Thursday, February 22, 2018

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் இனி என்ன செய்யவேண்டும் ...

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் இனி என்ன செய்யவேண்டும்என்பதை குறித்து தி இந்து – தமிழ் நாளேடு என்னுடைய கருத்துகளை இன்று பேட்டி வடிவில் வெளியிட்டுள்ளது. அது வருமாறு.

காவிரிப் பிரச்சனை – இனி என்ன செய்ய வேண்டும்.
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
நீண்ட காலம் எதிர்பார்ப்போடு காத்திருந்த காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. ஐம்பதாண்டு தவிப்பில் தமிழகம் 264 டி.எம்.சி., தண்ணீரை கோரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவில் 205 டி.எம்.சி., தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 ஆக குறைத்தது. உச்ச நீதிமன்றம் இறுதியாக 177.25 டி.எம்.சி., ஆக குறைத்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையான நிலை தான். 16.75 டி.எம்.சியை குறைத்த காரணங்கள் சரியானவையாக தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தை பொறுத்தவரை எப்படியெனில்; நன்றாக உபசரித்து, தலை வாழை இலை போட்டு சோற்றை பரிமாறி, அதற்கான கூட்டுப் பொரியல், சாம்பார், ரசம், பாயாசம், தயிர் என கொடுக்காமல் வெறும் சோற்றை உண்ணுங்கள் என்ற கதை தான்....
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையமும் அமைக்கலாம் என்று உத்தரவில் இருந்தாலும் கூட கர்நாடகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தன் எதிர்ப்புக் குரலை காட்டியுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா தண்ணீரைக் குறைத்துள்ளதை குறித்து, கர்நாடகத்தை காவிரித் தாய் காப்பாற்றினாள் என்று வரவேற்றுள்ளார்.  இப்படி மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படியென்றால், எப்படியான முரண்பட்ட நிலையில் கர்நாடகம் காவிரி பிரச்சனையில் தொடர்ந்து நடந்து கொள்கிறது என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. இப்படி உச்சநீதிமன்றம் நடுவர்மன்ற தீர்ப்புகளை மதிக்காத அரசாகத்தான் கர்நாடகம் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியானாலும், பாஜக ஆட்சியானாலும் இது தான் கர்நாடக அரசின் நிலைப்பாடு. நியாயத்தை ஒரு போதும் மதித்ததே இல்லை கர்நாடகம். 
பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது என்றும், அதற்காக கூடுதலாக தண்ணீர் தருகிறோம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தை தெரிவித்தாலும், ஏற்கனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52% வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகமே கூறுகின்றது. பெங்களூருவில் பிரம்மாண்டமான பூங்காக்களிலும், மால்களிலும், மைதானங்களிலும் ஆடம்பரத்திற்காக குடிநீர் வீணாக்கப்படுகிறது. 
 

இனி என்ன தமிழகம் செய்ய வேண்டியது?
1. நதிகள் தேசிய சொத்தாகும். இயற்கையின் அருட்கொடை. எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இது குறித்து 1983இல் நான் தாக்கல் செய்த நதிகளை தேசியமயமாக்கி, கங்கை முதல் கிருஷ்ணா - காவிரி - வைகை - தாமிரபரணி - குமரியின் நெய்யாறு வரை இணைத்து கங்கை குமரியைத் தொட வேண்டும் என்ற என்னுடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012 இல் அளித்த தீர்ப்பில் அப்போதே இதை குறிப்பிட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது. தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டி.எம்.சி ஆக கணக்கில் வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு வரவேண்டிய 14.75 டி.எம்.சி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்துவிட்டது. கர்நாடகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதையும், அங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதையும், அவற்றை குடிநீராக பயன்படுத்த ஏற்புடையது என்பதை உச்சநீதிமன்றம் ஏன் பரிசீலிக்கவில்லை? 20 டி.எம்சி நிலத்தடி நீர் என உச்சநீதிமன்றம் எப்படி கணக்கில் கொண்டது என்றும், தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் இந்த பிரச்சனையை குறித்து சரியாக எடுத்துவைத்தார்களா? என்பது குறித்து சந்தேகமாக உள்ளது. மொத்தம் 802 கி.மீ., தூரம் உள்ள காவிரி நதிநீர் படுகையில் தண்ணீரின் அளவு 740 டி.எம்.சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டி.எம்சி., தண்ணீரும், கர்நாடகத்தின் சார்பில் 465 டி.எம்.சி., தண்ணீரும் கேட்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப்  (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!
