Tuesday, February 27, 2018

ஆரோவில் 50

*இன்றைய (27/02/2018) தினத்தந்தியில் ஆரோவில்லின் 50 ஆண்டுகள் நிறைவைக் குறித்து எனது சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது.*

--------------------------

புதுச்சேரியில் சர்வதேச சமூகம் அமைந்த ஆரோவில் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. புதுவையில் இருந்தாலும் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ஐ.நா. வின் யுனெஸ்கோ உதவியுடன் மாபெரும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இந்த பன்னாட்டு கிராமிய நகர சங்கமமாகும். அமைதியும், உயிரோட்டமான ஜீவனும் ஒருங்கிணைந்து அமைந்த இந்த ஆரோவில்லுக்கு சென்றாலே மனிதருடைய கவலைகள் அனைத்தும் ஓடிவிடும். உலக நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், ஜாதி, மதம், அரசியல் மற்றும் நாடுகளின் வேறுபாடுகளைக் கடந்து ஒரே சமூகமாக இங்கு வாழ்கின்றனர். உண்மையாகவே பன்மையில் ஒருமை தத்துவம் இங்கு தான் நிலைத்தோங்குகிறது. 
மானிடத்தின் ஒருமைப்பாட்டையும் மனித நேயத்தின் இயல்பையும் மெய்யாக்குவதே ஆரோவில்லின் அடிப்படை நோக்கமாகும். அரவிந்தர், அன்னையால் நிறுவப்பட்டது. பழமை, நவீனம், சமகாலம், எதிர்காலம், புதியவை, உண்மையை நோக்கி தேடல், மெய்ப்பொருள் காண்பது என்ற தத்துவங்களின் அடிப்படையில் ஆரோவில் அமைந்தது. 
ஆரோவில் உயிரோட்டமான உணர்வை கண்டறிய முயற்சி மேற்கொள்ளும் இடம் என அரவிந்தர், அன்னை வரைபடத்தை தொட்டுக்காட்டிய இடம் தான் ஆரோவில்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டாரத்தில், புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி துவக்கி வைத்தார். இந்த இடம் காடுவெளிச் சித்தர் தவம் செய்த பூமி என்று நம்பப்படுகின்றது. இங்கு சிவன் ஆலயங்களும், நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களும் உள்ளன. ஞாணசம்மந்தரால் பாடல் பெற்ற திருவக்கரை, அரசிலி இதன் அருகே தான் உள்ளது.

இந்த நகரத்தை 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு, பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், புதுச்சேரியிலிருந்தும் 5000 பேர் குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத்திலிருந்து சிறுதொலைவில்  ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லால் ஆன ஒரு தாழியில் உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வரப்பெற்று இந்த இடத்தில் ஒரு சேர சேர்க்கப்பட்டது. இந்த பன்னாட்டு நகரில் 50,000 பேர் வரை வசிப்பதற்காகத் திட்டமிடப்பட்டது. நகரத்தின் மத்தியில் ஆரோவில்லின் மாத்ரி மந்திர் அமைக்கப்பட்டது. அதனைச் சுற்றி சோலை வனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மத்தியப் பகுதிக்கு பேரமைதி கேந்திரம் (Peace) என்று பெயர்.
இந்த இடத்தின் நான்குபுறமும் சுருள்சுற்று வடிவத்தில் பரந்த நான்கு பகுதிகள் இருக்கின்றன. வடமேற்குத் திக்கில் தொழிற்கூடங்கள் உள்ளன, நவீன கட்டிடக் கலைகளின் இருப்பிடமாக ஆரோவில் உள்ளது. பசுமை இயற்கைச் சூழ்நிலையில் குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. வடகிழக்குத் திசையில் பண்பாட்டுப் பகுதியும், தென்மேற்குப் பகுதியில் பன்னாட்டுப் பகுதியும் அமைந்துள்ளன. 

பன்னாட்டு மைய அரங்கத்தில் அனைத்துலக இசை நடனம், நாடகம் போன்ற கலைகளை கற்பிக்கும் கலாசாலைகளும், கலையரங்குகள், நூலகங்கள், பயிற்சிக் கூடங்கள், கல்வி மற்றும் ஆய்வுக் கூடங்கள், விளையாட்டரங்குகள் உள்ளன. இந்த இடத்தில் ஒவ்வொரு நாட்டின் அரங்கமும் தனித்தனியாக உள்ளது. அந்த ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் அடையாளங்களைக் கொண்ட அரங்கங்களாக தனித்தனியாக விளங்குகின்றன. முதல் அரங்கமான இந்திய அரங்கம் பாரத் விலாஸ் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மரபு மையமும் அமைந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அரங்குகளும் நிறுவப்பட்டு வருகின்றன. திபெத் காலச்சார மையமும் இடம் பெற்றுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்போடு, மாசு ஏற்படக்கூடாத தொழிற்கூடங்கள் பெரிய, சிறிய, நடுத்தர அளவில் செயல்படுகின்றன.

