Wednesday, February 14, 2018

ஆரோவில்லுக்கு 50

புதுவையில் பன்னாட்டுச் சமூகம் அமைந்த ஆரோவில்லுக்கு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதன் நோக்கமும் அதற்கான களப்பணி ஆற்றியவர்களையும் இந்த நேரத்தில் நாம் எண்ணிப் பார்ப்பது நமது கடமையாகும்.
ஆரோவில், தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் நிறுவனம் (யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது.


எல்லா  நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகள், அரசியல் ஈடுபாடுகள் மற்றும் நாட்டுப் பற்று போன்றவற்றை கடந்து அமைதி, மென்மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் விரும்புகிறது. மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே ஆரோவில்லின் நோக்கமாகும். என்ற பிரகடனத்தோடு ஸ்ரீ அரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில். இது அவர்தம் திருக்கனவில் உதித்ததாகும்.
பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனி வரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டுவிட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.
ஆரோவில் நகரத்திற்காக, அன்னை சுட்டிய இடம் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் வட்டப் பகுதியில் அமைந்துள்ளது. அது இன்றைக்குப் புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ., தொலைவில் உலகப்புகழ் பெற்ற ஆரோவில்லாக மலர்ந்துள்ளது. ஆரோவில் ஒரு சர்வதே கூட்டுச்சமூக நகரமைப்பு.
இது சித்தர் பூமி. கடுவெளிச் சித்தர் தவம் செய்த புண்ணியபூமி. இந்த இடத்தில் ஆரோவில் உருவாகும் என்று கடுவெளிச் சித்தர் கூறியிருப்பதாக இப்பகுதி மக்கள் சொல்வதுண்டு. ஆரோவில்லைச் சுற்றிலும் பழஞ்சிறப்புக்குரிய சிவாலயங்கள், சிறுதெய்வக் கோயில்கள் அமைந்துள்ளன. 18 சிவன் கோயில்கள் உள்ளனவாக இப்பகுதி மக்களால் சுட்டப்பெறுகின்றது. குறிப்பாக, திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இரும்பை திருவக்கரை, அரசிலி ஆலயங்களை ஒட்டி ஆரோவில் அமைந்துள்ளது.
1968ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் ஆரோவில் நகரத்தைக் கட்டும் புனிதப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், புதுச்சேரியிலிருந்தும் 5000 பேர் குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறுதொலைவில்  ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது. இந்த உலக நகரில் சுமார் 50,000 பேர் வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கம் பெற்று வருகிறது. நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆம்வாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (Peace) என்று பெயர்.
இந்த மையத்தில் இருந்து நாற்புறமும் சுருள் சுற்று வடிவத்தில் விரிந்த நான்கு பகுதிகள் உள்ளன. அதன் தென்கிழக்குத் திசையில் குடியிருப்பும், வடகிழக்குத் திசையில் பண்பாட்டுப் பகுதியும், தென்மேற்குப் பகுதியில் பன்னாட்டுப் பகுதியும், வடமேற்குத் திசையில் தொழிற்கூடங்களும் அமைந்துள்ளன. புதிய கட்டிடக் கலைகள் பலவற்றின் உறைவிடமாகத் திகழும் ஆரோவில்லின் குடியிருப்புகள் இயற்கைச் சூழ்நிலைகயோடு அழகு நிறைந்து விளங்குகின்றன.
பன்னாட்ப் பகுதியானது ஒரு மைய அரங்கம், அனைத்து நாட்டு இசை, நடனம், நாடகம் முதலியன பயிற்றுவிக்கும் கூடங்கள், கலையரங்குகள், நூலகங்கள், பரிசோதனைக் கூடங்கள், கல்வி பற்றிய ஆய்வுக் கூடங்கள், விளையாட்டரங்குகள் கொண்டதாக அமையும். பன்னாட்டுப் பகுதியில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஓர் அரங்கு இருக்கும். அங்கு அந்தந்த நாட்டின் கலை, பண்பாடு, வாழ்க்கை முதலானவற்றை மற்றவர்கள் கண்டறிந்து கொள்ள, ஆய்ந்துணர உதவியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பகுதியான பாரத்நிவாஸ் முதல் அரங்கமாக அமைந்துள்ளது. அதன் அங்கமாகச் செயல்படும் ஆரோவில் தமிழ் மரபு மையம் குறிப்பிடத்தக்க பணிகளைச் சிறப்புற ஆற்றி வருகிறது.
தற்போது திபெத் காலச்சார அரங்கு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் தங்களுக்கான அரங்குகளை நிறுவ முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு மாசு உண்டாக்காத வகையில் அமைந்துள்ள தொழிற்கூடப் பகுதிகளில் உயர்தரத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பெற்று வருகின்றன. சிறிய, நடுத்தரத் தொழிற்கூடங்களான அவை அமைகின்றன.
நகரப்பகுதியைச் சுற்றிலும் மரங்களும், பூங்காக்களும், பூந்தோட்டங்களும் பசுமை வளையங்களாக நகரை எழிலூட்டி வருகின்றன. ஆரோவில்லைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் வசிக்கும் மக்கள் இப்பகுதியின் ஆதிமுதல் குடிமக்களாக் கருதப்படுகின்றனர். ஆரோவில் சமூகத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றார்கள். ஆரோவில்லின் நோக்கினைப் புரிந்து கொண்டு, அவர்கள் இயங்க வழிவகை செய்வதன் முதற்கட்டமாக இங்குள்ள கிராமங்களின் வளர்ச்சி, கல்வி, நல்வாழ்வு, நல்ல குடிநீர், சத்துணவு, பொது சுகாதாரம், சூழல்காப்பு மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தன்னிறைவுப் பெற்ற, கைத்தொழில் அறிந்த கல்வியறிவு பெற்றவர்களைக் கொண்டதாக அந்தக் கிராமங்கள் வளர்ந்து வருவதை இன்று காண முடிகிறது.