தமிழகத்திலுள்ள 384 வட்டங்களில் 142 வட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 33 வட்டங்களில் மிகவும் குறைவு. 54 வட்டங்களில் பற்றாக்குறையில் உள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில் கூட நிலத்தடி நீர் தரை மட்டத்திலிருந்து 21.5 மீட்டர் கீழே சென்றுவிட்டது. திருவாரூர் 9.2 மீட்டர், பூம்புகார் அருகே மிகவும் குறைந்துவிட்டது. பல ஆண்டுகளாக பருவமழை பெய்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் உப்பு நீராகவும் மாறிவிட்டன. இந்த சூழலில் தமிழகத்துக்கு வரவேண்டிய நீர் அளவை நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்துள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீருக்கும், காவிரியின் கடைமடைப் பகுதியான தமிழகத்திற்கும் நீர் வருவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தமிழகத்தைப் போல கர்நாடகம், கேரளம், புதுவை பகுதிகளின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்காமல் தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுப்பது எவ்விதத்தில் நியாயம். அதுவும் காவிரி டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல் நீரும் நிலத்தடி நீரில் சேர்வதால் இந்த கணக்கு சரியான வாதமாகவும், காரணமாகவும் இருக்குமா? என்பது நமது கேள்வி. 
ஆனால், நடுவர் மன்றம் ஒத்துக் கொண்டவாறு கேரளத்திற்கு 30 டி.எம்சியும், புதுவைக்கு 7 டி.எம்.சியும் வழங்குவதில் உச்சநீதிமன்றம் குறைக்கவில்லை. நதிநீர் பங்கீடு குறித்து சர்வதேச அளவில் முக்கியமாக பின்பற்றப்படும் 1966இல் உருவாக்கப்பட்ட ஹெலன்ஸ்கி கோட்பாடை பின்பற்றுகின்றோம் என்று உச்சநீதிமன்றமும், நடுவர் மன்றமும் தங்களுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அப்படியென்றால், கீழ்ப் பாசனப் பகுதிகள் தான் பயன் பெற்றிருக்க வேண்டும். ஹர்மன் கொள்கை, கேம்பியோன் விதிமுறைகள், பெர்லின் விதி ஆகியவை நீர் பங்கீடு குறித்த பிரச்சனைகளில் கடைபிடிக்கும் வழிகாட்டு முறைகளாகும். ஆனால் காவிரிப் பிரச்சனையில் ஹெலன்ஸ்கி வழிகாட்டு முறையே முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டது. அப்படியெனில், தமிழகத்திற்கு தான் அதிகமான நீர் அளவு கிடைத்திருக்க வேண்டும். அப்படியெனில், தமிழகத்திற்கு தான் அதிகமான நீர் அளவு கிடைத்திருக்க வேண்டும். மேலும் ஹெலன்ஸ்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும். இப்படியான பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழக அரசு தாக்கல் செய்யலாம். ஏனெனில் இப்போது இந்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால் இனி 15 ஆண்டுகளுக்கு நீர் அளவை குறித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாது. இதில் இன்னொரு சிக்கலும் இருக்கின்றது. என்னவெனில், சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிலுவையில் உள்ளது என்று காரணம் சொல்லி தட்டிக் கழிக்கும். கர்நாடகத்தின் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசே இம்மாதிரியான காலந்தாழ்த்தும் நடவடிக்கையும் எடுக்கலாம் என்ற அச்சமும் நமக்கு ஏற்படுகின்றது.
