Monday, November 11, 2019

கழகத்_தலைவரும், #மிசாவும் -

*#கழகத்_தலைவரும், #மிசாவும் -3 
————————————————
எனது முகநூல் பதிவில்;1976ல் அவசரநிலை காலம் மற்றும் கழக தலைவர் மிசா கைதினை குறித்த பதிவை படித்து விட்டு நினைவாற்றலோடு சரியாக எழுதியுள்ளீர்களே என்று காவல்துறையின் ஓய்வுப் பெற்ற முன்னாள் உயர் அதிகாரி திரு. அலெக்சாண்டர் அவர்கள் கைபேசியில் இன்று பேசும் போது என்னிடம் கூறினார். மேலும் அவர்“சரியாக பொருத்தமான நேரத்தில் பழைய நினைவுகளை எழுதியுள்ளீர்களே” என்று குறிப்பிட்டார். 

செய்தித்தாள்களில் வரும் என்னுடைய பத்திகளையும், சமூகவலைத்தளங்களில் வரும் என் பதிவுகளையும் படித்துவிட்டு தன்னுடைய கருத்தை தெரிவிப்பது அவரின் வடிக்கை. அவரிடம் மேலும், “அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்” என்று நான் கேட்டேன். “அவசர கால துவக்கத்தில் கடலூர், விழுப்புரம் அடங்கிய அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் உளவுத்துறை (ஸ்பெஷல் பிராஞ்ச் எஸ்பி) காவல்துறை கண்காணிப்பாளாராக இருந்தேன். உளவுத்துறையின் சிறப்பு பிரிவின் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தேன். 

பிறகு 11.06.1976ல் சென்னைக்கு மாற்றப்பட்டேன். எனக்கு உயரதிகாரியாக திரு.மோகன் தாஸ் டி.ஐ.ஜி இருந்தார். அப்போது எங்களுக்கு கிடைத்த தகவலின்படி மிசாவில் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் தான் நீங்கள் குறிப்பிட்ட எம்.கே.நாராயணன் மத்திய அரசின் special intelligence buerau-வின் தலைவராக இருந்தார். அதை subsidiary intelligence bureau என்றும் அழைப்பதுண்டு. இன்றும் அவரிடம் சென்று கேட்டால் தெளிவாக நடந்த நிலவரத்தை சொல்வார்” என்று சொன்னார். 

நான் மேலும் அவரிடம், “ஏ.ஆர். இராமநாதன், அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை (Deputy Secretary-Public) அவர்கள் இடத்தில் தான் மிசாவில் கைதானவர்களின் கண்காணிப்பு பொறுப்பு இருந்ததே” என்று சொன்னதற்கு அவர் “ஆம்” என்று கூறினார். அப்போது தமிழகத்தின் தலைமை செயலாளர் திரு. கார்த்திகேயன் இருந்ததாகவும், நான் சொன்ன தகவல் உண்மை தான்” என்று கூறினார். முன்பெல்லாம் இப்போது கைது செய்வது போல உறவினர்களுக்கு தெரிவித்தல், அதற்கு பிரமாண வாக்குமூலம்,சாட்சிகளின் முன் கையெழுத்து வாங்கும் வழக்கம் எல்லாம் அப்போது பின்பற்றப்படவில்லை. இப்போது தான் இவை அதிகமாக நடைமுறையில் உள்ளது. 

அன்றைக்கு சென்னை மத்திய சிறை அதிகாரியாக இருந்த வித்யாசாகர் சிறையில் கொடுமைகள் செய்ததாக தகவல்கள். மேலும் அவரிடம், “இன்றைக்கு மத்திய மோடி அரசில் வெளி உறவு அமைச்சராக இருக்கின்ற ஜெய்சங்கர் அவர்களுடைய தந்தையார் கே.சுப்ரமணியன் தான் அன்றைக்கு தமிழகத்தின் உள்துறை செயலாளராக இருந்ததாக தகவல்கள் சொல்கிறார்களே, அது உண்மைதான?”என்று நான் கேட்டதற்கு, “ ஆம் உண்மைதான், சுப்ரமணியன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறையில் கொடுமைகள் நடக்கின்றன என்று தகவலை கேட்டு அதை விசாரித்து அவருடைய பரிந்துரையின் பேரில் தான் இது குறித்த முழுமையாக விசாரிக்க இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டதாகவும் கூறினார்.

இவ்வளவு வெளிப்படையா கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டது குறித்து இந்தநேரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவது எதற்கு என்று தெரியவில்லை. வேறு ஏதேனும் வழக்கில் அவர் கைது செய்யப்படிருந்தால் அதற்கான முதல் தகவல் அறிக்கை இருக்க வேண்டுமே?அவர் மிசாவில் தானே கைது செய்யப்பட்டார். எந்த வித புரிதலும் இல்லாமல் ஏதோ போகிற போக்கில் சிலர் பேசிக் கொண்டிருப்பது முறையற்றது என்றார்.

