Sunday, November 5, 2017

விவசாயிகளுக்கு நுனி நாக்கில் குரல் கொடுப்பவர்களே, இதை சற்று படியுங்கள்.

இன்றைக்கு விவசாயத்தை பற்றி பலர் பேசுகின்றார்கள். மகிழ்ச்சியே. இப்படி பேசுபவர்கள் வயலுக்கு போய் என்ன நடக்கிறது என்று பார்த்தால் இன்னும் பல யதார்த்தங்கள் புரியும். நுனி நாக்கில் விவசாயிகளை வணங்குகிறேன் என்று நகரங்களில் இருந்து பேசுவது வெட்டிப் பேச்சாகும். விவசாயிகளின் போராட்டத்தில் நாராயணசாமி நாயுடுவுடன் பங்கேற்றவன் என்ற முறையில் இதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விவசாயப் பிரச்சனைகளை புரிந்து கொண்டு பிறகு பேசுங்கள். 
கிராமத்தில் நெல் நடவு வேலைகள் நடக்கின்றன. என்னுடைய உதவியாளர் கிராமத்தில் இருந்து பயிர் தொழிலுக்கான செலவு என்னவென்று குறிப்பிட்டார். 

அதில், ஒரு ஏக்கருக்கு மட்டும் நெல் நடுவை போட்டு பயிர் செய்ய என்ன செலவாகும் என்று நான் கணக்கு பார்த்ததில் விவரம் வருமாறு.

1) உழவு கூலி (ட்ராக்டர்) மூன்று சால் ஓட்ட ரூ. 1,600/-
2) வரப்பு சீர் செய்ய அண்டை வெட்ட ரூ. 1,300/-
3) நிலத்தை சமப்படுத்த ரூ. 1,300/-
4 ) நாத்து தயார் செய்ய. (விதை, உழவு, தெளி) ரூ. 2,800/-
5) நாற்று பரியல் நடவு கூலி. ரூ. 3,750/-
6) அடி உரம், மேல் உரம், பூச்சி மருந்து. ரூ. 4,500/-
7) களை எடுக்க ரூ. 800/-
8) அறுவடை ரூ. 3,000/-
9) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ. 1,700/-

மொத்தம் : ரூ. 20,750/-
மொத்த உற்பத்தி/ஏக்கர் : 30 மூட்டை (70 கிலோ) 
அரசு கொள் முதல் விலை : 30 x 850 = ரூ. 25,500/- 

லாபம்: 
ஏக்கருக்கு ரூ. 4,750/- 
மழை வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான் இந்த விலை கிடைக்கும். பயிர் சேதமாகிவிட்டால் போட்ட செலவுகள் எல்லாம் வீணாகிவிடும். சிலர் கடன் வாங்கி இதை போடுவார்கள். அவர்களுடைய நிலைமை மிக வேதனையானது. இதே முதலீட்டில் வியாபாரமோ, வேறு தொழிலை செய்பவர்களுக்கு லாபம். உறுதியாக போட்ட முதலீட்டுக்கு மேல் கிடைக்கும். ஆனால் விவசாயிகளுக்கு லாட்டரி சீட்டு போல அதிர்ஷ்டம் இருந்தால் தான் போட்ட முதலுக்கு கொஞ்சமாவது கையில் கிட்டும்.

இப்படி நுண் விவசாயத்தை கவனிக்காமல் சென்னையில் இருந்து குழுக்களாக குரல் கொடுத்துக் கொண்டு பேசுவதில் எந்த பயனும் இல்லை. இது தான் இன்றைக்கு விவசாயிகளின் நிலைமை. பல விவசாயிகள் எதற்கு இந்த வம்பு என்று தொழிலையே விடக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.

#விவசாயி
#விவசாயிகள்_பிரச்சனைகள்
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
05-11-2017

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...