Friday, June 28, 2019

தமிழக ஊடகங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அதையொட்டி வெளியான சிறப்பு மலரில் இடம்பெற்ற தமிழக ஊடகங்கள் குறித்த கட்டுரை.
மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். இது 1925 இல் குடியரசு பத்திரிகையை ஈரோட்டில் பெரியார் துவக்கிய போது அதன் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.
"பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் தினமணி துணை புரியும்."
No photo description available.
இவை 1934 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று வெளிவந்த தினமணி முதல் தலையங்கத்தில் இடம்பெற்றிருந்த வரிகள்.

"உறங்கிக் கிடைக்கும் தமிழ்ச் சாதியை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டுபண்ணி, அவர்களை முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பத்திரிகையின் நோக்கம்."
இவ்வாறு 1913-இல் சுதந்திர உணர்வுடன் தான் ஆரம்பித்த 'ஞானபானு' பத்திரிக்கையின் முதல் இதழில் எழுதி இருந்தார் சுப்பிரமணிய சிவா.
இவையெல்லாம் அப்போது பத்திரிகை ஆரம்பித்தவர்களுக்கு பின்னிருந்த எழுச்சியையும், மக்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தும் அன்றைய ஊடக எழுத்துக்கள்.
Image may contain: 4 people, people smiling, beard and text
அதே சமயம் வெறும் வியாபாரத்தை மட்டும் முன்னிறுத்தாத எழுத்துக்களும் கூட.
'பிதாமகன் சுத்தமான இசுப்பிரித்து நாமத்தினாலே ஆமென்' என்று 1557-இல் அச்சிடப்பட்ட முதல் தமிழ் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில் மத நோக்கம் வெளிப்பட்டாலும் அதன் மூலம் தமிழ் அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்தது. இந்திய மொழிகளில் இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் நூல் இதுதான்.

1578 இல் தூத்துக்குடி அடுத்துள்ள புன்னைக்காயலில் அண்டிரிக் என்பவர் தமிழ்நாட்டின் முதல் அச்சகத்தை உருவாக்கியபோது அதற்கான பணத்தை அளித்தவர்கள் தூத்துக்குடி மீனவர்கள் தான்.
இப்படி பலருடைய ஒத்துழைப்பின் மூலம் தமிழ் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது.
1832 இல் தமிழில் வெளிவந்த முதல் இதழான ‘தமிழ் மேகசின்’ வெளிவர காரணமாக இருந்ததும் மதத்தைப் பரப்பும் நோக்கம்தான் என்றாலும் அதன் மூலம் தமிழையும் மக்களிடம் பரவலாக கொண்டு சென்றார்கள்.
அதுவரை தேவாரம் திருவாசகம் என்று சைவ சமயத்தை பரப்புவதற்காக பயன்பட்ட தமிழை கிறிஸ்தவர்கள் தங்கள் மத நோக்கத்திற்காக பயன்படுத்தினாலும் அவற்றில் மூலம் தமிழ் நவீன பட்டதும் உண்மை.
முதலில் மத நோக்கத்திற்காக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த தமிழ் பிறகு அரசியல் நோக்கங்களுக்கு பயன்பட ஆரம்பித்தது. விடுதலை உணர்வை வெளிப்படுத்தியபடி 1882 இல் இருந்து சுதேசமித்திரன் வெளிவரத் துவங்கி 1889 இல் நாளிதழ் ஆனது.
1907இல் ‘இந்தியா’ இதழும் அதை தொடர்ந்து நவ சக்தியும் வெளிவந்தன இதற்கிடையே நீதிக்கட்சியினரின் ‘திராவிடன்’, ‘சுயராஜ்யா’ இதழ்கள் வெளிவந்தன.
இதே கால கட்டத்தில் 1907இல் அயோத்திதாசர் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையும் வெளிவந்திருக்கிறது.
பிறகு டாக்டர் நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிக்கையும் வெளிவந்த பிறகு 1934இல் ‘தினமணி’ வெளிவர ஆரம்பித்தது. அப்போதே அவர்களுக்குள் போட்டி இல்லாமல் இல்லை.
