Saturday, February 22, 2020

கிட்ணம்மா_மூட்டிய_அடுப்பு - #பசிப்பிணி_நீக்கும்_மருத்துவன்_இல்லம்

#கிட்ணம்மா_மூட்டிய_அடுப்பு - #பசிப்பிணி_நீக்கும்_மருத்துவன்_இல்லம்
————————————————-
சமீபத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம் சென்று விட்டு லிங்கம்பட்டி கிராமத்திற்கு ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றபோது,  என்னுடைய நிமிரவைக்கும் நெல்லை நூலில் அந்த ஊரில் கிட்ணம்மா இலவச உணவுக் கூடம் நினைவுக்கு வந்தது.
கரிசல் வட்டாரத்தில் நாட்டுப்புறத் தரவுகளில் முக்கியமான செய்தியாகும். கடந்த நூற்றாண்டின் மத்தியில் கோவில்பட்டிக்கு கிழக்கே உள்ள லிங்கம்பட்டியில் உள்ள கிட்ணம்மா அன்னசத்திரம், பசிப்பிணி நீக்கும் மருத்துவன் இல்லம் போலப் பசி என
வரும் அனைவருக்கும் வித்தியாசம் பார்க்காமல் பசியாற்றிடும் இடமாகக் கிட்ணம்மாவின் இல்லம் திகழ்ந்தது. கிட்ணம்மா, அவரது கணவர் ஆகியோரின் கொடைத் தன்மை தெற்குச் சீமை எங்கும் பரவியது.
ஒரு சமயம் அந்தணர் ஒருவர் ராமேஸ்வரம் செல்லும் நோக்கத்தில் நடை பயணமாக வந்து கொண்டிருந்தபொழுது, அவர் வைத்திருந்த பணத்தை வழிப்பறி திருடர்கள் பறித்துக் கொண்டனர். ராமேஸ்வரம் செல்ல வழியில்லை என கவலைப்பட்டுக் கொண்டு லிங்கம்பட்டி வந்துள்ளார். அங்கு கிட்ணம்மாளைச் சந்தித்து தன் கவலையை கூறியுள்ளார். அவருக்கு அன்னம் படைத்து அவர்தம்



