Friday, April 12, 2019

மீள்பதிவு 12-08- 2012 #பிரிட்டிஷ்நாடாளுமன்றம் - மகா சாசனம் நினைவுகள் - #ஈழபிரச்சனை .

மீள்பதிவு 12-08- 2012
#பிரிட்டிஷ்நாடாளுமன்றம் - மகா சாசனம் நினைவுகள் - #ஈழபிரச்சனை .
British Parliament - Magna Carta- Eelam Tamils Question.
_____________________________________________
சமீபத்தில் லண்டனிலிருந்து நண்பர்கள், டாக்டர்.அர்ஜுனா சிவானந்தம், அதிர்வு. கண்ணன், ராஜ்குமார் ஆகியோர் வெவ்வேறு நாட்களில் தமிழகம் வந்திருந்தார்கள். என் இல்லத்திற்கும் வந்திருந்து சிலமணிநேரங்கள் செலவிட்டார்கள். அந்தசமயத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக, இந்திய, உலக அரசியல் எல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தோம்.
மூவருமே பிரித்தானிய தமிழ்ப் பேரவை, லண்டனில் உள்ள பிரிட்டன் பார்லிமெண்டில் நடத்திய ”உலகத் தமிழர் மாநாட்டில்” 
தளபதி மு.க. ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர். டி.ஆர். பாலு ஆகியோரோடு நான் கலந்து கொண்டு பேசிய மாநாட்டைப் பற்றி பாராட்டிப் பேசியது மகிழ்ச்சியைத் தந்தது.

2012 நவம்பர் 10ம் நாள் நடைபெற்ற, இந்த மாநாட்டை வாழ்த்தி தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தளபதி மு.க. ஸ்டாலின் துவக்கவிழா மாநாட்டில் பேசினார். மற்ற மூன்று நிகழ்வுகளிலும் இலண்டன் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுகளின் காணொளி இந்தப் பதிவில் இணைக்கப் பட்டுள்ளது.
அப்போது, கதை சொல்லி ஆசிரியர். கி.ராஜநாராயணன் அவர்களிடம், லண்டன் செல்கின்றேன் என்று சொன்னபோது, எதற்காக என்று கேட்டார். விபரத்தைச் சொன்னேன். அப்போது, கி.ரா அவர்கள் “இந்தியப் பாராளுமன்றத்துக்குப் போயிருக்க வேண்டியவர் நீங்க, இன்னைக்கு உலகப் பாராளுமன்றங்களோட தாயா விளங்கும் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கே போய் பேசப் போகிறீங்க... வாழ்த்துகள் . இதவிட வேற என்ன பேரு வேணும் உங்களுக்கு, வானம்பார்த்த விவசாயி வீட்டில் பிறந்த நீங்கள பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு உள்ளே காலடி எடுத்து வச்சுப் பேசப் போறது நம்ம கரிசல் மண்ணுக்கே 
பெருமை தானே. உங்களுக்கு டெல்லி பாராளுமன்றத்துக்குபோகும் வாய்ப்பு ஒவ்வொரு தடவையும் வந்து கைநழுவிப் போகும் நிலையை நானும் கவனிச்சுட்டுதானே இருக்கேன்” என்று பாசத்தோடு பேசினார்.

