Thursday, February 7, 2019

திரிகோணமலையும், புவியரசியலும்

திரிகோணமலையும், புவியரசியலும்
--------------------------------
இலங்கை பயணத்தின்போது திரிகோணமலையைப் பற்றி எழுத வேண்டுமென்று நீண்டநாட்களாக நினைத்திருந்தேன். திரிகோணமலை ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போன்று இயற்கை துறைமுகம். ஆழமான, மலைகள் சூழ்ந்த துறைமுகமாகும். இந்த துறைமுகத்தினை குத்தகை பெற அமெரிக்கா, சீனா, மேற்கத்திய நாடுகள் போட்டி போடுகின்றன. இந்தியாவும் இந்திரா காந்தி காலத்திலிருந்து எண்ணெய் கிணறு அமைக்க இந்த துறைமுகத்தினை இலங்கை அரசிடம் வற்புறுத்தியது.


இலங்கையின் திரிகோணமலை துறைமுகமும் இந்தியப் பெருங்கடல் புவியரசியலும் ஒருங்கிணைந்தவை. இந்த துறைமுகத்தில் அந்நியர்கள் புகுந்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் எழலாம். சீனா இலங்கையின் ஹம்பன்தோட்டாவைப் போன்று இந்த துறைமுகத்தையும் கைப்பற்ற திட்டமிடுகின்றது.

அது இந்தியாவிற்கு ஏற்றதல்ல. தமிழர்கள பகுதியிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தை வைத்துக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்கள் உலக நாடுகளை தண்ணி காட்டிக் கொண்டு வருகின்றனர். இந்தியா இந்த பிரச்சனையில் பாராமுகமாக இருப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல. இந்தியாவிற்கு அருகிலுள்ள ஒரு கேந்திரமான பகுதியை இந்தியா கூர்ந்து கவனித்து இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும். இந்த துறைமுகப் பிரச்சனையைப் பற்றி தனியாக ஒரு நூலே எழுத வேண்டும். இருப்பினும் திரிகோணமலை குறித்த சுருக்கமான தகவல்கள் வருமாறு.

திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். எட்டு ஈஸ்வரத் ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திரிகோணமலையே விளங்கியது.
இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர், போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்திய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.

கடந்த 1957வரை திரிகோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கியத் தளமாகவும், அதில் பணிபுரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலைகோட்டை பிரித்தானியர்களாலும் பயன்படுத்தப்பட்டது. 1950களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன், சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திரிகோணமலையே பிரித்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திரிகோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திரிகோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. முன்னர் திரிகோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவருகின்றது.

////

திரிகோணமலை உட்கட்மைப்பு என்ற முகநூல் வழியான தகவல்கள்…

கிழக்கில் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டை வெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை வாழைச்சேனை, பூநொச்சிமுனை, ஆரையம்பதி, செங்கலடி ஏறாவூர் வாகரை என நூற்றுக்கணக்கான தமிழ் கிராமங்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அக்கிராமங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டது.

அதேபோல அம்பாறையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி, மீனோடைக்கட்டு, திராய்க்கேணி பல கிராமங்கள் முழுமையாக பறிக்கபட்டுவிட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மீனோடைக்கட்டு தமிழ் வித்யாலயம் என காணப்பட்ட பாடசாலை இன்று இல்லை.
2009க்கு பின்னர் மீண்டும் பழைய நிலை தோற்றுவிக்கபட்டு இருக்கிறது. பல ஏக்கர் மேச்சல் தரைகள் பறிபோய் இருக்கிறது. கோவில் சிலைகள் திருடப்பட்டு இருக்கிறது. விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டு இருக்கிறது. மாடுகள் உட்பட கால்நடைகள் நாள்தோறும் திருடப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பாக அரசு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.


07-02-2018

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...