறினார். சாதி, மதங்கள் மறைய வேண்டும் என குறிப்பிட்டார். தனது பேச்சுடன் சாதி, மதம் மறுப்பை நிறுத்தி விடாமல் அதே மேடையில் மதமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார். 
தனது மகன் (விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட பற்றின் காரணமாக இப்பெயரை சூட்டினார்) பிரபாகரன் அவர்களின் மகள், தனது பெயர்த்தியுமான செல்வி கம்சாவிற்கும் மணமகன் ஆசிப் அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். விழாவில் அவரது துணைவியார் கணவதி அம்மாள் அவர்களும் கலந்துக் கொண்டார். 

கலாப்ரியா, இளம்பாரதி, , பவா செல்லதுரை,  உதயசங்கர், கிருஷி 
நாறும்புநாதன் கரிசல்  எழுத்தாளர்கள், நெல்லை மாவட்ட இலக்கியவாதிகள்,  ஜெயப்பரகாசம், பேராசிரியர் பஞ்சாங்கம், வெங்கட சுப்பு நாயகர், புதுவை இளவேனில், சிலம்பு செல்வராஜ் ஆகியோர் விழாப் பணிகளை முன்னின்று நடத்தி சிறப்பித்தனர். 

கி.ரா அவர்களின் மகன் ரா.பிரபாகர் நன்றியுரை ஆற்றினார். 

கி.ரா அவர்களின் தனிப்பட்ட பிறந்தநாள் விழாவாக அல்லாமல் தமிழர்களின் இலக்கிய விழாவாக சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கி.ரா நண்பர்கள் சார்பாகவும், கதை சொல்லி சார்பிலும், பொதிகை-பொருநை - கரிசல் அமைப்பின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
...........

"மனித இயல்புகளை சொல்வது தான் இலக்கியம். அதை தைரியமாக சொல்வதை வரவேற்பது அவசியம்" என்று கி.ரா கூறுகிறார்.

1923ல் பிறந்த கி.ராஜநாராயணனுக்கு நேற்று 95வது பிறந்நாளை கி.ரா - 95 என்ற தலைப்பில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. இதை அடியேனும் முன்னின்று பல ஏற்பாடுகளை செய்தவன் என்ற முறையில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்த விழாவில் கி.ரா. எழுதிய நூல்கள், அவரைப் பற்றிய கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அவரது வாழ்வை மையப்படுத்திய ஆவணப்படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அவரது கதைகளை குறித்தான அனுபவங்களை கதைச்சொல்லிகளும், மாணவர்களும், எழுத்தாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாண்டு கரிசல் இலக்கிய விருது 'தனம்' இலக்கிய காலாண்டிதழுக்கு வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளருக்கான கரிசல் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்டது. வாகை முற்றம் என்ற தலைப்பில் கி.ரா. வாசகர்களுடன் உரையாடிய நிகழ்வும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவரின் பேச்சு, "நாட்டுப்புற கதைகளை சேகரிக்கம் போது இந்த கதைகளை சேகரிக்காதீர்கள் என்பார்கள். மக்களிடத்தில் இருந்துதான் சேகரிப்பேன்.  விரசமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தான் சேகரிப்பேன். மொழி என்பது, இது உண்டு, இது இல்லை என்பதில்லை. சிறு குழந்தைகள் பள்ளிகளில் கற்கும் மொழிகளில் முதலில் கெட்ட வார்த்தைகளை கற்பார்கள், அகராதி வாங்கியதும் அந்த வார்த்தைகளை தேடி பார்ப்பேன்."

மனித இயல்புகளை சொல்வது தான் இலக்கியம். தைரியமாக சொல்வதை வரவேற்பது அவசியம். காலமெல்லாம் ஓதுக்கி வைக்கக்கூடாது. தற்போது வேறு வடிவத்தில் மாறியுள்ளது. உயர் குலத்தோரை விடவும் தாழ்ந்த குலத்தோர் மிகத்திறமையுடன் இருந்தால் ஏற்க மாட்டார்கள். இதன் வேரானது ஜாதி என்றிருக்கும். அதை எப்படித்தான் ஒழிப்பது என்ற கேள்வி வரும். ஜாதியை உண்டாக்கியவர்கள் வருத்தப்படும் வகையில் ஏதும் நடக்காத வரையில் அது ஒழியாது. 

சிலர் எல்லாவிதமான வீடுகளிலும் சாப்பிடுவார்கள். தங்கள் வீட்டு பெண்ணை இதர  சமூகத்தினருக்கு திருமணம் செய்து தர மறுப்பார்கள். உண்மையில் திருமணம் தான் இடிக்கிறது. திருமணத்தை நிறுத்துங்கள். பிரான்ஸ் நாட்டில் திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் வாழும் போக்கு உள்ளது. அதனால் திருமணத்தை நிறுத்துவது தான் சமூகத்தின் விடிவுகாலம். இதை யாரும் கேட்க மாட்டார்கள். பின்னர், இப்படி சொன்னதை நினைத்து பார்ப்பார்கள். எனது பேத்தி, முஸ்லிம் மதத்தினை பின்பற்றுபவரை திருமணம் செய்ய விரும்பினாள். வெள்ளியன்று தான் திருமணம் நடந்தது. இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் போது என் வீட்டில் நிஜமாக ஒரு திருமணம் நடந்துள்ளது. தைரியமாக ஏதாவது செய்ய வேண்டும். இதை தியாகம் என்று சொல்ல மாட்டோம். குழந்தைகளின் சந்தோஷம் தான் முக்கியம்" என்று பேசினார். 

அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்  சிறப்புடன் அரங்கேறின.

#கிராஅகவை95 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-09-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...