தினமணி வரத் துவங்கியதும் ‘சுதேசமித்திரன்’ காங்கிரஸ் தோன்றும்முன் தோன்றிய பத்திரிக்கை என்று விளம்பரப்படுத்திய போது, ‘தினமணி’ பதிலுக்கு ‘கிழடு தட்டாத பத்திரிக்கை’ என்று சுவரொட்டிகளை ஒட்டியது. அன்றைக்கிருந்த போட்டி அந்த அளவுக்குத்தான் இருந்தது.
அப்போது இருந்த தோழமை பண்புக்கு ஓர் உதாரணம், சுதந்திர போராட்டத்திற்காக தினமணி ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் கைதாகி, சிறையில் இருந்தபோது 25.11.1940-இல் வெளியான தினமணியில் அடுத்து ஆசிரியராக பொறுப்பேற்ற ஏ.என்.சிவராமனை பற்றி இப்படி எழுதியிருந்தார்.
“தினமணி திறமையாக நடத்துவதற்கு சிவராமன் சகல குணங்களும் வாய்க்கப் பெற்றவர்”.
கல்வியறிவு படிப்படியாக பெருகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் மொழியை மிக எளிமையான முறையில் கொண்டு போனது 1942இல் மதுரையில் துவங்கப்பட்ட தினத்தந்தி தான்.

பேச்சு மொழிக்கு நெருக்கமான மொழி நடையுடன் மக்களை அணுகியபோது அதை வாசித்தவர்கள் தொடர்ந்து அதன் வாசகர்கள் ஆனார்கள். 1951இல் திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்ட தினமலரும் இதைத்தொடர்ந்து தனக்கென வாசகர் பரப்பை பெற்றது.
வார இதழ்களில் 1926இல் துவங்கப்பட்ட ஆனந்த விகடன் ,கல்கி,1947இல் துவக்கப்பட்ட குமுதமும் படிப்படியாக வளர்ந்து லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் அளவுக்கு வளர முடிந்தது.
வாசிப்பை பரவலாக்கிய இந்த இதழ்கள் துவக்கப்பட்ட போது, அவற்றின் விற்பனை 2000 பிரதிகளுக்குள் தான் இருந்தது.
உ.வே.சாமிநாத ஐயரின் ‘என் சரித்திரம்’ விகடனில் தொடராக வெளிவந்ததைத் தொடர்ந்து, அதே இதழில் ஜெயகாந்தன் கவனம் பெற்றார். அவருடைய பல முத்திரைக் கதைகள் அதில் வெளிவந்தன.
1936இல் துவக்கப்பட்ட ‘மணிக்கொடி’யில் டி.கே.சி, உ.வே.சாமிநாத ஐயர், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, மௌனி, கு.ப.ரா போன்ற பலருடைய படைப்புகள் வெளிவந்தன.
சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து', கா.நா.சு வின் 'இலக்கிய வட்டம்' ஆகியவை வெளிவந்து பல இலக்கியவாதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திய போதும், புதுக்கவிதைகள், நவீன மொழி பெயர்ப்புகள் என்று பல முயற்சிகள் நடந்தன.
அப்போதும், அவர்களிடமிருந்த முக்கியமான கண்ணோட்டம் சார்ந்த தவறு, அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அரசியல், சமூக மாற்றங்கள் குறித்த எந்தப் பதிவையும், பார்வையையும் முன்வைக்காமல் இலக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தியது தான்.
1960 எழுபதுகளில் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்த எந்த பதிவையும் அப்போது வந்த இலக்கிய இதழ்களில் பார்க்க முடியவில்லை.
தமிழ்மொழி ஆய்வுக்காக 'செந்தமிழ்' போன்ற இதழ் 1904 இல் இருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும், அதைத்தொடர்ந்து ‘தமிழ்ப்பொழில்’ ‘செந்தமிழ்ச்செல்வி’ போன்ற இதழ்கள் வெளிவந்தாலும் அவற்றின் வாசகப் பரப்பு மிகவும் குறைவு.
அதே நேரத்தில் அப்போது இருந்த இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் திரண்ட உணர்வை ஒருங்கிணைக்கப் பல இதழ்களை நடத்தினார்கள் திராவிட இயக்க தலைவர்கள்.