3. சென்னை மாகாணமும், மைசூர் அரசும் 1892ஆம் ஆண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தம், அதனடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிரிஃபின் என்ற ஆங்கிலேயரை நடுவராக நியமித்தது. 1910இல் கண்ணம்பாடியில் மைசூர் அரசு 41.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையை கட்டும் போது சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு அரசும் 11 டி.எம்.சி.,க்கு ஒத்துக் கொண்டு, அதையும் மீறி 41.5 டி.எம்.சி.,க்கே அணையை கட்ட ஆரம்பித்தது. இப்படியான சிக்கல் இருக்கும்போது அதை தீர்க்க 1924இல் இரண்டாவது ஒப்பந்தமும், மெட்ராஸ் மாகாணமும், மைசூர் சமஸ்தானமும் கையெழுத்திட்டது. அந்த கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை குறித்து 1974இல் மேலும் அமர்ந்து பேச வேண்டுமென்ற நிலைப்பாடு தான் இருந்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் சில பிரச்சனைகளை குறித்து துணை ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. 1929 ஒப்பந்தத்தின் படி கிருஷ்ணராஜசாகர் அணையும், சென்னை மாகாண மேட்டூர் அணை திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் சில பகுதிகளான கொள்ளேகால், கோலார், குடகு பகுதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சென்றுவிட்டன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதி ஆகிவிட்டன என்று தொடர்ந்து கர்நாடகம் சொல்லி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் 1892 மற்றும் 1924, துணை ஒப்பந்தங்களான 1929 மற்றும் 1933 ஆகிய ஒப்பந்தங்களை செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டது. 
இதனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை சீராய்வு மனுவின் மூலமாக என்னென்ன உரிமைகளை மீட்க முடியுமோ, அதை மீட்க தமிழக அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகவில்லை என்பது தமிழகத்துக்கு கிடைத்த ஒரு பாதுகாப்பாகும்.
4. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, சாரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளின் கட்டுப்பாடும், அதனுடைய நிர்வாகத்தை மேலாண்மை வாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அணைகளின் அனைத்து திறவுகோல்கள் கர்நாடகத்திடம் இருந்து மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு வந்துவிடும். இதே போல தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர், அமராவதி ஆகிய மூன்று அணைகளும், கேரளத்தின் பாணாகர சாகர் அணையும் மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். தீர்ப்பிலிருந்து ஆறு வாரத்திற்குள் இந்தப் பணி முடிவாக வேண்டும். கர்நாடகம் இதற்கு ஒத்துக் கொள்ளாமல் எப்போதும் போல வம்பு செய்யும்போது இதை உச்சநீதிமன்ற கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். 
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மேலாண்மை  வாரியத்தை முதலில் அமைப்போம் என்று உறுதியளித்த பின் அந்த நிலையிலிருந்து பின்வாங்கியது. மேலாண்மை வாரியம் அமைப்பதை குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமென்று மாற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை வைத்தது. இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே நீர்ப் பங்கீடு சட்டப்பிரிவு 6(ஏ) கீழ் செயல்திட்டம் என்ற ஸ்கீம் (Scheme) அமைப்பு முறையின் கீழ் தான் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உருவாக்க முடியும் என்று வாதத்தையும் வைத்தது. மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6(ஏ) தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த அதற்குரிய தனிப்பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.
5. காவிரி நீர் விடுவதில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் அளவெடுப்பதை விட, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் இடத்திலிருந்தே அளவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவிலும் மேலாண்மை வாரியத்திலும் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பிலிகுண்டுலுவில் இருந்து மேலே 70 கி.மீ., தொலைவு வரையில் காவிரியின் மேற்கு பகுதி தமிழகத்தின் எல்லையாகும். பிலிகுண்டுலுவில் இருந்து இயற்கையாக உற்பத்தியாகின்ற தண்ணீர் சிற்றாறுகளின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரை பிலிகுண்டுலு முன்பே, கர்நாடக அணையிலிருந்தே கணக்கிட்டு அதன் அளவை நிர்ணயிக்க வேண்டும். 
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வரும் தண்ணீரையும் காவிரித் தண்ணீர் என்று கர்நாடகம் கணக்கு காட்டியது உண்டு. எனவே பிலிகுண்டுலுவைத் தவிர்த்து கர்நாடக அணைகளை கணக்கிட்டால் 15 முதல் 20 டி.எம்.சி., தண்ணீர் நமக்கு கிடைக்கும். இந்த நியாயத்தையும் கர்நாடகம் மறுக்கின்றது. 