பன்னாட்டு மக்களிடையே நல்லிணக்கமாகவும் கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஆன்மிகத்தின் அடிப்படையில் ஓருலகப் கருத்துணர்வை வளர்க்கும் வகையிலும் வளர்ந்து வரும் இந்நகரில் நான்கு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ளது. முதல்மொழி தமிழ். அடுத்து பிரெஞ்ச், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆரோவில் பள்ளிகளில் கற்றுத்தரப்பட வேண்டுமென ஸ்ரீஅன்னை குறிப்பிட்டுள்ளார். ஆரோவில் டுடே என்னும் இதழ் ஆங்கில மொழியில் வெளிவந்துக் கொண்டிருக்கிறத. வலைதளத்தின் மூலமாக ஆரோவில் ரேடியோ இயக்கப்படுகிறது. ஆரோவில் செய்திமடல் 20 ஆண்டுகளாக தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
முற்றிலும் வறண்ட பூமியான இதை செழிப்பு மிகுந்த ஆன்மிக நகரமாக உருவாக்குவதற்கு 50 நாட்டு மக்கள் உள்ளூர் மக்களின் துணையோடு உழைத்து வருகிறார்கள். மழைநீர் சேகரிப்பு, இயற்கை வேளாண்மை, மாற்றுச் சக்தி மற்றும் மறுஉற்பத்தி செய்யவல்ல (சூரிய சக்திப் பலகங்கவழி) பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வழங்குதல், விதைகள் சேகரிப்பு, மரநாற்றுப் பண்ணைகள், ஆராய்ச்சிப் பணிகள் எனப் பலநோக்குடன் செயல்படுகின்ற ஆரோவில்லின் சீரிய நோக்கம் மானுடம் மேம்பாடடைதல் என்பதேயாகும்.
இப்பகுதிகளில் சிதைவுக்குள்ளாகி வரும் பழங்காலக் கட்டிடங்களைப் பாதுகாத்தல், மரவு மாறாமல் புதுப்பித்தல், இயற்கையோடு இசைந்த வண்ணம் கட்டிடங்களை எளிமையாக அமைத்தல், உள்ளூர்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், உள்ளூர் விளையாட்டுகளை உயர்த்துதல் என்பதான நிலைகளில் விரிவாகவும், ஆழமாகவும் ஆரோவில் தன் பணிகளைத் தொடர்கின்றது.
இயற்கை கொலுவிருக்கும் எழிலார் சோலைகளுடன் வளர்ந்து வரும் ஆரோவில் தன்னைச் சுற்றியுள்ள கிராமங்களை முன்னேற்றம் செய்யும் முயற்சிகளிலும் முனைந்துள்ளது. இயற்கை சார்ந்த நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அமைத்தும் உயர் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. கடற்கரை வளர்ச்சி மையம், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல சீரிய பணிகளை மேற்கொள்கின்றன.
சுனாமிகா, ஸ்மால் ஸ்டெப்ஸ், வெல்பேப்ர் போன்ற திட்டங்கள் மூலம் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, பிற மாற்றுப் பயன்படு கொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மக்களுக்கு வேலை வாங்யபும் உருவாக்கப்படுகின்றது. ஆரோவில் அறக்கட்டளைகளின் கீழுள்ள 170க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பல உள்ளூரிலும் உலக நாடுகளிலும் விற்பனை செய்யப் பெறுகின்றன.
மறுஉற்பத்தி செய்யவல்ல சக்திகள், காற்று மூலம் மின்சார உற்பத்தி, உயர்தர இயந்திரங்கள், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றின் தனித்துவமுடைய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இயற்கையை மாசுபடுத்தாத சிறு உலோகத் தொழிற்கூடங்கள், உயர்தரத் தொழில்நுட்ப வசதிகொண்ட ஒலிப்பதிவுக் கூடம், விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின்போது உட்கொள்ளும் ஸ்பிருலினா (உணவுப் பாசி) உற்பத்தி செய்யும் நிறுவனம், சுடுமனைகள் மற்றும் கைவினை உற்பத்தித் தொழிற்கூடங்கள் எனப் பல்வகை நிறுவனங்கள் சிறப்புறச் செயல்படுகின்றன. ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 4 சிறார் பள்ளிகள், 5 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் பல பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு பல்தொழிற் பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் மகளிர்க்கென வாழக்கைக் கல்வி மையமும் இயங்குகின்றன.
உலக மொழிகளில் 50,000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகளைக் கொண்ட நூலகங்கள் இங்கு உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடம் இங்கு உள்ளது. ஆரோவில் ஆவணப்பாதுகாப்பு மையமும் செயல்படுகின்றது.
நடனம், இசை, ஓவியம், யோகா, தற்காப்புக் கலை முதலிய கலைகளுக்கான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன.
ஆரோவில்லிற்கும் வெளிநிறுவனங்களுக்கும் தங்கள் பங்களிப்பை நல்கி வரும் எழுத்தாளர்கள், இசை, நாடக, ஓவிய, நடன மற்றும் கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், மட்பாண்டக் கலுஞர்கள் பலர் இயங்கி வருகின்றனர். பல நாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி வரும் கலைக் குழுக்களும் இங்குண்டு. அறிவியல் சாதனைகளும் ஆன்மிக வழியில் இங்கு நாள்தோறும் பொலிவு பெற்று இயங்குகின்றன.
உலகப் புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா காந்தி, புனித தலாய் லாமா, யுனெஸ்கோவின் பொதுச் செயலர். ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர், இந்தியக் குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள், பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில்.

#ஆரோவில்50
#Auroville50
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
13-02-2018

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...