Tuesday, June 12, 2018

கோவையும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ்

கோவையும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ்
-------------------
இங்கிலாந்தைச் சார்ந்த ராபர்ட் ஸ்டேன்ஸ் தனது 17வது வயதில் 96 நாள் கப்பலில் பயணம் செய்து 24-12-1858இல் சென்னைக்கு வந்தார். பின் கோவை, ஊட்டி என அலைந்து திரிந்து தன்னுடைய டீ, காபி வியாபாரத்தை துவங்கினார். கோவையில் மேலைநாட்டு கல்விமுறை சார்ந்த பள்ளியை 1862இல் அமைத்தார். இன்றைக்கும் கோவை நகரின் மையப்பகுதியில் ஸ்டேன்ஸ் மில்லின் பழைய கட்டிடங்கள் கண்ணில்படுகின்றன. இந்த இடம் நரசிம்ம நாயுடுவின் நிலமாகும். இவரிடம் 13 ஏக்கர் நிலம் வாங்கி ஸ்டேன்ஸ் மில் என்ற பெயரில் 18-05-1890இல் திறக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வெற்றிகரமாக இயங்கியது.

ஸ்டேன்ஸ் ஆலையை சுற்றிப்பார்க்க அப்போது ஓர் அணா கட்டணமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, லட்சுமி மில்ஸ் நிறுவனர் குப்புசாமி நாயுடுவும், பி.எஸ்.ஜி. வெங்கடசாமி நாயுடுவும் பருத்தி ஆலைகளை கட்ட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் விவசாயம், கால்நடை, புகையிலை வியாபாரத்தில் இருந்த இவர்களும், இவர்களைச் சார்ந்தவர்களும், பருத்தி, நெசவாலை என்ற எண்ணத்திற்கு தள்ளியது இந்த ஸ்டேன்ஸ் ஆலைதான்.

கோவையில் 1895இல் மாட்டு வண்டி, குதிரை வண்டி என்ற போக்குவரத்து இருந்த நேரத்தில் பிரேசர் என்ற இங்கிலாந்துக்காரர் ஸ்டேன்ஸிடம் வேலை பார்க்க வந்தபோது சைக்கிளை பயன்படுத்தினார்.
இந்த சைக்கிள் எப்படி இயங்குகிறது என்று குப்புசாமி நாயுடுவும், பி.எஸ்.ஜி. வெங்கடசாமி நாயுடுவும் ஸ்டேன்ஸிடம் கேட்டபோது; அவர்களுக்கும் சைக்கிளை வாங்கிக் கொடுத்தார் ஸ்டேன்ஸ்.
அந்த சைக்கிளைக் கொண்டு கிராமங்களுக்குச் சென்று பருத்தியை விலைக்கு வாங்கி தன்னுடைய பருத்தி அரவை ஆலைக்கு வழங்குமாறு இவர்களிடம் ஸ்டேன்ஸ் கேட்டுக் கொண்டார். இவர்களும் நேர்மையாக நடந்து கொண்டதால் ஸ்டேன்ஸ், இம்பீரியல் வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து நெசவாலைகளை தொடங்க உதவி செய்தார்.

ஜி.டி.நாயுடு ஸ்டேன்ஸிடம் அப்ரண்டிஸ் பிட்டராக ஆரம்பக் கட்டத்தில் சேர்ந்து படிப்படியாக முன்னேறினார். ஜி.டி.நாயுடுவின் திறமையை அறிந்து, தனியாக தொழில் செய்யுங்கள் என்று சொல்லி ரூபாய். 4,000/- கொடுத்து ஒரு பேருந்தை ஓட்ட அனுமதியையும் ஸ்டேன்ஸ் வாங்கிக் கொடுத்தார். அந்த பேருந்து பொள்ளாச்சியில் இருந்து பழனி வரை இயங்கியது. டெக்ஸ்டூல் பாலசுந்தரம் போன்ற கோவையைச் சார்ந்தவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் போய் படிக்க ஸ்டேன்ஸ் உதவினார்.

இம்பீரியல் பேங்க் மேனேஜர் வெள்ளைக்காரர். அவர் யாரையும் மதிப்பதில்லை. இந்தியர்களை நிற்கவைத்தே பேசிவிட்டு அனுப்பிவிடுவார். இதை பொறுக்காத பி.எஸ்.ஜி கங்கா நாயுடு தன்னுடைய வீட்டிலிருந்த நாற்காலியை எடுத்துக் கொண்டு போய் அந்த இம்பீரியல் பேங்க் மேனேஜர் முன் போட்டு அமர்ந்து பேசிய போது, மேனேஜர் கோபப்பட்டு பிரச்சனைகள் ஆகிவிட்டன. அப்போது ஸ்டேன்ஸ், இம்பீரியல் பேங்க் மேனேஜரிடம் நீங்கள் செய்தது தவறு என்று கங்கா நாயுடுவையும், மேனேஜரையும் சமாதானப்படுத்தியதும் உண்டு.
கோவை அரசுக் கலைக் கல்லூரி, 1852இல் துவங்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, ஸ்டேன்ஸ் ரூ. 1,500/- நிதியளித்து அந்த பிரச்சனையை தீர்த்தார். இந்த காலக்கட்டத்தில் கோவை – திருச்சி சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் அலுவலகங்கள், கடைகள் ஸ்டேன்ஸ் பெயரில் கட்டப்பட்டன. கோவை நகர் மட்டுமல்லாமல், அதன் சுற்று வட்டாரங்களில் டீ, காபி அறிமுகமானது.

ஸ்டேன்ஸ் துரை தனக்கு ஆலைகளை கட்டுவதற்கு நிலமளித்த நரசிம்மலு நாயுடுவை சென்னை மாகாண ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்று கௌரவப்படுத்தினார்.
திமுக மாணவர் மாநாடு, 1957இல் ஸ்டேன்ஸ் அரங்கில் தான் நடந்தது. மாநாட்டிற்கு அண்ணாவால் வரமுடியாத நிலை. அன்றைய மாணவர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.மதியழகன், அவருடைய சகோதரர் கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இப்படி, கோயம்புத்தூர் நகரின் அடையாளமாக வரலாற்றில் ஸ்டேன்ஸ் திகழ்கிறார்.

தன்னுடைய 79வது வயதில் ஆங்கில அரசு அவருக்கு ‘சர்’ பட்டத்தினை வழங்கியது. ஸ்டேன்ஸ் தன்னுடைய 95வது வயதில் 06/09/1936இல் காலமானார். அவருடைய மனைவியும் இங்கேயே காலமாகி, குன்னூர் “All Saint Church”இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

கோவை மாநகர வளர்ச்சிக்கு ஸ்டேன்ஸூடைய பங்கு அளப்பரியதாகும்.

https://goo.gl/1AYMLB

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

11-06-2018


No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...