6. கர்நாடகா அணைகளை கட்டும் போது தமிழகத்தின் அனுமதியை பெறாமலேயே கண்ணம்பாடி திட்டத்திலிருந்து, கபினி, ஹேமாவதி, ஹேரங்கி தற்போது மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே 4 மிகப்பெரிய அணைகளை கட்ட முடிவு செய்தது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டி.எம்.சி நீரை தேக்க முடியும். இது நம் மேட்டூர் அணையின் கொள்ளளவை விட மிக அதிகம். ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள 3 அணைகள் மூலம் மேலும் 45 டி.எம்.சி நீர் தேக்கப்படும். இதோடு தடுப்பணைகளையும் காவிரியின் குறுக்கே கட்ட திட்டங்களை தீட்டியது. இந்த தீர்ப்பின் விளைவாக கர்நாடகம் நிறைவேற்றவோ, மத்திய அரசு அனுமதி கொடுக்கவோ முடியாது. இந்த அணைகளை கட்ட ஒரு காலும் தமிழகம் அனுமதிக்க கூடாது. 
7. இந்த தீர்ப்பினால் தமிழகத்தின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் சமூக விரோதிகள் மணல் அள்ளுவதை தடுக்கப்படும். காவிரி ஆற்றில் கரூர், டெல்டா பகுதிகளில் மணல் அள்ளி குவிப்பதை இனிமேல் செய்ய முடியாது. ஏனெனில், காவிரி நதி மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு சென்றுவிட்டால் தமிழக அரசு இந்த மணல் அள்ளும் உரிமையை தவறாக பயன்படுத்த முடியாது. 
8. காவிரியில் தொழிற்சாலை கழிவுகளும், கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும். 
9. மேட்டூர் அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், காவிரி பாசனக் கால்வாய்கள், அதையொட்டிய நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். காவிரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளெல்லாம் மேலாண்மை வாரியத்தினால் கையகப்படுத்த வேண்டும்.
10. ஏற்கனவே திட்டமிட்டவாறு, தமிழக அரசு காவிரியில் 40 தடுப்பணைகள் வரை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
11. நடுவர் மன்றம் மாதவாரியாக பட்டியலிட்டு தமிழகத்துக்கு வரவேண்டிய நீரை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி 14.5 டி.எம்.சி., தண்ணீர் குறைத்த நிலையில் எப்படி சரியாக வரும் என்பதையும் சீராய்வு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறையும். 14.75 டி.எம்.சி நீர் இழப்பால் 88,500 ஏக்கர் நெற்பயிர் விளைச்சல் இல்லாமல் போய்விடும். காவிரி வெண்ணாற்றிலிருந்து பிரியும் 36 கிளை ஆறுகள் ஏ பிரிவு வாய்க்கால் மற்றும் சாதாரண வாய்க்கால்கள் என்பதெல்லாம் காவிரியின் உள்ளடக்கம். மேலும் காவிரி – குண்டாறு இணைப்பில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல இராமநாதபுர கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். இம்மாதிரியான ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் நீர்வரத்து இல்லாமல் பாதிக்கும். அதனால் முறையான சாகுபடி பணிகள் நடக்காது. எனவே டெல்டா மாவட்டங்களுக்கு மாற்று நீராதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். காவிரி படுகையில் தஞ்சை மாவட்டத்தில் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆயக்காட்டு, குடிமராமத்து செயல்பாட்டினை மேம்படுத்த தமிழக அரசு நிபுணர்களை கொண்டு அதற்கான கொள்கைகளை சீரிய அளவில் உருவாக்க வேண்டும். காவிரி கர்நாடகத்தின் 13ஆறுகளில் 2000 டி.எம்.சி., தண்ணீர் அரபிக் கடலுக்கு செல்கிறது. இந்த உபரி நீரை திருப்பினால் கர்நாடக அணைகளுக்கே அதிக தண்ணீர் கிடைக்கும். உதாரணத்திற்கு ஹேமாவதி அணைக்கே 200 டி.எம்.சி., தண்ணீர் திருப்பலாம். காவிரிப் பிரச்சனை போன்று தமிழகத்தை கர்நாடகம் எவ்வாறு வஞ்கிக்கின்றதோ, அம்மாதிரியே மகதாயி அணைப் பிரச்சனையில் கோவா மாநிலம் கர்நாடகத்திற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருப்பதை பார்த்து புலம்பும் கர்நாடகம், தமிழகத்தின் உரிமைகளை மட்டும் நியாயம் வழங்க மறுக்கின்றது. 