பெரியார்- ‘குடியரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, இதழ்களை நடத்தினார். அண்ணா- திராவிட நாடு, காஞ்சி இதழ்களையும், கலைஞர் மு.கருணாநிதி-முரசொலி, முத்தாரம் இதழ்களையும் நடத்தினார்கள்.
க.அன்பழகன் – புதுவாழ்வு, சி.பி.சிற்றரசு – தீப்பொறி, கே.பி.மதியழகன் – தென்னகம், ஆசைத்தம்பி – தனியரசு என்று பலதரப்பட்ட இதழ்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
1967-இல் அமைக்கப்பட்ட திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் ஐந்து பேர் இதழாசிரியர்களாக இருந்தார்கள். “இந்த வெற்றிக்கு தினத்தந்திக்கு கால் பங்கு உரியது” என்று தேர்தல் முடிந்ததும் சொன்னார் ராஜாஜி.
சமசுகிருத சொற்கள் அதிகரித்து தமிழ் சமசுகிருதமயமாகிக் கொண்டிருந்த மாற்றத்தைச் சற்று தடுத்து நிறுத்துகிற வேலையைச் செய்தன இந்த திராவிட இயக்கத்தவர்களின் இதழ்கள்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 1933 லேயே தன்னுடைய ‘குடியரசு’ இதழில் அறிமுகப்படுத்தினார் பெரியார்.
தமிழ் தேசிய உணர்வை முன்வைத்து 1949இல் மா.பொ.சி.யின் செங்கோலும் தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டு பாரதம், குறிஞ்சி, தேசிய முரசு, கடலோசை போன்றவையும் வெளிவந்தன.
பொதுவுடமை கருத்துக்களுடன் தாமரை, ஜனசக்தி, சாந்தி, தீக்கதிர், செம்மலர் என்று பல இதழ்கள் வெளிவந்தன.
திமுக சார்பில் முரசொலி, திராவிடர் கழகம் சார்பில் ‘விடுதலை’யும் அதிமுக சார்பில் நமது எம்ஜிஆர் மதிமுக சார்பில் சங்கொலி பாமக சார்பில் தமிழோசை என்று பல நாளிதழ்களும் வார இதழ்களும் வெளிவந்தாலும், இவை அந்தந்த இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் குறுகிய வட்டத்திற்குள் நின்று விடுகின்றன.
இவற்றை கடந்து வெகுமக்கள் வாசக பரப்பிற்குள் இவற்றால் வர முடியவில்லை.
1967ல் ஆட்சிக்கு வரும் முன் பரவலாக அங்கங்கே வெளிவந்து கொண்டிருந்த திராவிட இயக்க இதழ்கள் 70-க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அபூர்வமாகிவிட்டது. இலக்கிய இதழ்களுக்கும் இதே நிலைதான்.
சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ இதழ்களை ஒரு பையில் வைத்தபடி கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கி விற்க சிரமப்பட வேண்டி இருந்தது.
1965இல் ‘தீபம்’ பத்திரிகை துவங்கியபோது “இதை லாப இயந்திரமாக வளர்க்க முன்வந்த பலரை நான் அனுமதிக்காததற்கு காரணம் இதன் இலக்கும், நம்பிக்கையும் தடுமாறக் கூடாது என்பதுதான்” என்று அறிவித்த நா பார்த்தசாரதி, 1974 இல் பத்திரிகை நடத்த தன்னுடைய வீட்டை விற்க வேண்டியதாயிற்று.
பல சிற்றிதழ்கள் தொடங்கிய சிறிது காலத்தில் நின்று போவது இயல்பாக நடந்திருக்கிறது. ‘திங்கள்’ என்ற சிற்றிதழை நிறுத்தும்போது அதன் ஆசிரியரான ராமநாதன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
துவங்கப்படும் போது பிரகடனமும் நிறுத்தப்படும்போது நம்பிக்கை இழந்த நிலையும் பல சிற்றிதழ் நடத்தியவர்களிடம் வெளிப்பட்டாலும் திரும்பத் திரும்ப கடும் இடர்பாடுகளுக்கு இடையிலும் அவை துளிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அமுதசுரபி போன்ற இடைநிலை இதழ்களின் தொடர்ச்சியாக தொண்ணூறுகளில் சுபமங்களா, புதியபார்வை, தீராநதி இவற்றைத் தொடர்ந்து காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து போன்ற இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
சிற்றிதழ்களின் வாசகர்கள் எண்ணிக்கையை விரிவடைவதற்கு இந்த இடைநிலை இதழ்கள் உதவின.
