Saturday, June 22, 2019

இன்றைய நிலையும் பாலச்சந்தரின் #தண்ணீர்தண்ணீர் -#எத்திலப்பநாயக்கன்பட்டி (ஏழுபட்டி)

இன்றைய நிலையும் பாலச்சந்தரின் #தண்ணீர்தண்ணீர் -#எத்திலப்பநாயக்கன்பட்டி (ஏழுபட்டி)
————————————————
கடந்த 1981இல் வானம் பார்த்த எங்களின் கரிசல் கந்தக மண்ணில் எடுக்கப்பட்ட திரைப்படம். அன்றைய கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட எட்டையபுரம் அருகேயுள்ள ஏழுபட்டி கிராமங்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை அப்போது உருவாக்கியது. அப்போது நான் திரைப்பட தணிக்கை குழுவிலும் இருந்ததாக நினைவு. அந்த படத்தினை தணிக்கை செய்யும் குழுவில் நான் இடம்பெறவில்லை. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ராஜேஷ், சரிகா, ராதாரவி போன்றோர் நடித்தனர். ஏழுபட்டி கிராமம், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் போன்ற காட்சிகளெல்லாம் இடம்பெறும்.

இந்த திரைபடத்தின் முதல் காட்சி. தண்ணீர் குடத்துடன் தள்ளாடி நடந்துவரும் சிறுவன் கீழே கிடக்கும் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டே நடந்துவரும்போது தடுமாறி கீழே விழுந்து தண்ணீர் குடம் சிதறுகிறது. கைக்கு எட்டிய அரிய சிறியளவு தண்ணீர் 
கஷ்டப்பட்டும் வாய்க்கு எட்டவில்லை. அந்த கிராமத்தில் பல கொடிகள் பட்டொழி வீசி பறக்கின்ற காட்சிகளும் இருந்தன.

இந்த திரைப்படம் வெளியாக அனைவராலும் பேசப்பட்ட பின் கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வாக்கு சேகரிக்க சென்றபோதும் தண்ணீர் பிரச்சனை இருந்தது. குறிப்பாக எத்திலப்பநாயக்கன்பட்டியில் உள்ள மக்கள் தண்ணீருக்காக பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த தண்ணீர் தண்ணீர் திரைப்படம் இன்றைக்குள்ள பிரச்சனைகளை, அன்றே 31 வருடத்திற்கு முன்பே கோடிட்டு காட்டினார் பாலச்சந்தர். மனுக்கள் கொடுத்து பார்த்தார்கள். அந்த மனுக்கள் யாவும் தாலுக்கா ஆபிஸ் குப்பைத்தொட்டிக்கு தான் சென்றதோயொழிய தண்ணீர் வரவில்லை. தண்ணீர் தண்ணீர் தான்.
ஐ.நா. மன்ற அறிக்கை 20 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் பாதிக்கும் என்று கணித்து எச்சரித்தபோது இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஐ.நா. மன்றத்தின் இந்த கருத்தை எனது நதிநீர் இணைப்பு வழக்கில் இணைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
அப்போதெல்லாம் இதை யாரும் கவனிக்கவில்லை. பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென்றால் தொலைநோக்கு பார்வை வேண்டும். பிரச்சனைகளை வரும் முன் எதிர்கொள்வது தான் சாமர்தியம். இன்றைக்கும் தண்ணீர் தண்ணீர் திரைப்படம் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக தான் உள்ளது. பாமரத்தனமாக, வெள்ளந்திதனமான வசனங்களை கேட்டாலே இன்றைக்கும் கிராமங்கள் எப்படி இருக்கின்றது என்று அறியலாம். இதுதான் யதார்த்தம். ஆர்வமுள்ளவர்கள் இந்த தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தை பார்க்க வேண்டுகிறேன். வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்ல, இன்றைய நிலையை அறிந்து கொள்வதற்காக தான்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-06-2019

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...