களைப்பை நீக்கி இராமேஸ்வரம் செல்ல பண உதவி செய்தார்.
சில நாள்கள் கழித்து கிட்ணம்மாளும் ஒரு வில் வண்டியில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியபின் இறைவனின் சன்னதியை அடைந்து இறைவழிபாடு செய்ய நின்று கொண்டிருக்கும்போது ஒரு மெல்லிய குரல், "இது லிங்கம்பட்டி கிட்ணம்மா புண்ணியம், புண்ணியம்' என்று ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்கிறார். திரும்பிப் பார்த்தார். இவரால் உதவி பெற்ற இராமேஸ்வரம் வந்த அந்தணர்தான் அப்படி சொல்லியபடி வேண்டிக் கொண்டிருந்தார்.
நாம் செய்த சிறுஉதவியே நம்பெயரை இறைவனின் சன்னதியில் கேட்க முடிகிறதே என்று மெய்சிலிர்த்து இந்த நல்ல காரியத்தை விரிவாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து தனது செல்வத்தையெல்லாம் தரும காரியங்களுக்கு செலவிட அன்னச்சத்திரம் தொடங்கினார். வருவோர்க்கு எல்லாம் உதவி செய்தார். பசித்தவர்களுக்கு உணவு படைத்தார்.
இப்படி இவரது செய்கை எட்டயபுரம் அரசர் காதுகளுக்குச் சென்றது. அவரும் கிட்ணம்மாவின் அறத்தை அறிந்து தன் அரண்மனைக்கு வரவழைத்துப் பாராட்டினார். தங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று ஜமீன்தார் கேட்டார். அவரோ அன்ன சத்திரத்திற்கு அடுப்பு எரிக்க விறகு அதிகமாக தேவைப்படுகிறது. தங்களின் ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட நிலங்களில் உள்ள காய்ந்த விறகுகளை வெட்டிக்கொள்ள அனுமதி வேண்டினார். தனக்கென வேண்டாமல் பிறருக்காக வேண்டியரை பாராட்டிய அரசர் அப்படியே அனுமதியை வழங்கினார். கடந்த 1960 ஆம் ஆண்டு வரை அந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களிடம் அரிசி, கம்பு, கேப்பை, சோளம், குதிரைவாலி போன்ற தானியங்களை வண்டிகளில் சேகரித்து, தினம் தவறாமல் உணவு அனைவருக்கும் லிங்கம்பட்டியில் உள்ள கிட்ணம்மாவின் இல்லத்தில் வழங்கப்பட்டது.
தனிமனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்  என்றான் இந்த வட்டாரத்துக் கவிஞன் பாரதி. எனவே,  காமராஜர் முதல்வராக இருந்தபோது, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பசியால் துடிக்கக் கூடாது என்று இதே எட்டயபுரம் மண்ணில் கிட்ணம்மாவின் அன்னசத்திரத்தை  மனதில் கொண்டு மதிய உணவை தொடங்கினார். அப்போது கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுவும் கிட்ணம்மாவைப் பற்றி சிலாகித்ததும் உண்டு. 
காமராஜரும் அந்த வட்டாரத்தில் சுற்றியவன் நான், இதை குறித்து அவரும் எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியதெல்லாம் செய்திகள்.
அந்த வட்டாரத்தில் வாழ்ந்த விளாத்திகுளம் சாமிகள், எட்டயபுரம் அரசர், கி.ரா., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த இப்பகுதிக்கு வந்த அக்கட்சியின் தலைவர்கள், பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன் போன்றோர்கள்  எல்லாம் பாராட்டியதுண்டு. திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் இதை கேள்விப்பட்டு என்னிடம் பேசியதுமுண்டு.
எட்டயபுரம் பாரதி விழாவிற்கு வந்த ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றோர்கள் மட்டுமல்லாமல், காருக்குறிச்சி அருணாச்சலம் போன்ற பெருந்தகைகள் கிட்ணம்மாவைப் பற்றிய செய்திகள் அறிந்து வியப்படைந்தனர். தண்ணீர்.. தண்ணீர்.. படமெடுக்க கே.பாலசந்தர் இந்த
பகுதிக்கு வந்தபோது, இந்த நாட்டுப்புறத் தரவுகளை எல்லாம் கேள்விப்பட்டு கோமல் சாமிநாதனிடம் இப்படியான பாத்திரங்களையும், திரையுலகில் பதிவுசெய்ய வேண்டுமென்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இந்தத் தரவும், செய்தியும் தெற்குச் சீமையில் குறிப்பாக கரிசல் வட்டாரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு கிட்ணம்மா அன்னசாலை ஒரு அருட்கொடையாக திகழ்ந்தது. இந்த செய்தி பெரிதாக வெளிச்சத்திற்கு வராமலேயே சென்றதில் என்னைப் போன்றோருக்கெல்லாம் சற்று வருத்தங்கள் உண்டு. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட போது இதை குறித்து விரிவாக அறிய முற்பட்டேன். அங்கு 1989இல் நடைபெற்ற தேர்தல் களத்தில் எனக்கு எதிராக களத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த
தலைவராக இருந்து மறைந்த சோ.அழகர்சாமியும், நானும் ஒரே நேரத்தில் இந்த கிராமத்தில் ஓட்டு சேகரிக்கும் போது இந்த வீட்டின் அருகே எதிரெதிரே சந்தித்தோம். அப்போது என்னப்பா, கிட்ணம்மா வீட்டு முன்னாடி சந்திக்கிறோம். 
நல்ல இடந்தான். நீ ஜெயிக்க வாழ்த்துகள் என்று பெருந்தன்மையோடு  சொன்னதெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன.
வடக்கே வடலூரில் வள்ளலார் அன்னதானம் செய்ய ஏற்றிய நெருப்பு இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அவரது சீடர்கள் இன்றும் அன்னம் படைத்து வருகின்றனர். ஆனால் கிட்ணம்மா மூட்டிய அடுப்பு அணைந்துவிட்டது. கிட்ணம்மா புகழ் ஓங்கட்டும்.

#கிட்ணம்மா
#கோவில்பட்டி_லிங்கம்பட்டி

#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
22.02.2020


1 comment:

  1. எங்கள் ஊரில் அருகாமையில் இருக்கும் கிராமம் இன்று அந்த மடம் சிதைந்து போய் கிடக்கிறது.
    மடம் முதலாளி என்றுதான் கூறுவார்கள்.
    ஆனால் அந்த குடும்பம் இன்று தனித்தனியாக பிரிந்து சிதைந்து தான் இருக்கிறார்கள்.
    வைகோ அவர்களின் துணைவியாருக்கு நெருங்கிய உறவினர்கள் இவர்கள்.

    ReplyDelete

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...