இதன் இன்னொரு விரிவாக்கமாக வெகுஜன இதழ்களில் சிறுபத்திரிகைகளில் மட்டுமே எழுதி வந்தவர்களான கி.ராஜநாராயணன் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், சாருநிவேதிதா போன்றவர்களும் எழுதத் துவங்கி இருக்கிறார்கள்.
கூத்துப்பட்டறை, நிஜ நாடக இயக்கம் போன்ற நாடகக் குழுக்களில் இருந்து சிலர் திரைப்படங்களில் நடிக்கப் போனதைப் போல இந்த மாற்றமும் நடந்திருக்கிறது.
“திரைப்படம் தமிழ் நாட்டில் செய்தி தொடர்புக்கு ஒரு கருவி” என்று சி.ஆர்.டபிள்யூ டேவிட் என்பவர் ஓர் ஆங்கில நூலில் எழுதி இருக்கிறார். அந்த அளவுக்கு திரைப்படம் என்கிற ஊடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் திராவிட இயக்கத்துக்காரர்கள்.
1949 இல் நல்லதம்பி படத்தில் கதை வசனம் எழுதினார் அண்ணா, தொடர்ந்து வந்த வேலைக்காரி படத்தில் பிரபலமாகி விட்டார்.
அவரைத் தொடர்ந்து 1950இல் மந்திரி குமாரி படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் மு கருணாநிதியைப் பராசக்தி நிமிர்ந்து பார்க்க வைத்தது.
தமிழ் உரையாடல்களை ரசிக்கத்தக்கதாக மாற்றினார்கள் இருவரும். பாரதிதாசன், கண்ணதாசன் சி.பி.சிற்றரசு, ஆசைத்தம்பி, முரசொலி மாறன் என்று பலர் திரைப்படங்களில் பங்கேற்றார்கள்.
கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ். ஆர்., எம்.ஜி.ஆர் என்று பலரும் திராவிட இயக்கச் சார்புடன் நாடகங்களிலிருந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்து தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார்கள்.
1958 கே.பி.சுந்தராம்பாள் தமிழக மேல்சபை உறுப்பினர் ஆனதைப் போல, அண்ணா, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோரைத் தொடர்ந்து கலைஞர் மு.கருணாநிதி, எம்ஜிஆரும் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்தார்கள்.
அன்றைக்கு அவர்களிடம் இருந்த சமூக பிரச்சனைகளுக்கு எதிரான வேகமும் ஈடுபாடும் திரைப்படங்களில் தொடர்ந்து பிரதிபலிக்கவில்லை.
1954 இலிருந்து 1959 வரை பொதுவுடமை சிந்தனையை முன்வைத்து இயங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நிரப்பிய இடத்தை அதே சிந்தனையுடன் வேறு யாரும் நிரப்பவில்லை.
நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தனக்கான அடையாளத்தை இழக்காமல் எம்.ஆர்.ராதா இயங்கிய வெளி அப்படியே வெற்றிடமாகக் கிடக்கிறது.
நண்பர்களுடைய உதவியுடன் ‘ஆசிய ஜோதி’ பிலிம்ஸ் நிறுவனத்தைத் துவக்கி ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை எடுத்த ஜெயகாந்தனை போன்ற முயற்சிகளை ஜெயபாரதி, பி.லெனின் போன்றவர்கள் தொடர்ந்தாலும்,
அம்முயற்சிகள் பரந்துபட்ட வெற்றியை பெற முடியவில்லை
எழுபதுகளுக்கு பிறகு புது இயக்குனர்களின் வருகைக்குப் பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டு இன்று வரை தொடர்கின்றன.

சில புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தாலும் வணிகப் படங்களின் வெற்றியுடன் அவற்றை ஒப்பிட முடியவில்லை.
அந்த அளவுக்கு வணிக ரீதியான ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான மொழியுடன் சில இயக்குனர்கள் இயங்க முடிந்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு வட்டார மொழிகளும் திரைப்படங்களில் இயல்பாக தற்போது இடம் பெற முடிந்திருக்கிறது.