சர்வதேச சமுதாயத்தின் இடையே ஒருங்கிணைப்பும் நல்லிணக்கத்தையும் கொண்டு அந்தந்த நாட்டின் பண்பாட்டுத் தரவுகளை அறிந்து, புரிந்து, பகிர்ந்து கொள்ளவும் முடிகின்றது. ஆரோவில்லின் முதல் மொழி தமிழ், பிரெஞ்ச், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் உள்ளது. தனியாக ஆரோவில் ரேடியோவும் இயங்குகிறது. ஆரோவில் செய்திமடல் 20 ஆண்டுகளாக தமிழில் தற்போது மீனாட்சி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிறது.
இந்த பகுதியில் பச்சை பசேலென்று மரங்கள், பூங்காக்கள், பூந்தோட்டங்கள் என நிறைந்திருக்கின்றன. ஐம்பதுக்கும் நாடுகளுக்கு மேற்பட்ட மக்கள் ஒரு சேர மகிழ்ச்சியோடும், அமைதியாகவும் வாழ்கின்றனர். இங்குள்ள கிராமங்களினுடைய முன்னேற்றம், கல்வி, மக்கள் நல்வாழ்வு, உணவு, சுவை நீர் என அனைத்தும் எளிதாக இங்கே கிடைக்கின்றது. 

முற்றிலும் வறண்ட செம்மண் 50 நாட்டு மக்களின் உழைப்பின் காரணமாக செழிப்பானது. இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, மாற்றுச் சக்தி, இரசாயன உரங்களை தவிர்த்தல் என்ற நிலையில் விவசாயம், கலைப் பொருள் தயாரிப்பு போன்ற பணிகளை அவரவர்களுக்கு ஏற்றவாறு செய்துவருகின்றனர். நேர்மையான உழைப்பே இவர்களுடைய தாரக மந்திரம். ஆரோவில் மட்டுமல்லாமல் இதை சுற்றியுள்ள ஏனைய கிராம வளர்ச்சிக்கும் இவர்கள் அக்கறை பாட்டி உதவுகின்றனர். அதுபோல, கடற்கரைப் பகுதிகளில் தொண்டு நிறுவனப் பணிகளை ஆற்றுகின்றனர்.
சுனாமிகா, ஸ்மால் ஸ்டெப்ஸ், வெல்பேப்ர் என திட்டப்பணிகள் மூலம் ஆரோவில் தன் அருகேயுள்ள கிராமங்கள் முன்னேற வேண்டிய பணிகளை ஆற்றுகின்றன. இதன் மூலம் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, பிற மாற்றுப் பயன்படு பொருட்களை உற்பத்தி செய்து அந்த வட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றனர். ஆரோவில் அறக்கட்டளையின் 170க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பல ஊர்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது. 
மறுஉற்பத்தி செய்யவல்ல சக்திகள், காற்று மூலம் மின்சார உற்பத்தி, உயர்தர இயந்திரங்கள், தகவல் தொகுப்புகள் ஆகியவற்றின் தனித்துவமுடைய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இயற்கையை மாசுபடுத்தாத சிறு உலோகத் தொழிற்கூடங்கள், உயர்தரத் தொழில்நுட்ப வசதிகொண்ட ஒலிப்பதிவுக் கூடம், விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தின்போது உட்கொள்ளும் ஸ்பிருலினா (உணவுப் பாசி) உற்பத்தி செய்யும் நிறுவனம், சுடுமனைகள் மற்றும் கைவினை உற்பத்தித் தொழிற்கூடங்கள் எனப் பல்வகை நிறுவனங்கள் சிறப்புறச் செயல்படுகின்றன. ஆரோவில் குழந்தைகளுக்கான 5 பள்ளிகள், 4 சிறார் பள்ளிகள், 5 முன் மழலையர் பள்ளிகள் இவற்றோடு ஆரோவில் பகுதியைச் சுற்றிலும் பல பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம இளைஞர்கள் தொழிற்கல்வி கற்றுக் கொள்வதற்கென ஒரு பல்தொழிற் பள்ளியும், பணிமுடித்துத் திரும்பும் தொழிலாளர்களுக்கான இளைஞர்கள் கல்வி மையமும் மகளிர்க்கென வாழக்கைக் கல்வி மையமும் இயங்குகின்றன.

ஆரோவில் நூலகத்தில் உலக மொழிகளில் 50,000த்திற்கும் மேலான நூல்கள், குறுந்தகடுகள் உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடமும் இங்கு இடம்பெற்றுள்ளது. ஆரோவில் ஆவணக் காப்பகம் பல தரவுகளை ஆய்வுசெய்ய உதவுகின்றன.
நடனம், நாடகம், இசை, ஓவியம், யோகா, தற்காப்புக் கலை போன்ற கலை சம்மந்தமான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் எப்போதும் நடந்த வண்ணம் உள்ளது. 

இங்குள்ள கலைஞர்கள் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்று தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்தியாவின் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழும் இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டுத் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர்களும், இந்திரா காந்தி, தலாய்லாமா, யுனெஸ்கோவின் பொதுச் செயலர், ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர், இந்தியக் குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள், பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில்.
இந்த பசுமை வளையப் பகுதி 405 ஹெக்டேர் பரப்பளவில் மனிதர்கள், காடுகள், உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக ஜீவிக்கின்றன. மேலும் 800 ஹெக்டேர் நிலங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியான ஆரோவில் மனித இனத்தின் ஒற்றுமையை நிலைநாட்டவும், அதை பரிசோதிக்கும் சாலையாகவும் விளங்குகிறது. வேற்றுமையில் மனித இனத்தின் ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம். இந்த நோக்கம் எதிர்காலத்திலும் வெற்றி பெற வேண்டும். 

#ஆரோவில்50
#Auroville50
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...