12. எப்படி மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரை நியமனம் செய்யும் போது முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்கட்சித் தலைவர் என கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சட்டங்கள் உள்ளதோ, அம்மாதிரி தமிழகத்தின் நீராதாரங்கள், நதிநீர் பிரச்சனை குறித்து முடிவு செய்யும் போது முதல்வர், எதிர்கட்சித் தலைவர், நதிநீர் பிரச்சனைகளை அறிந்த வல்லுநர்களை கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு குழு அமைத்து தமிழக முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
13. தமிழ்நாடு சட்டமன்றத்தை அவசரமாக கூட்டி காவிரி மேலாண்மை வாரியமும், இந்த தீர்ப்பின் கூறுகளை நடைமுறைப்படுத்த வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும்.
14. இறுதியாக தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டுறவு கூட்டாட்சி எனக் கூறும் பிரதமர் மோடியை சந்தித்து ஒரே குரலாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்க அழுத்தம் கொடுத்து தீர்ப்பின் உத்தரவுகளை நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்த வேண்டும். 
தமிழக வரலாறு, நாகரிகம், அன்றாட வாழ்க்கை முறையில் இணைந்த காவிரி உரிமையை நிலைநாட்ட சர்வபரி தியாகங்களோடு தொலைநோக்கு சாத்தியக் கூறுகளை மனதில் கொண்டு அணுக வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. காவிரிப் பிரச்சனையில் இதுவொரு முக்கியமான காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தை சமயோஜிதமாக அணுகி சாத்தியப்பட்ட உரிமைகளையாவது நிலைநாட்ட அரசியல் மனமாச்சரியங்களை கடந்து கடமைகளையாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
தற்போது, உலக மத்திய கிழக்கு பகுதியில் யூப்ரேடிஸ் – டைகிரீஸ் நதிகள் சிக்கல், துருக்கி – சிரியாவும் – ஈராக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள நினைக்கின்றன. ஜோர்டான் நதி பிரச்சனையை இஸ்ரேல் – லெபனான் – ஜோர்டான் – பாலஸ்தீனத்தோடு சுமூகமான பேச்சுவார்த்தையில் உள்ளன. ஆப்பிரிக்காவில் நைல் நதி எகிப்து – எத்தியோப்பியா – சூடானோடு பேச்சுவார்தையில் உள்ளது. மத்திய ஆசியாவின் ஏரல் கடல் பிரச்சனையில் கஜகஸ்தான் – உஸ்பெகிஸ்தான் – துர்கெமெனிஸ்தான் – தஜிகிஸ்தான் – கிரிகிஸ்தான் போன்ற நாடுகள் தண்ணீர் பகிர்வுக்கு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஏன் இந்தியா, பாகிஸ்தான், நேபாள், வங்காள தேசம் போன்ற அண்டை நாடுகளோடு நதிநீர் தாவாக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
இப்படி உலகத்தில் பல நதிநீர் தீரங்களின் பிரச்சனைகளை நாடுகளுக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்ளும் நிகழ்வுகளை நீண்ட பட்டியலிடலாம். கடைமடைப் பாசனப் பகுதியான காவிரிக்கு சகல உரிமைகள் இருந்தும், கூட்டுறவு கூட்டாட்சியில் கர்நாடகத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் உரிய நியாயங்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்க நிலையில், இனிமேல் என்ன காவிரிப் பிரச்சனையில் செய்ய வேண்டுமோ அதை இதயசுத்தியோடு செய்ய வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது. 

செய்தித்தொடர்பாளர், திமுக.,
நூலாசிரியர், 
இணையாசிரியர், கதைசொல்லி,
பொதிகை – பொருநை - கரிசல்
rkkurunji@gmail.com

#காவிரிப்_பிரச்சனை
#உச்சநீதிமன்றத்_தீர்ப்பு
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#Cauvery_Issue
#Supreme_Court_of_India_Judgement
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-02-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...