Thursday, February 6, 2020

#சில_நேரங்களில்_சில #மனிதர்கள்(#மந்திரிகள்)

#இதற்குத்_தான்_ஆசைப்பட்டோமா? 

#சில_நேரங்களில்_சில #மனிதர்கள்(#மந்திரிகள்)

“#புளிச்ச_மாவு_எப்படியும் #தோசைக்கல்லுக்கு_வந்து_விடும்” என்று அலட்சியம் காட்டுகிறார்களா? 
————————————————
இன்றைய அரசியல் களத்தில் நடக்கின்ற விவாதங்களையும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்கும் போது உடனே என்னைப் போன்றவர்களின் மனதில் தோன்றுவது இது தான்.
“இதுதானா நாங்கள் விரும்பிப் படித்த அரசியல்? இதற்கு ஆசைப்பட்டுத் தானா பல்வேறு பணிகளைப் புறந்தள்ளிவிட்டு பொதுவாழ்வு, பொதுநலம் சார்ந்த அரசியலுக்கு முன்வந்தோம்?”
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கண்முன் கண்ட காட்சிகளை சற்று கவலையுடன் மீண்டும் பின்னோக்கிப் பார்க்கின்றேன். 

கடந்த 1998இல்  அதிமுக-மதிமுக-பாஜக  கூட்டணியில்  சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வைகோ அவர்கள் போட்டியிட்டபோது நான் பிரதானமாகத் தேர்தல் களத்தில் பொறுப்பாளராக  இருந்தேன். அதே தேர்தல் களத்தில் எனக்கு வடசென்னை நாடாளுமன்றத்  தொகுதியை  கூட்டணிப் பேச்சு வார்த்தையின்போது எனக்காக கேட்டு பெறப்பட்டது. பிறகு  ஒதுக்கப்பட்ட அதே தொகுதி பின்னர் மறுக்கப்பட்டது ஏன்? அதற்குப் பின்னால் இருந்த மர்மமான காரணங்கள் என்ன என்பதை இன்றுவரை நானறியேன் பராபரமே. அது
வேறு விடையம். சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறேன்.

சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல்  பொறுப்பாளராக  நான் இருந்தபோது, சிவகாசி திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பணியில் இருந்தவர் தான் தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் அதிமுக,ராஜேந்திர பாலாஜி.  இன்னொரு அமைச்சரான கடம்பூர் ராஜு அப்போது கோவில்பட்டி வட்டாரத்தில் அதிமுக சார்பில் தேர்தல்  பணி செய்தவர். ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளுக்குச்  செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி அனுப்புவது அவருடைய பொறுப்பு. அதற்கான தொகையை நான் அவர்களிடம் கொடுப்பேன். அதன்பின்னர் வண்டிகளை அவர்கள் அனுப்புவார்கள்.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஓமந்தூரார் பெருந்தலைவர் காமராசர், தலைவர் கலைஞர்,உழவர்தலைவர்நாராயணசாமி நாயுடு,  வேலுப்பிள்ளை  பிரபாகரன் ஆகியோரிடம்பயின்றும்,எம்ஜிஆரிடமும்
நல்லஅறிமுகம்தான்அரசியல் அரசியல் சட்டமும் பயின்ற நாங்கள் காலத்தின் ஒரு கட்டத்தில் ஒதுங்கி இருக்கின்றோம்.

ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர்  இன்றைய   தமிழக அமைச்சர்கள். நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்களுக்கு கிடைத்த அமைச்சு பதவியை தவறு சொல்லவில்லை. இதுதான் இன்றைய
ஜனநாயகம்.அவர்கள் தற்கால அரசியல் சூழல் உருவாக்கித்தரும்  புத்துணர்வு முகாம் பயிற்சிக்கு சென்று வந்தவர்கள். அப்படியான புத்துணர்வு முகாமில் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை நாங்கள் சுயமரியாதையைப் பயின்றவர்கள். 
பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமான அவர்கள் இன்றைக்கு அமைச்சரவைப் பொறுப்பில் இருப்பதால் எனக்கு எந்த வருத்தமோ, எரிச்சலோ இல்லை.  அவர்கள் கட்சியில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  
அதுதானே  இன்றைய அரசியல்.
அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதால் நான் குறை சொல்லவில்லை. அப்படி சொல்ல வேண்டும் என்றால் தினம்தினம் கச்சேரி பாடலாம்.

மக்களே இங்கே  தவறான  தீர்ப்பை எழுதுகின்றார்கள்.  பணத்திற்காக வாக்களிக்கிறார்கள். அப்படி  மக்களே மாறிவிட்டிருக்கும்  போது,
இப்படியானவர்கள் அமைச்சர்கள் 
ஆவது தடுக்க முடியாது.  இங்குதான் தகுதிதான் தடையாக இருக்கிறது.

சரி, உயர்பொறுப்புக்குவந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவெளியில் பேசும்போது கவனம் வேண்டாமா? வார்த்தைகளை உபயோகப்படுத்தும் முன்பு அதன் அர்த்தம் குறித்தும், பேச்சின் விளைவு குறித்தும் கொஞ்சமவாது சிந்திக்க வேண்டாமா? எப்போதும் தன்னைப் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும்  என்பதற்காக கண்டனத்திற்குரிய வகையில் பேசுவது முறையா?

“ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல்
சொல்லின்கண் சோர்வு.”
இந்தக் குறளின் அர்த்தம் இவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, குறைந்தப்பட்சம் “நெல்லைக் கொட்டினால் அள்ள முடியும், சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது" என்ற கிராமத்து சொலவடையைக் கூட இவர்கள் அறியாதவர்களா?
“புளிச்ச மாவு எப்படியும் தோசைக்கல்லுக்கு வந்து விடும்” என்று அலட்சியம் காட்டுகிறார்களா? இவர்களைப் போன்றவர்களைத் தான் தற்போதுள்ள அரசியல் பிரமுகர்களாக நம் சமூகம் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது.
“யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை…
அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை” என்று துவங்கும் பாடலை “பலே பாண்டியா” படத்தில் எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.
அந்த வரிகள் அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்!
 #Ksrpost
5-2-2020.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...