மக்களுக்கு மிக நெருக்கமாகி விட்ட ஊடகமாக இப்போது மாறிவிட்டிருக்கிறது தொலைக்காட்சி. 1975 இல் சென்னையில் தொலைக்காட்சி நிலையம் உருவான போது முதலில் எதிர்பார்த்த அளவுக்கு அதன் வீச்சு இல்லை.
76-க்குப் பிறகு விளம்பரதாரர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெறத் துவங்கின.
1989-இல் ஒளிபரப்பான ராமாயணத் தொடர் மூலம் ஒருவாரத்திற்கு தூர்தர்ஷன் சம்பாதித்த தொகை 160 கோடி ரூபாய்.
91 க்கு பிறகு பல தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகு 94-இல் சன் தொலைக்காட்சி சேனலும், ராஜ் தொலைக்காட்சி சேனலும் துவங்கப்பட்டன.
2000 ஆம் ஆண்டில் ஸ்டார் டிவி சேனல் விஜய் டிவியை வாங்கி தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகம் எங்கும் நரம்புகள் மாதிரி கேபிள் வயர்கள் மூலம் இணைக்கப் பல சேனல்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அடுத்தடுத்தும் வந்தன.
குழந்தைகளுக்காக தனி சேனல்களும் ஒரே வீட்டிற்குள் பலதரப்பட்ட பார்வையாளர்களையும் உருவாக்கியது தொலைக்காட்சி.
வீட்டிற்குள் நுழைந்த தொலைக்காட்சி அங்கு பெரும்பாலும் இருக்கும் பெண்களை குறிவைத்து நிகழ்ச்சிகளை வழங்கின. தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களை தொலைக்காட்சி எதிரே நிர்பந்தப்படுத்தியதைப் போன்ற ஈர்ப்புடன் அமர வைத்தன.
மதியம், மாலை, இரவு நேரங்களில் தொலைக்காட்சிக்காக ஒதுக்கப்படும் நேரங்களாயின. திரைப்படங்களில் கூட அவை உருவாக்கம் கற்பனையான பிம்பங்களில் இருந்து சுலபமாக விடுபட முடியும்.
அதையும் மீறிய ஒரு விதமான சார்புத் தன்மையையும், வீட்டிற்கு நேரடியாக வரும் உறவுகளைவிட தொலைக்காட்சித் தொடரில் வரும் கதாபாத்திரங்களுடன் நெருங்கிய நிலையையும் பெண்களிடத்தில் தொலைக்காட்சி ஏற்படுத்தியது.
அதனுடைய தாக்கம் சில பெண்களை மன ரீதியாக பாதிக்கும் அளவுக்கு சென்றிருப்பதை சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மனநல மருத்துவர்கள் உணர்த்துகிறார்கள்.
ரிமோட் மூலம் தொலைக்காட்சிப் பெட்டிகளை இயக்குவதாக நினைத்தாலும் தொலைக்காட்சி தான் பலரை ‘ரிமோட்’டாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
தினமும் சராசரியாக ஒரு தொலைக்காட்சியில் 14 தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இதர சேனல்களையும் சேர்த்தால் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட தொடர்கள் வெளிவந்து, பார்வையாளர்களை கூறு போட்டுக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கான சேனல்களின் மூலமாக எத்தனையோ தகவல்களை புதுப்புது சொல்லாக்கங்களை அவர்கள் தெரிந்து கொண்டாலும், அவர்களுடைய உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை தொலைக்காட்சி இருக்கும் அறைகளில் பல மணி நேரங்களாக அசைவுகளற்று இருக்கச் செய்கிறது.
குழந்தைகளிடம் இயல்பாக இருக்கும் துறுதுறுப்பும் விளையாட்டையும் குறைகிறது.
தொலைக்காட்சிச் சேனல்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் மூலமாக வித்தியாசமான அசைவுகளுடன் கூடிய மொழி கட்டமைக்கப்படுகிறது.

தமிழ் உச்சரிப்பில் கவனமும், அழுத்தமும் இல்லாதபடி தொலைக்காட்சிகள் வீடுகளுக்குள் உருவாக்கம் பேச்சு மொழி, தமிழைப் பேச்சு மொழியாக மட்டும் கொண்டிருக்கும் பல இளைய தலைமுறையினரின் மனதில் தொடர்ந்தபடியே இருக்கிறது.