நாட்டில் பிரதான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் நம்முடைய நேரத்தை செலவிடுவது நியாயம் தானா?. 

மேலும் அவர் சொல்லும்போது திமுகவிற்கு ஆலந்தூரில் அன்றைக்கு உதவியாக இருந்த தொழிலதிபர் கதிரேச முதலியார் கூட எந்த சம்பந்தமும் இல்லாமல் மிசாவில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் உண்டு.” என்று இதுபோன்ற செய்திகளை பேசிக் கொண்டோம்.

எனக்கு நன்றாக தெரியும் இந்திரா காந்தியிடம்  எம்.ஜி.ஆர் தஞ்சாவூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட ஆவண செய்வதாக உறுதி சொல்லியிருந்தார்.  முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் தஞ்சாவூர் தொகுதி காலியாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியிடம் உறுதியளித்தவாறு நடந்துக் கொள்ள முடிய வில்லை. அப்போழுது கர்நாடாகாவில் சிக்மகளூரில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸிடம் சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நெடுமாறன் தூது சென்றதெல்லாம் நினைவில் உள்ளது. அப்போது நீங்கள் எல்லாம் உடனிருந்தீர்கள் என்று அவர் சொன்னதற்கு,”இன்றோடு நெடுமாறன் தலைமையில் காங்கிரசை விட்டு வெளியேறி இன்றோடு 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றேன். இந்திரா காந்தியும் பி.வி.நரசிம்மராவும் ரஜினி படேலும், மராத்திய முன்னாள் கவர்னர் சங்கரநாராயணனும் நெடுமாறனுக்கு அன்று காங்கிரசில் ஆதரவாக இருந்தார்கள். டெல்லியில் இருந்த 
ஏ. ஆர். அந்துலே, வசந்த சாத்தே என்ற இரண்டு மனிதர்களின் ஆலோசினையினால் நெடுமாறன் காங்கிரசை விட்டு வெளியேற்றப்பட்டார். இதில் பல அரசியல் விடயங்கள் உள்ளது ஆனால் அதை வெளிப்படையாகசொல்ல இயலாது” இவ்வாறு எங்களுடைய பேச்சு அமைந்தது.

கடந்த 48 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசியல் சதுரங்கத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை பார்த்தும் புரிந்தும் கடந்து வந்துள்ளேன். அறிந்ததையும் சொல்ல வேண்டிய நிலையில்  இதை பகிர்கின்றேன்.  பாசாங்கிற்காக இல்லாமல்   எதார்த்தமாக சொல்லப்படுவது  என்னுடைய நிலைப்பாடு  என்றும்   எந்தவொரு எதிர்பார்ப்பும்   இல்லாமல்  என் வாழ்க்கையில் நகர்ந்து வருகிறேன்.

சீர்மை மறவேல் / Remember to be righteous.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
11-11-2019.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
•••••••
#பழைய_பதிவு
*#கழகத்_தலைவரும், #மிசாவும்… 
#சில_அறியாச்_செய்திகள்.*
---------------------------------
அவசர நிலைக் காலத்தில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்களுக்கு திருமணம் நடந்த சில நாட்களிலேயே மிசா கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்து நெஞ்சுக்கு நீதியில் எழுதியுள்ளார். 

கடந்த வாரம் இதுகுறித்தான சர்ச்சை எழுந்தவுடனேயே நீதிபதி இஸ்மாயில் கமிசன் அறிக்கையையும், சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் வாசிங்டன் டி.சி.க்கு அனுப்பிய கேபிள் செய்தியையும் என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தேன். இந்த இரண்டிலும் கழகத் தலைவர் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்த பதிவை செய்திருந்தேன். 

இன்னும் அதை குறித்தான சில செய்திகள் வருமாறு. 

1. பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அன்றைக்கு இயங்கிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி,ஆனந்த மார்க் போன்ற பல அமைப்புகளில் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்தபோது, கே.கே.ஷாவை கவர்னர் பதவியிலிருந்து மாற்றி ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரா மோகன்லால் சுகாடியா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், தவே ஆகிய இருவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் மிசா கைதிகள் பட்டியல் தயார் செய்தபோது, 1976 காலக்கட்டத்தில் அந்த பட்டியலில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவசர நிலைக் காலத்தில் மத்திய ராஜாங்க உள்துறை அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவிற்கும் இந்த பட்டியல் அனுப்பப்பட்டது. 

