Saturday, April 6, 2019

விழலுக்கு இறைத்த நீரென்று இருந்தேன், நெஞ்சுக்கு நிழல் என்று புரிய வைத்த கிராமத்து கள்ளமில்லா நட்புறவு.



தூத்துக்குடி நாடாளுமன்ற  உட்பட்ட எட்டையபுரம் அருகே சுரக்காய் பட்டி என்ற கிராமத்திற்கு திருமதி கனிமொழி, ஆதரவு திரட்ட என்று சென்றிருந்தேன்.  சென்ற இடத்தில் எல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு மேலான சில நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்ட போது ரணமான காயத்தில் கைபட்டால் கூட வலிக்குமே என்று மயில் தோகையால் மருந்தை தொட்டு மருந்திடுவது  போல் இருந்தது.

 நீங்கள் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாமல் போனாலும் எங்கள் கிராமத்திற்கு உங்களால் தான் பேருந்து வசதி கிடைத்தது என  ஜெகநாதன்,  வண்ணம் பூசும் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூற அப்போது என்னுடன் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் ,"ஆமாம் சார் என்னிடமும்  இதனை அடிக்கடி சொல்வார்கள் 
" என வழிமொழிந்த போது எண்ணமெல்லாம் இனித்தது..

நன்றிக் கொன்ற இந்த உலகத்தில் நினைவில் வைத்துக் கொண்டு வருந்துவது ஏன் என நான் செய்த நன்மைகளை பலனை எதிர்பார்க்காமல் நானே மறந்து போயிருந்த காலத்தில் இதனை எல்லாம் நினைவூட்டியது கடும் கோடை பயணத்தில் நீர்வீழ்ச்சியில் நின்றது  போல இருந்தது.  எனது அடுத்த பணிகளுக்கு அளிக்கும் உற்சாகமாய் சுமந்துக் கொண்டேன். இனியும் வேகமாக பயணிக்க என்னால் முடியும். 

இதேபோல 1989ஆம் ஆண்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ராஜப்பட்டி,  மலைப்பட்டி,  சுரக்காய்பட்டி,  சிவஞானபுரம் என்ற வழித்தடத்தில் கிளவிப்பட்டி போன்ற பேருந்து செல்லமுடியாத கிராமங்களுக்கும் அதுவரை பேருந்து போகாத கிராமத்திற்கும் பேருந்துகள் செல்ல வழித்தடம் அமைய காரணமாக இருந்தேன்.  நெல்லை மாவட்டம் திருவேங்கடம் வட்டாரத்தில் உள்ள சங்குபட்டி வெள்ளாளபுரம் பகுதிகளுக்கு முதன்முதலாக பேருந்து ஓடச்செய்ததும்  இன்று நினைவில் இருக்கின்றது.  அத்துடன் இல்லாமல் இல்லாமல் கிராம பகுதிகளில் 

நூறு அடிபம்புகள் கிராம பகுதிகளுக்கும் பத்து நீர்த்தேக்கத் தொட்டிகள்,  திருவேங்கடம் மேல்நிலைப் பள்ளிக்கு கட்டிட வசதி செய்துக் கொடுத்தேன்.

காலச்சக்கரம் உருண்டோடிவிட்டன, நானும் அதற்கு ஈடு கொடுத்து ஓடிக்  கொண்டிருக்கின்றேன்.  சூழல் மாறி இருப்பினும் சில அவமானங்களையும் தடைகளையும் மீறி பயணிக்கிறேன். ஏதோ ஒரு மன தைரியமும் வைராக்கியமும் பயணத்தை நடத்த உந்துசக்தியாக இருக்கின்றன .

நான் எதையும் வெளிப்படையாக பேசுகின்றவன். முண்டாசுக் கவி பாரதிக்கு அவருடைய தந்தையார், பிதப்புரம் கிராமத்தில் பருத்தி அறவை ஆலையை அமைத்து கொடுத்த விரும்பினார். பாரதிக்கோ அதில் ஆர்வமோ அக்கறையோ இல்லை. என் தொழில் கவி நெய்து தமிழன்னைக்கு அணிவிப்பதே என வானம்பாடியாக பறந்துபுகழ்வானில்புத்திலக்கியவாதியாக நிலைபெற்றார். 

இயற்கையின் நீதி ஒன்று இருக்கிறது ஐநா சபையில் மதிக்கத்தக்க பதவியில் பணியாற்றியிருந்தாலும் உயர் நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ என் சகாக்களை போல நானும் நீதிபதி இருக்கையில் அமர்ந்து இருக்கலாம் ஆனால் அதில் ஆர்வம் இல்லாமல் பொதுவாழ்வுக்கு வந்து விட்டேன் வாழ்ந்த காலத்தை விட இனி வாழப்போகும் எஞ்சிய காலமோ  குறைவு அதில் நிறைவாய் மனதிற்கு நிம்மதி தரும் நம்முடைய பணியைத் தொடர்வோம் என்ற நிலைபாட்டை எடுத்திருக்கின்றேன் எத்தனையோ உச்ச நீதிமன்ற வரை பொது நலவழக்குகள்,மனித உரிமை ஆணையம் முன்பு பல முறையீடுகள்.




இன்றும் கிராமப்புறம் செல்லும்போதெல்லாம் மக்கள் சொல்லும் வார்த்தைகள் தான் எனக்கு பலமாகவும் அடுத்த கட்ட பயணத்திற்கு உந்துசக்தியாகவும் இருக்கின்றது இவற்றை ஐநா மன்றமோ  உச்ச நீதி மன்றமோ  அளித்திருக்க முடியாது என திண்ணமாக நம்புகிறேன்.

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
06-04-2019

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...