இவற்றிலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களை ஒலிப்பின்னலால் இணைந்திருக்கும் பண்பலை ஒலிபரப்பில் பணியாற்றுபவர்களின் காது வழியாகவும் புகட்டப்பட்டு கொண்டிருக்கும் சிதைந்த மொழியைத்தான்,
காலத்திற்கு ஏற்ற மொழியாக இளைய தலைமுறை கருதும் நிலையை உருவாக்கி இருப்பது, ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்று சொல்லலாம்.
90-களுக்குப் பிறகு பிரபலமான இணைய தளத்தின் மூலம் தமிழில் ஏராளமான வலைத்தளங்கள் தமிழ் வழியாக தொடர்பு கொள்வதில் இருந்து தமிழில் பலவற்றை பெறுவது வரை தமிழை இன்னொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன.
இலக்கிய இதழ்களை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்கிறவர்கள் இணையத் தளங்களில் பக்க நிர்பந்தங்கள் இன்றி சுதந்திர வெளியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது.
தொழில்நுட்பத்தின் எதிர்விளைவாக எவ்வளவு விஷயங்கள் இதே இணையம் வழியாக வந்து சேர வாய்ப்பு இருப்பது தெரிந்திருந்தாலும், இதற்காக இணையதளத்தையே மறுப்பது நவீனமான ஒரு தொழில்நுட்பத்தை இருக்கிற மாதிரி ஆகிவிடும்.
இலங்கையில் நடந்த இனப் பிரச்சினை காரணமாக உலகெங்கும் சிதறி இருக்கிற தமிழர்கள் இணையம் மூலமாக தமிழைப் பரப்பியதில் முக்கிய பங்கை வகிக்கிறார்கள்.
மொழியினால் நாடு இழந்து எங்கோ நிற்கும் அவலம் அவர்களுடைய சொந்த மொழியை எங்கிருந்தாலும் பாதுகாக்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.
மற்றவர்களுக்கு மொழி ஒரு கருவி, இவர்களைப் போன்றவர்களுக்கு மொழி ஓர் இழக்க விரும்பாத அடையாளம். அந்த உணர்வுதான் எங்கிருந்தாலும் மொழி குறித்த அவர்களுடைய கவனத்தை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
இந்த உணர்வு தமிழகத்தில் செயல்படக்கூடிய ஊடகவியல் சார்ந்தவர்களுக்கு பெரும்பாலும் இல்லை. அதற்கெல்லாம் மேலாக வலிமைமிக்க அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நடத்துகிறவர்கள் இடமும் அந்த உணர்வு இல்லை.
நாளிதழ்கள், வார பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள் என்று இவை அனைத்திலும் முக்கியமான அம்சமாக வெளித் தெரிவது அவற்றை நடத்துகிறவர்களுக்கு இடையிலான தொழில் போட்டி.
எப்படியாவது எதையாவது அல்லது எதை வெளிக்காட்டியாவது தங்களுடைய நிறுவனத்தை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேகத்தில், ஊடகத்திற்கான எல்லா அறநெறிகளும் மிக இயல்பாக மீறப்படுகின்றன.
காட்சி ஊடகம் எத்தனை வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சிறு உதாரணம், 2006 டிசம்பர் 27ஆம் தேதியன்று தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கில் இடப்படும் காட்சியைக் கூறலாம்.
அந்தக் காட்சியை அரை மணி நேரத்திற்குள் உலகமெங்கும் பார்த்தவர்கள் மட்டும் 300 கோடி பேர். அந்த அளவுக்கு வீரியமுள்ள தொலைக்காட்சி தமிழ்ச் சூழலில் எப்படி பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது?.
