Tuesday, October 24, 2017

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல…

பிழைகளையும் பிசுறுகளையும், பொய்யான முகங்களையும் பாசாங்கு பேச்சுக்களையும் ஏற்றுக் கொள்கின்றோம். உண்மைகளையும், தகுதியானவர்களையும் புறக்கணிக்கின்றோம். இது மிகப்பெருங் கேட்டினை விளைவிக்கும். தலையாய பிரச்சனைகள் யாவை என்பதை அறிய முனைவதில்லை ஆனால் பாதத்தில் படியும் தூசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். 
மாட்டிறைச்சி, மெர்சல், நீயா நானா, பீப்சாங் இவைகளைப் போன்றவற்றிற்கு கொந்தளிக்கின்றோம். கருத்து சுதந்திரம் பாதிக்கும் என்கின்றோம். ஆனால் உலகமயமாக்கல் என்ற ஒற்றை அரிதாரத்தை நம்பி பெற்ற சுதந்திரத்தை அடகு வைத்துவிட்டோம். உலகமயமாக்குதல் என்பர். ஆனால் நாட்டில் உள்ள நீராராதரங்களை பகிர்ந்தளிக்க நதிகளை தேசியமயமாக்கமாட்டார்கள். 

விளைவாக விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு நாடே மயனமானகின்றது. ஒருத்தருக்கும் கவலை இல்லை.  சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சினிமாவில் மீனவ நண்பன் வேடமிட்ட போட்டோவுக்கு தடை விதித்தால் சாலை மறியல் செய்வோம். நதிநீர் இணைக்கும் போராட்டங்களை பற்றி அறிய மாட்டோம். 

ஆனால் சினிமாவில் நதிநீர் இணைப்பு பேசியவருக்கு சிலை வைப்போம். கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு எழுதிக் கொடுத்த வசனத்திற்கு வாய் அசைப்பவர்கள் புரட்சியாளர்கள். ஆனால் சோற்றை மறந்து, குடும்பம் மறந்து ரோட்டினில் பட்டினிப் போராட்டம் செய்பவர்களை கண்டுக் கொள்ள மாட்டோம்.

"பேரெடுத்து உண்மையைச் சொல்லி 
பிழைக்க முடியல
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் 
பேதம் தெரியல்லே"-  
கவிஞர் கண்ணதாசன் அனுபவத்தால் எழுதிய வரிகள் எப்படி  பொய்யாகும்? 

தமிழகத்தில் தலைக்கு நேராக தொங்கும் ஆயுதங்களையும், பிரச்சனைகளையும் பட்டியலிட்டு அதை நூலாக்குகின்றேன் என்ற செய்தியை நேற்று பதிவிட்டிருந்தேன்.

காலில் செருப்பு அணிந்தால் முள் குத்தாது, முள்ளளவு பிரச்சனைகள் கவனிக்கப்படுகின்றன, தலைக்கும் உடலுக்கும் ஆபத்து விளைவிக்கும் புற்றுநோய் பிரச்சனைகளை பற்றி பாராமுகமாக இருக்கின்றோம் என்ற எனது நேற்றைய பதிவுக்கு பலரும் அலைபேசியில் பேசி விசாரித்தனர். தமிழகத்தில் கிடப்பில் போட்ட திட்டங்களும் உரிமைகளையும் குறித்தான எனது 300 பக்க புத்தகத்தை பற்றி குறைந்தபட்ச நபர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதில் திருப்தி அடைந்தேன். 
இறுதியாக ஒரு விசயத்தை பதிவிட விரும்புகின்றேன். 

சில மேனாமினிக்கிகள் கருத்து சொல்லி நாடு உருப்படும் என்பது, சேவல் கூவினால் தான் சூரியன் எழுவான் என்பது போன்றது. இப்படி திசை திருப்பி எதிர்வினைகளை விதைக்கும் சுயநலப் போக்காளர்களை கொண்டாடினால் நாடு பின்னோக்கி தான் செல்லும். 

திரைப்படத்தால் மாற்ற முடியும் என்றால், தமிழ் திரைப்பட வரிசையில் முதல் பேசும் படம் அரிச்சந்திரா வெளிவந்த பின்பும், பொய் என்ற சொல் அகராதியில் அச்சேறி இருக்குமா? 
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு போன்ற திரைப்படங்கள் சொல்லாத சமூக நீதியா?  நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே பேசாத மூடநம்பிக்கை ஒழிப்பு வாதங்கள் உண்டா?  

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக் கண்ணீரும், தலைவர் கலைஞரின் பராசக்தியும் பெற்ற வெற்றிக்கு பின்னர் கோவில்கள் குறைந்தனவா?  மேற்காணும் என்.எஸ்.கே, கே.ஆர்.இராமசாமி, அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஆர்.இராதா ஆகிய சுயசிந்தனையாளர்கள் மாற்ற முடியாததை விசிலும், விரலும், அணிலும் மாற்றிவிடுமா? இந்தியன், நரசிம்மா படங்களுக்கு பின்னர் தான் ஊழலில் தமிழகம் தழைத்தது. எனவே நிகழ்கால சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமே. அதன் போக்கில் விட்டுவிட்டால் நன்மையே. 

