Saturday, June 2, 2018

அன்றைய கிராம வாழ்க்கை...

வீட்டுக்குள்ளே நேத்து வரைக்கும் உபயோகபடுத்திக்கிட்டு இருந்த பொருட்கள்ல சிலது இப்ப கேட்பார் இல்லாம கெடக்குறது பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு.

எங்க வீட்டுக்குள்ளே நொழைஞ்சவுடனே வலப்பக்கம் கதவு பக்கத்துல குத்து உரல் கெடக்கும்  உரல் அதுக்கு மேல கல்லுல ஒரு அடி உயர வளையம் உள்ள போடுற தானியங்கள் தெரிச்சி வெளியில வராம இருக்க அது உதவும்.குத்துற உலக்கைய அப்படியே கதவு மூலையில சாய்ச்சி வைச்சிருப்பாங்க. 

அது எங்க வீட்டுக்கு எவ்வளவு உழைச்சிருக்கும்.பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு  எவ்வளவு உபயோகமா இருந்துருக்கும் நெனச்சா ஆச்சரியந்தான்.

 ஒரு காலத்துல அந்த உரலுக்கு ரெண்டு பக்கம் நின்னு ஆளுக்கு ஒரு ஒலக்கைய வச்சி ஆங் ஊங்னு மூச்சுச் சத்தம் விட்டு ஈரக்கம்பம் புல்ல குத்துறதும்,நெல்ல அரிசியாக்குறதும்,வரக பக்குவமாத் தொவட்டுறதும் எம்புட்டு வேலை நடந்திருக்கும்.

அத பாக்குறதுக்கு இந்தத் தலைமுறைக்கு கொடுப்பினை இல்லை. 

வீட்ல ஒரு கல்யாணம்னா உரலுக்கும்,ஒலைக்கைக்கும் மஞ்சள்,குங்குமம் வச்சி பூச்சரத்தை கட்டி வச்சி விரலி மஞ்சள உரல்ல போட்டு ஊர்ல இருக்குற பொம்பளக எல்லாரையும் அவங்க வீட்ல போய் வீட்டுக்கு அழைச்சி வெத்தலை பாக்கு,குங்குமம் ,பூ வெல்லாம் கொடுத்து வந்தவங்க ஆளுக்கு ஒரு கை மஞ்சள கொஞ்ச கொஞ்ச நேரம் ஒலக்கைய பிடிச்சி இடிச்சி பொடியாக்கிட்டு போவாங்க. அது ஒரு மங்கள நிகழ்வு.

இத கூட இந்த பொம்பளைகள கூப்பிட்டு செய்றது கூட ஒரு காரணமாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.ஆமா அவங்க காதுல விசயத்தை போட்டா தான் நடக்கப் போற நல்ல காரியத்தை ஊர்ல எல்லாருக்கும் கொண்டு போய் சேர்த்துருவாகன்னு கூட இருக்கலாம்.

இதே போல அதே இடத்தில மேல் பக்கம் சுவரோரமா நாலஞ்சி கல் திருகை கெடக்கும். அந்த திருகை எப்படி இருக்கும்னா ரெண்டு வட்ட கல் பலகை அதுல கீழ் கல் பலகை நடுவுல ஒரு மர அச்சு இருக்கும்.மே கல் பலகையில மூனு கண் ஓட்டையிருக்கும்.ஒரு கண் நடு அச்சுல உக்காருர மாதிரி இருக்கும்.இன்னும் ரெண்டு கண்ல திரிக்கப் போற தானியம்,பயறு வகைகள போடுற மாதிரி ஒரு அமைப்பா இருக்கும்.மேக்கல்லுல. ஒரு பக்கம் மரக்கைப்பிடி வைக்க  வசதியாவும்,இன்னொரு பக்கம் சுத்தி விட தோதா கல்லுலயே வளைவா ஒரு அமைப்பா செஞ்சிருப்பாக.

இதுல வரக அரிசியாக்குவாங்க,பயித்த ரெண்டா ஒடச்சி பருப்பாக்குவாங்க,மாவும் திரிப்பாங்க.அந்தந்த வேலைக்கு ஏத்தா மாதிரி திருகை உள் பக்கம் அளவா சணல் சாக்க வெட்டி களி மண்ண பக்குவம் பண்ணி சாக்க அதுல மேல கீழ ஒட்டி திரிப்பாங்க அது தேர்ந்தெடுத்த அனுபவஸ்தர்க பொம்பளைக தான் இந்த வேலைய பார்ப்பாக.

ஒரு கைய வச்சி சுத்த இன்னொரு கைய வச்சி தள்ளவும் தானியத்தை அள்ளிப்போடவும் சுத்தி விட்டுக்கிட்டே இருப்பாக. பாட்டு பாடிக்கிட்டே திரிப்பாக.இப்ப அதெல்லாம் கேட்பார் இல்லாம உட்காருர பலகை ஆகிப்போச்சு

.அப்புறம் பின் பக்க கொல்லையில இட்லி மாவு,தோசை மாவு, சட்னி அரைக்கிற ஆட்டுரலு எனக்கு என்னன்னு சக்களத்தி கிரைன்டர்க்கு  தன்னோட வாழ்க்கைய விட்டுக்கொடுத்துட்டு பரிதாபமா கெடக்கு.

அப்புறம் அம்மிக்கும் இதே நெலமை எம்புட்டு மசாலாவ ருசியா அரைக்க உதவியிருக்கும். மிக்ஸி வந்து அதை அனாதையாக்கிருச்சி பாவம்.

அப்புறம் அடுப்படியில விறகு அடுப்ப ஒடைச்சி மேடையாக்கியாச்சி சின்ன பிள்ளைகளுக்கு பொக சூறு எடுத்து கண்ணு பட்டுறக்கூடாதுன்னு கருப்புபொட்டு  நெத்தியிலும் கண்ணக்குழியிலயும் வைக்கிற பொக சூறு கொடுக்கிற பொகைக்கூடும் காணாம போச்சி.

ஊண்டி வச்சி கம்புல ரெண்டு கயித்து வளையத்துல மோர் மத்த மாட்டி எங்க சுப்பாலு பாட்டி எங்க அப்பாவோட அம்மா கொடம் கொடமா தயிரச் சிலுப்பி மோரைக்கடைஞ்சி வெண்ணையெடுத்து தெருவுல இருக்குறவங்க, உறவுக ,விருந்தாளிகன்னு வீடு தேடி கேட்டு வர்ரவங்களுக்கெல்லாம் மோர்ர அள்ளிக்கெடுக்கும். அந்த மத்து எந்த குப்பையில போச்சின்னு கூடத் தெரியல.

இன்னும் குதுவை,குந்தானி,கும்பா,
களஞ்சியம்ன்னு எத்தனையோ காணாமா போச்சி இதெல்லாம் நாளைக்கு ஒரு காலத்துல கீழடியில தோண்டி நோண்டி எடுத்து பார்த்தா மாதிரி பார்த்துட்டு என் பாட்டன் பூட்டன் பெருமைய இந்த ஒலகம் நிச்சயமா பேசும். 

இப்படி ஒன்னு இருந்துச்சின்னு இந்த தலைமுறையும் பெரியவங்ககிட்ட கேட்டாவது தெரிஞ்சிருக்கட்டுமே.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...