Monday, October 9, 2017

குமரி மாவட்டத்தில்பேச்சிப்பாறை அணை கட்டிய மிஞ்சினி (மூக்கன் துரை)க்கு 150வது பிறந்த தினம்


மிஞ்சின் (மூக்கன் துரை) என்பவர் யார்?

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளில் பேச்சிப்பாறை அணையும் ஒன்று. குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரளியாற்றின் குற்ககே கட்டப்பட்டிருக்கிறது. இந்த அணையின் தண்ணீரை குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்திலும் பல ஊர்கள் பயன்படுத்துகிறது.
இந்த அணை உருவாக வெள்ளைக்கார இன்ஜினியர்கள் பலர் காரணமாக இருந்தபோதிலும், அணை கட்டும் பகுதியில் செயற்பொறியாளராக பணியாற்றிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்ஜின் தான் மக்கள் மனதில் நீக்கமற கலந்திருப்பவராகவும், இன்றளவும் மக்களால் பேசப்படும் பெருமைக்குரியவராக திகழ்கிறார்.
தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள், எந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு எவ்வளவு பெரிய கட்டிடங்களையும் அசாத்தியமாக கட்டி முடித்துவிடலாம். ஆனால் எந்த வசதியும் இல்லாமல் ஒரு நூற்றாண்டிற்கு முன், அடர்ந்த காட்டுப்பகுதியில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் வாழ்நாளை அணைகட்டும் பணிக்காக அர்ப்பணித்தவர் தான் இந்த மிஞ்சின்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வில்லியம் மிஞ்சின் - ஜுலியா கேத்தரின் தம்பதியினருக்கு 08.10.1868ம் ஆண்டு பிறந்தவர். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரை நகராட்சியின் முதல் இன்ஜினீயராக தனது பணியை தொடங்கினார். அப்போது திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியில் இருந்தது குமரி மாவட்டம்.
அந்த நேரத்தில், பேச்சிப்பாறை அணை கட்டும் திட்டபணியில் அவர் நியமிக்கப்பட்டு அணைக்கான களப்பணி அலுவலகம் குலசேகரத்தில் அமைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் இப்போதைய குலசேகரம் அரசு மருத்துவமனையாக மாறியது. அவருக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. தனது மனையியுடன் வசித்து வந்த அவர் தினமும் குதிரைவண்டி மூலம் பேச்சிப்பாறைக்கு சென்று அணை கட்டும் பணியை செய்து வந்தார். மிஞ்சினின் மூக்கு சற்று பெரியதாக இருந்ததால் அவருக்கு மக்கள் மூக்கன் துரை என அழைத்தனர்.

1897ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணி 1906ம் ஆண்டு நிறைவடைந்தது. அணையின் உயரம் 42 அடி (சுதந்திரத்துக்கு பின்னர் உயரம் மேலும் 6 அடி உயர்த்தப்பட்டது) ஆகும். இதற்கு செலவு செய்த தொகை ரூ. 26.10 லட்சம் ஆகும். 
அணை கட்டும் பணியை சிறப்பாக முடித்த மிஞ்சின், திருவிதாங்கூர் மன்னரின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். அணையை கட்டியதோடு மட்டுமல்லாமல், அதன் பிரதான கால்வாய்களான இடதுகரை கால்வாய், தோவாளை கால்வாய் உள்ளிட்ட பிரதான கால்வாய்களை வெட்டிய பெருமை இவரையே சேரும்.
மலேரியா காய்ச்சலால் உடல்நலம் குன்றிய மிஞ்சின் 25.09.1913 அன்று தனது 45வது வயதில் காலமானார். 
அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக திருவிதாங்கூர் மன்னரின் உத்தரவுப்படி அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாகர்கோவிலில் இருந்து பேச்சிப்பாறை அணைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அணை அருகிலேயே சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு கல்லறையும் அமைக்கப்பட்டது.

2006ம் ஆண்டு நடந்த பேச்சிப்பாறை அணையின் நூற்றாண்டு விழாவில் திறக்கப்பட்ட ஸ்தூபியில் மிஞ்சின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மிஞ்சினின் நினைவிடத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்த தவறுவதில்லை.
இன்று (08.10.2017) மிஞ்சினின் 150வது பிறந்தநாள் ஆகும். எனவே இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் ஓங்கி ஒலித்து வருகிறது.

இதே போல ஆங்கிலேய ஆட்சியில் தனது சொந்த உழைப்பாலும், முயற்சியாலும் முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுவிக் கட்டியுள்ளார். அவருக்கு அங்கு சிலை எழுப்பப்பட்டு ஆண்டுதோறும் விழா நடைபெறுகிறது.
இப்படி பல ஆங்கிலேய அதிகாரிகள் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தமிழகத்தின் நலனுக்காக பல அணைகளையும், கட்டுமானங்களையும் முன்னின்று எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த உரிமைகளை கூட தக்கவைத்துக் கொள்ள நம்மால் முடியவில்லையே என்ற வருத்தம் தான் இன்று ஏற்படுகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08.10.2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...