அந்த ஆவணங்கள் இன்றைக்கும் நிச்சயமாக தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலகத்தில் இருக்கும். அந்த பட்டியலில் இருந்த பெயர்களை நானே வாசித்ததுண்டு. எப்படியெனில் ஸ்தாபனக் காங்கிரசும், ஆளும் இந்திரா காங்கிரசும் இணைந்த போது மோகன்லால் சுகாடியாவை சந்திக்க அந்த காலக்கட்டத்தில் அடிக்கடி கின்டி ராஜ்பவனுக்கு செல்வதுண்டு. அப்படி செல்லும் போது, கவர்னர் அலுவலகத்தில் தமிழகத்தில் இருந்த மிசாவில் கைது செய்யப்பட்டோரின் பட்டியல் அன்றைக்கு சென்னை மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, கோவை மத்திய சிறை, மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை, புதுச்சேரி மாநிலம் என தனித்தனியாக வரிசைப்படுத்திய பட்டியல் இருந்தது. அந்த பட்டியலில் மு.க.ஸ்டாலின் என்ற பெயர் இருந்ததை நான் பார்த்ததுண்டு. அந்த ஆவணங்கள் தலைமைச் செயலகத்தின் கோப்புகளில் இன்றைக்கும் இருக்கும்.

2. அவசர நிலைக் காலத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் சில காலம் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, சாந்தோம் பகுதிகளில் தங்கியதுண்டு. அப்போது காங்கிரஸ் இணைப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் அவரை சந்திப்பதுண்டு. தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி இருந்ததால் ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவசர நிலை காலத்தில் சென்னையில் பாதுகாப்பாக இருந்தது. இந்த சூழ்நிலையில் ரயில் மூலம் கல்கத்தாவிற்கு பயணப்பட திட்டமிட்டார். அப்போது மத்திய உளவுத் துறை இந்த செய்தியறிந்து;அன்றைக்கு தமிழகத்தில் மத்தியஉளவுத் துறை பொறுப்பில் எம்.கே.நாராயணன் இருந்தார் (இவர் மன்மோகன்சிங் ஆட்சியில் அவரது அரசின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர். ஈழத்தில் முள்ளிவாய்காள் துயரத்தை தடுக்க தவறியவர்) ஜார்ஜ் பெர்ணான்டஸை கல்கத்தா பயணத்தின் போது பரோடா டைனமைட் போன்ற வழக்குகளில் இணைத்து கைது செய்து சிறையில் எம்.கே.நாராயணனின் ஆலோசனையின்படி
அடைத்தனர். அப்போது சென்னை மத்திய உளவுத் துறையின் பாண்டியன் (சங்கரன்கோவில்), கணபதி (முனிஞ்சிப்பட்டி), ராமர் (இராஜபாளையம்) போன்ற அதிகாரிகள் இருந்ததாக நினைவு. இந்த மூன்று பேரும் எங்களின் பகுதியை சார்ந்தவர்கள். இவர்களிடம் இருந்த அறிக்கையிலும் மிசாவில் கைது செய்யபட்ட பட்டியலில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் பெயரும் இருந்தது.

3. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரசோடு கூட்டணியில் அப்போது இருந்தது. கோவில்பட்டி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் சோ.அழகிரிசாமி 1976 இல் கிராமந்தோறும் மக்களை சந்தித்து பாதயாத்திரை நிகழ்ச்சிகள் நடத்தினார்.அதில் தோழமை கட்சியான ஆளும் காங்கிரசும் பங்கேற்றது. கோவில்பட்டி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் பங்கேற்றார். அந்த நிகழ்வில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி எஸ்.எஸ். தியாகராஜன், பிதப்புரம் ராமசுப்பு போன்றவர்களோடு நானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.அப்போது கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டு வரும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மகனும் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்று பேசினார் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அப்போது திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்படாத மாவட்டமாக இருந்தது.. மற்றொரு நாளில் ஆர்.நல்லகண்ணுவும் இந்த பாதயாத்திரையில் சோ.அழகிரிசாமி உடன் பங்கேற்றதுண்டு.

இப்படியான பல ஆதாரங்கள் உள்ளன. நான் சாமானியன் என்றாலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லையென்றாலும் 48 ஆண்டுகளில் ஸ்தாபனக் காங்கிரஸ் பணிகள், காங்கிரஸ் இணைப்பு, பழ. நெடுமாறனோடு தமிழ்நாடு காங்கிரஸ் (கா) கட்சியின் பொதுச் செயலாளர், ஈழத்தமிழர் பிரச்சனை, விவசாய சங்கப் போராட்டங்கள், மதிமுக உதயம், தலைவர் கலைஞர் கைது, டெசோ, தேர்தல் என பல களங்கள் பலவற்றையும் 1972லிருந்து கடந்து வந்துள்ளேன். பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர், வேலுப்பிள்ளை பிரபாகரன், நாராயணசாமி நாயுடு என இத்தனை ஆளுமைகளோடு என் பெயரைச் சொல்லி அழைக்கின்ற அறிமுகமும் தொடர்பும் உண்டு. ஏன் மறைந்த ஜெயலலிதா அவர்கள் கூட நல்ல அறிமுகமும் உண்டு. 
இந்த தகுதியின் அடிப்படையில் இந்த கருத்துகளை பதிவு செய்கிறேன். ஒரு நீண்டகாலப் பொதுவாழ்வில் உள்ளவர்கள் நடந்தது என்ன என்பதை சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் இருப்பதால் இந்த விடயத்தை பகிர்கிறேன். 

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08-11-2019.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...