Tuesday, April 2, 2019

திருநெல்வேலியில் தாமிரபரணி நதியின் மேலமைந்த , நகரின், அடையாளமாகத் திகழும, #சுலோசனாமுதலியார்பாலம்

இன்று  தேர்தல்  பணியில்  ஈடுபட்டிருந்த  போது எட்டையபுரம் டாக்டர் சௌந்திரராஜன்  #திருநெல்வேலியில் தாமிரபரணி நதியின்  மேலமைந்த , நகரின், அடையாளமாகத்  திகழும,
#சுலோசனாமுதலியார்பாலம்அமைந்த நாள் என ஞாபகமூட்டினார். அதன்  வரலாறு  இந்த என்  மீள்  பதிவில்  காணலாம்.
*தனது சொந்த செலவில் சுலோசனா முதலியார் நெல்லையில் கட்டிய பாலம்*
----------------------------

சுலோச்சனா முதலியார் பற்றி வரலாறு......
1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து ...

திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும். படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது. படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை.




1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார். நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்......சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்.

ஆலோசனைக் கூட்டமும், அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும்:-

கேப்டன் பேபர், W.H. ஹார்ஸ்லி, நமது சுலோசன முதலியார் (தாசில்தார் பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர்),கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர். உடனடியாகப் பாலங்க்கட்டத் தீர்மானிக்கப்பட்டது.கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வரைபடம் தயாரானது. 760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள், அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது. தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டின.லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது. திட்ட மதிப்பீடு அரை லட்சம். கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர். இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டிவிடும்.

ஆனா மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார். பணத்திற்கு என்னசெய்வது? எங்கே போவது ? மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார், அதே சமயம் கலெக்டர். அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது.

அது சரி யார் இந்த சுலோசன முதலியார்? திருமணம், தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர். இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள்தான், முதலியாரின் மூதாதையர்கள். கோடீ்ஸ்வரக் குடும்பம். வீட்டில் தங்கக் கட்டிகள் பாள்ம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம். தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம். கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம். குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர். நீளமான 'அல்பேகா' கருப்புக் கோட்டு், ஜரிகைத் தலைப்பா, அங்கவஸ்திரம், வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்கும். மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை. நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார். மனைவி வடிவாம்பாள், "கவலைப்படாதீர்கள்; தூங்குங்கள்; காலையில் பார்த்துக் கொள்ளலாம்" என, ஆறுதல் அளிக்கின்றார்.

சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி:-

அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார். வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது.1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்குவதற்குமுன், கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே, இவர் தந்தை, இராமலிங்க முதலியார்தான். பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது . மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி. ஒரே மகன், வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது. என்றெல்லாம் நெஞ்ச்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப்பொழுதைக் கழிக்கின்றார். ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார். அவரது தந்தை "மொழிப்பாலமாக" (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை, 'ஆற்றுப் பாலத்தில்" போட முடிவு செய்கின்றார். கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவா போகி்ன்றார்?

கலெக்டர் தாம்சன், சுலோசன முதலியாரைக் கட்டி்யணைத்த கதை:-

மறுநாள் காலையில், கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார். சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும்,கொஞ்சம் பணத்தையும் "அச்சாரக் காணிக்கை" என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார். கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி. திக்குமுக்காடிப் போகின்றார். வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமற் போகின்றன. மரபுகள் உடைகின்றன. கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து "ஆலிங்கனம்" செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார். பாலத்திருப்பணிக்குக் தனிமனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை. கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார். பாலமும் கட்டி முடிக்கப்படுகின்றது.

#சுலோச்சனா_முதலியார்_பாலம்
#திருநெல்வேலி
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-04-2019


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...