போலியான ஜனநாயகத்தை நம்புவதே வெட்டி வேலை. காட்சிப் பிழைகளை, இடமாறு  தோற்றப்பிழைகளை பற்றி பேசாமல், எதையாவது சொல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பது சுயமரியாதைக்கு இழுக்கு. இதனால் முன்னேற்றமும் இல்லை. ஆக்கபூர்வமான பலாபலனும் இல்லை. 
எது உண்மையான பிரச்சனை என அறிந்து, புரிந்துக் கொண்டு தீர்வு காண வேண்டும். நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். தலையாய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க முயல வேண்டும். 

இதோ நெல்லையில் நடந்த சம்பவம் ஒன்று நெஞ்சத்தை எரித்தது. நெல்லை மண்ணின் மைந்தனாக பதைத்தது உள்ளம். படத்தை பார்க்கும் தைரியம் கூட இல்லை. ஆனால் பெற்றோர்களுக்கு தீயிட தைரியம் எப்படி வந்தது? தீய நாவின் வேதனை வார்த்தைகளை காட்டிலும் தீயின் சுவாலைகளை சுமந்து வேகலாம் என கந்து வட்டி கொலை வட்டியாக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கொடுமைக்காரர்களை கொளுத்தாமல் தம்மையே கொளுத்திக் கொண்டு எத்தனைக் காலம் தான்  இந்த சமூகம் தம்மையே அழித்துக் கொள்ளுமோ ?!..
இரங்கல் அறிக்கைகள் மட்டுமே இதற்கு மருந்தல்ல. களிம்பு போடுவதை விட இந்த கொடுமைகளை அறுவை சிகிச்சை செய்து கேடுகளை தூக்கி எறிந்துவிட்டு நாட்டினை நேர்வழிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். 

“நானிருக்கும் இடத்தினிலே 
அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே 
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் 
அதுவும் தெரியல்லே
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் 
பேதம் தெரியல்லை
அட என்னத்த  சொல்வேண்டா 
தம்பி என்னத்தச் சொல்வேண்டா
உண்மையை அறிவோம்
மாயையை புறக்கணிப்போம்”

எது முக்கிய பிரச்சனைகளோ அதை பார்ப்போம். அதை விட்டுவிட்டு மெர்சல், அந்த நடிகர் வீட்டில் ரெய்டு என்று பாவலா போக்குகளை விட்டொழிப்போம். 

எதிர்கால தமிழகத்தை வாட்டும் நதிநீர், விவசாயம், இரயில்வே திட்டங்கள், தொழிற்கூடங்கள், சுற்றுச் சூழல், துறைமுகங்கள், கச்சத்தீவு, சேது கால்வாய், இந்தியப் பெருங்கடல் – டீக்கோகார்சியா தமிழக பாதுகாப்பும், எய்ம்ஸ், அகழ்வாராய்ச்சி, விமான நிலையங்கள், நீதிமன்றங்கள் என நூற்றுக்கு மேல் பிரச்சனைகளை தேடியறிந்து அதை ஆய்வு செய்து தொகுத்த எனது நூல் வெளிவர இருக்கின்றது. அதை வாசித்தாவது இந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள். அது தான் முக்கியம். 

சினிமா வெளிவரும் நாளில் அதை பார்க்க டிக்கெட் வாங்குவது முக்கியமில்லை என்பதை உணருங்கள். அவசியமற்ற பிரச்சனைகளுக்கு போராடி மனித ஆற்றலை விரயம் செய்யாமல் உண்மையான, பிரதான தமிழ் மண்ணின் பிரச்சனைகளை வாசித்து அறிந்து புரிந்து அதற்கு குரல் கொடுங்கள். அதுவே உண்மையான நேர்மையான பணிவும் கடமையும் ஆகும். 

இன்றைக்கு கடன் தொல்லையால் தீக்குளித்த அந்த மனிதர்களை சற்று நினையுங்கள். அதை விட்டுவிட்டு மெர்சலில் அந்த வசனம் வருகிறது, இந்த வசனம் வருகிறதென்று பேசுவது நாம் பிறந்த மண்ணுக்கு செய்யும் கேடாகும். உண்மை, யதார்த்தத்தின் பக்கத்தில் நில்லுங்கள்.

வணிகத்தனமான பொது வாழ்க்கையில் வியாபார அரசியலில் இருந்து விடுபட்டு பாசாங்குகாரர்களை புறந்தள்ளி நேர்மையான மக்கள் நல அரசியலை மீட்ட பின்பு தான் நம்முடைய தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும்.

சேற்றில் மாட்டிய தேரை இழுக்க வேண்டுமென்றால் சேற்றை அப்புறப்படுத்திய பின்தான் வடம் பிடித்து ஊர் கூடி தேரை இழுக்க முடியும். புனிதமான தேரோ சகதியில் மாட்டிக் கொண்டதே... அது தான் இன்றைய நமது மக்களாட்சி. பிரச்சனைகள் முக்கியமல்ல. நான் வாழ்ந்தால் போதும். நாடு எப்படி போனால் என்ன என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் நிரம்பி வழிகிறது. ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுங்கள். இல்லையென்றால் நாளைய சரித்திரம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

#உண்மையை_அறிவோம்
#மாயையை_புறக்கணிப்போம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-10-2017

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...