பார்ப்பவர்களை பதட்டப்படுத்திக் கொண்டே இருக்கும் தொடர்கள், இடுப்பில் கையை விட்டு கிச்சுகிச்சு மூட்டுகிற பாவனையில் பொழுதுக்கும் சிரிக்க வைக்க முயலும் நகைச்சுவை காட்சிகள்,
ரிக்கார்ட் டான்ஸ் என்கிற நடனத்தை தெருவில் ஆடுவதற்கும் ஹோட்டல்களில் ஆடுவதற்கு தடை விதித்து விட்டு,
அதற்கு சற்றும் குறையாத நடன அசைவுகளை வீட்டின் நடுக்கூடத்தில் கொண்டு செல்கிற தொலைக்காட்சிகள் என்று முழுக்க தனக்கான வணிக ரீதியான நியாயங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன இங்குள்ள ஊடகங்கள்.
இந்த வரைமுறைகளை மீறி மக்கள் தொலைக்காட்சியிலும் சில சமயங்களில் ஸ்டார் விஜய் தொலைக் காட்சிகளிலும் அரசு தொலைக்காட்சிகளிலும் மக்கள் பிரச்சினைகள் சார்ந்த சில நிகழ்ச்சிகள் வெளிவந்தாலும்,
அவையும் டிஆர்பி எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என்கிற அளவுக்கு முன்பு பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. திரைப்படம் சார்ந்த விஷயங்கள் மட்டும் திரும்பத் திரும்ப காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
வார இதழ்களுக்கும் நாளிதழ்களுக்கும் இதே விதமான போட்டிகள். அவற்றின் விற்பனை உத்திகளுக்காகப் பரபரப்புக்காக எதையும் ஆதாரமற்று வெளியிடவும் அவை தயாராக இருக்கின்றன.
அவை வெளியாவதால் உண்டாகும் சமூக மற்றும் உளவியல் சிக்கல்கள், குறைந்தபட்சம் சட்ட சிக்கல்களை கூட அந்த இதழ்கள் பரிசீலிக்க முடியாத அளவுக்கு வியாபாரப் போட்டிகள் தலைதூக்கி இருக்கின்றன.
அவற்றை நிறைவேற்றும் பலிகடாக்கள் மாதிரி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு வாயில் மூச்சிரைக்க ஓடும் பந்தயக் குதிரைகளின் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் அந்தந்த ஊடகங்களில் செயல்படுகிறவர்கள்.
அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்காகத் தொடர்ந்து பரபரப்பூட்டும் “ஸ்கூப் நியூஸ்”களையோ அல்லது கலவரப்படுத்தும் காட்சிகளையோ அவர்கள் தொடர்ந்து தந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
அந்த இலக்கில் அவர்கள் பின் தங்கினால், அவர்கள் புறந்தள்ளப்பட்டு, இன்னொரு குதிரை மூச்சிரைக்க ஓட ஆரம்பிக்கும்.
தினமும் கண்ணில் பட்டைக் கட்டப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியமும் பெரும்பாலான நிறுவனங்களில் அளிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் செய்திகளை வெளியிடுவதற்கு ஒளிபரப்புவதற்கு அவர்கள் வெளியில் கையேந்துகிற அவலம் நடக்கிறது.
நிலையாமை என்பதை தினமும் யோசிக்க செய்கிற துறையாகவும் இது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
இப்படி நாளுக்கு நாள் இதே வேளையில் தொடர்ந்து இருக்குமா என்பதே நிச்சயமற்ற நிலையில் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஊடகம் சார்ந்தவர்கள், அதை விட்டு மொழியைப் பற்றியும் அதன் சிதைவை பற்றியும் யோசிப்பார்களா?
இதை வெளிப்படையாகச் சொல்வது நம்முடைய நாற்றத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருந்தாலும் இதுதான் தமிழகத்து ஊடகங்களில் நிலவக்கூடிய எதார்த்தம்.
பத்திரிகை, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று கால மாற்றத்திற்கேற்ப தமிழ்மொழியும் சுவடிகளில் படர்ந்திருந்த தன்னுடைய பழமை தன்மையை உதறித் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றாலும், தமிழ் மொழி வளத்திற்கான உயிரான அம்சங்களையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த உணர்வு எந்த ஊடகம் சார்ந்திருக்கிறவர்களுக்கும் வணிகத் தனத்தை மீறி இயல்பாக இருந்து விட்டால் போதும். தமிழ் மொழியை இளம் நாற்று போல எந்த ஊடகத்திலும் உயிர்ப்புடன் செழிக்க வைத்துவிட முடியும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...