உண்மைதான். 2002லும், 1999லும், 1998லும், 1980களின் இறுதியிலும் அப்போதைய பாராளுமன்றத்திற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்குச் செல்லவேண்டிய வாய்ப்புகள் கைவரை வந்தது. அது தவறியதா, மறுக்கப்பட்டதா என்று சொல்ல முடியவில்லை. இயற்கைக்குத் தான் தெரியும். இரண்டுமுறை சட்டமன்றத் தேர்தலிலும் மிகக்குறைவான வாக்குகளில் வெற்றியும் நழுவிப்போனது. தகுதியே தடை என்பதோடு முடித்துக் கொள்கிறேன்....
பிரிட்டனில் நடந்த மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து மூன்று அமர்வுகளிலும் தி.மு.க சார்பாக, என்னுடைய வாதங்களை எடுத்து வைத்ததை இன்றைக்கும் நாங்கள் பேசுவோம் என்று, டாக்டர் அர்ஜுனாவும், லண்டன் ராஜ்குமாரும், அதிர்வு கண்ணனும் குறிப்பிட்டது சற்று மகிழ்ச்சியாக இருந்தது.
டாக்டர். அர்ஜுனா சிவானந்தம் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய நிர்வாகி. அந்தக் கட்சிதான் இன்றைக்கு பிரிட்டனின் ஆளும் கட்சி. அவர் என்னை, லண்டனின் “ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்” என்று சொல்லக்கூடிய பிரபுக்கள் அவையான பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேலவைக்கு, (அதாவது நமது மாநிலங்களவை போன்று) அழைத்துச் சென்றார். உறுப்பினர்கள் அமரும் இருக்கைக்கு அருகில் உள்ள பக்கத்தில் என்னை அமர வைத்தது பெருமையாக உணரவைத்தது.
அதே போல “ ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்”-க்கும் அழைத்துச் சென்றார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நம்முடைய மக்களைவையைப் போன்றது. இந்த இரண்டு அவைகளுமே நள்ளிரவு 12மணி வரைக்கும் கடும் குளிரிலும் நடைபெற்றது. சபையில் 70 சதவிகித உறுப்பினர்கள் வருகை புரிந்திருந்தனர் என்பதையும் அறியமுடிந்தது. எவ்வளவு அக்கறையோடு அங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகின்றார்கள் என்பது மெய்மறக்கச் செய்தது.
லண்டன் பாராளுமன்ற கட்டிடம் ”வெஸ்ட் மினிஸ்டர்” பிரம்மாண்டமான அரண்மனை 1867ல் தேம்ஸ் நதிக்கரையில் கட்டி முடிக்கப்பட்டது. பிரமிக்கச் செய்கின்ற கட்டிட அழகு. 
பிரிட்டிஷ் மக்கள் என்றைக்கும் பழமையினைப் பாதுகாப்பார்கள். அந்தப் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன், என்னையறியாமல் கையிலிருந்த மயிர்க்கால்கள் கூச்செரிந்தன. அந்த வளாகத்தின் உள்நுழைந்ததும் விசாலமான பெரிய அரங்கம். பிரிட்டிஷ் மன்னர்கள், ஆளுமைகள், வின்ஸ்டண்ட் சர்ச்சில் போன்ற பிரதமர்கள் நல்லடக்கத்திற்கு முன் அவர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த அரங்கத்தின் தரையில் பித்தளை தகடுகள் பதித்து, அந்த இடத்திலே அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்படி அந்தக் கட்டிடத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள் ரோம், க்ரேக்கத்தின் தொட்டில்களில் வளர்ந்தாலும் அது முழுமையடைந்தது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தான். மகாசாசனம் என்ற Magna carta மேக்னா கார்ட்டா இங்கிலாந்தில் அரசருக்கும் அந்நாட்டுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓரு ஜனநாயக ஒப்பந்தம்.
1215ஆம் ஆண்டு முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம் பதின்மூன்றாவது நூற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து மீளவும் பதிப்பிக்கப்பட்டது.
இந்த சாசனம் 1225ஆம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டு, 1297ஆம் ஆண்டு பதிப்பு இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசமைப்புச் சட்டத்தில் இங்கிலாந்தில் ஜனநாயக உரிமைகளைக் காக்கின்ற பெரும் சாசனம் (The Great Charter of the Liberties of England, and of the Liberties of the Forest) என அழைக்கப் படுகின்றது. இந்த வரலாற்றுச் சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் ஆட்சி என்ற ஜனநாயகக் குறிக்கோள்களை பாதுகாக்கின்ற உலகின் முதல் சாசனமாக ரன்னிமேடின் கையெழுத்திட்டாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தான் இது முழுமை பெற்றது.
இலங்கைத் தமிழரான அர்ஜுனாவுக்கு பிரிட்டிஷ் அரசியல் தலைவர்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நல்ல நட்பும், மரியாதையும் இருக்கின்றது. இன்றைக்கும் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஆர்வம் செலுத்துவதாலும் , நாடாளுமன்றங்களில் தொடர்ந்து பேசுவதாலும் தான், பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் இலங்கைக்குச் சென்ற பொழுது, இராஜபக்‌ஷேயிடம் சர்வதேச விசாரணை வையுங்கள் என்று கறாராகச் சொன்னதும், யாழ்பாணம் வரை சென்று போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்ததும் நிகழ்ந்தது. டேவிட் கேமரூன் போரில் பாதிக்கப்பட்ட யாழ்பாணத் தமிழர்களை நேரில் சந்தித்த முதல் பிரதமராவார்.
இன்றைக்கும் இந்த மாநாட்டில் வலியுறுத்திப் பேசிய ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச, சுந்தந்திரமான, நம்பகமான, விசாரணையும், அங்குள்ள தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கான பொது வாக்கெடுப்புக்கும், தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது, வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறுவது போன்ற விடயங்கள் இன்றைக்கும் தீர்க்கப்படாமலே இருக்கின்றது.
இப்படியான நினைவுகளை பதிவு செய்யவேண்டுமென்று நீண்டநாட்களாக நினைத்ததுண்டு, இந்த மூவரின் சந்திப்பால் இவற்றை எல்லாம் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.
Video : 1
Video : 2
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-04-2019


Image may contain: 2 people, people standing and suitImage may contain: 11 people, including Alagar Samy, people smiling, people standing, suit and indoor
Image may contain: people sitting and indoor

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...