Tuesday, June 5, 2018

காவிரி விவகாரம் ....... மிஸ்டர் கமல்ஹாசன் அவர்களே, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆக முடியாது.

காவிரி விவகாரம் .......
மிஸ்டர் கமல்ஹாசன் அவர்களே, 

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆக முடியாது. 
————————————————
கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரிநீர் குறித்து பேச்சுவார்த்தை  நடத்தியதாகவும் , தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை பெறவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரிநீர் பிரச்சனைக் குறித்து அவருக்கு என்ன தெரியும்? அ , ஆ என்றளவிலாவது பிரச்சனை குறித்து அறிவாரா? ஏதோ அரசியல்வாதி வேடம் போட்டார் என்பதற்காக தெரியாத வசனத்தை பேசக் கூடாதல்லவே. 

கடந்த பல ஆண்டுகளில் இருபது முறைக்கு மேல் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம், மேலாண்மை வாரியம் என அலைகழிக்கப்பட்ட அரசியலை அறிவாரா? அல்லது அதுகுறித்து யாரிடமாவது தகவலை கேட்டறிந்தாரா? 

தசாவதாரம் என்ற பெயரில் சாதனை செய்ய,  ஒருவரே அரிதாரங்களையும் பூசிக்கொண்டு  எல்லா வேடங்களையும் போட்டு  திரையில் கைத்தட்டல் வாங்குவதற்கு இதென்ன சினிமாவா? 

இறுதியாக பெற்ற தீர்ப்பு என்பது பலக்கட்டத்தில் நடந்த சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்ற உரிமை. இதனை நிலைநாட்டுவது மத்திய அரசின் கடமை. பேச்சுவர்த்தை என மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதா?

யார் அந்த குமாரசாமி? திமுகவின் தயவில் பிரதமர் பதவியில் அமர்ந்து திமுகவிற்கு தூரோகம் இழைத்த தேவகவுடாவின் மகன் தான்.

தேவகவுடா குறித்த சிறு நினைவூட்டல் எனது ஆதங்கத்திற்கான நியாயத்தை உங்களுக்கு புரிய வைக்கும் என்பதால் சிறு பகுதி மட்டும் குறிப்பிடுகின்றேன்.

முன்னாள் பிரதமர் கர்நாடகத்துக்கு முதல்வராக இருந்த காலத்தில்  தேவகவுடா காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடியும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தேன். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கனகராஜ் , தேவகவுடாவிற்கு நோட்டீஸ் அனுப்பினார்.  1996ல் தேவ கவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை தாக்கல் செய்தவுடன் அலறியடித்து தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்தபின்னும் தமிழகத்தை எதிரியாகப் பார்த்தவர் தேவகவுடா. முன்னாள் பிரதமர் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இன்றைக்கு பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்சினையை மாநிலங்களிடைய மத்தியஸ்தம் செய்யவேண்டியவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கட்ராமைய்யாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்படி அரசியல் சாசன கடமைகள், மரபுகள், பண்பாடுகளை கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு முரட்டுத்தனமாக அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. 

இந்த நிலையில் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினால், குமாரசாமி  காவிரிநீரை திறந்து விட்டு அரசியலில் துறவு  வாழ்க்கையை  மேற்கொள்ள  முன்வருவாரா?

தேவதூதன் ஏசுநாதர் போல தமிழக அரசியலில் சிலுவை சுமக்கும் வேடம் போடுகின்றாரா? மூவடியால் உலகளந்த திருமாலாக அரசியலில் அவதாரம் எடுக்கின்றாரா?  சினிமாவில்  தச அவதாரம் மட்டுமல்ல சதம் அவதாரம் கூட எடுக்கட்டும். இது மாநிலங்களுக்கு இடையே உள்ள சட்டப்பிரச்சனை. இது ஆள்பவர்கள் பேச வேண்டிய விசயம். ஆழ்வார்பேட்டையார் பேச வேண்டிய விசயம் இல்லை.  எல்லாவற்றிலும் முந்திக் கொள்வதாக கருதி மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டாம்..

#கமல்ஹாசன் 
#காவிரிநீர்பேச்சுவார்த்தை 
#Cauverymanagementboard 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*_
05-06-2018

No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...