Sunday, February 11, 2018

தென்மா வட்டங்களில் எரிவாயு பைப்லைன்

இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், வேப்பலோடை வழியாக தூத்துக்குடி வரை பூமிக்கடியில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கிழக்கு கடற்கரை சாலை கிராமங்கள் வழியாக திருச்செந்தூர், சாத்தான்குளம் கன்னியாகுமரி வரை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் திரவ இயற்கை எரிவாயுவை எடுத்து செல்லும் குழாய் நிறுவும் பணிகளை தொடங்க இருப்பதாலும், பணிகள் குறித்த அடிப்படை விவரங்கள் கூட அப்பகுதியில் வசிக்கிற மக்களுக்கு முழுமையாக தெரிவிக்கப்படாததாலும் விவசாயிகளும், கிராம பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
Image may contain: sky and outdoor
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தினர் இராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை மீள் ஆவியாக்கப்பட்ட திரவ இயற்கை எரிவாயுவை எடுத்து செல்லும் குழாய்களை பூமிக்கடியில் பதிக்கும் பொருட்டு தோராயமாக 142 கி.மீ. நீளத்துக்கு விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களை நிறுவுவது, அதன் வழித்தடங்களில் எரிவாயு அழுத்தும் நிலையம் அமைப்பது, இணைப்பு நிலையங்கள் அமைப்பது, இறுதியாக தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை வளாகங்களில் எரிவாயு குழாய்களை இணைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக எரிவாயு குழாய் கடந்து செல்லும் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இரு மாவட்ட கிராம மக்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கருத்து கேட்புரை கூட்டம் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு குழாய் கடந்து செல்லும் கிராமங்கள் என 26 கிராமங்களை பட்டியலிட்டுள்ளனர். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு என கொடுக்கப்பட்டுள்ள தகவலில் எரிவாயு குழாய் கடந்து செல்லும் வருவாய்- கிராமங்கள் குறித்து எந்தவித தகவலும் இல்லை. போதிய விவரங்களும் இல்லை. இதனால் குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட எல்கைப்பகுதியான வேம்பார் முதல் தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களும் விவசாயிகளும் குழப்பம் அடைந்துள்ளனர்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-02-2018

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...