Saturday, February 29, 2020

நேர்மையின் அடையாளம் மொரார்ஜி தேசாய்*

*நேர்மையின் அடையாளம் 
மொரார்ஜி தேசாய்*
நேற்று  பெங்களூருவில்  உள்ள காங்கிரஸ்  மூத்தத்  தலைவரான துளசிதாஸ்யப்பாவின்   வீட்டிற்குச் சென்றபோது, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் பிறந்தநாளை (29.02.2020) நினைவுபடுத்தினர்.
மொரார்ஜி தேசாய் 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தார்.  எனவே நான்காண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு வரும்போது தான் அவருக்கும் பிறந்தநாள் வரும்.

எளிமையையும் நேர்மையையும் தனது அடையாளமாகக் கொண்ட மொரார்ஜி தேசாய், மனதிற்கு சரியென்று பட்டதைப் பேசுபவர். வரதட்சணை வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த அவர், அதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில்  இருந்து வெளியேறி  இருக்கிறார். 

மொரார்ஜி  தேசாய் தமிழகம் வந்தபோதெல்லாம் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றால் வரிசையில் நின்று தான் தரிசனம் செய்வார். 

ஸ்தாபன காங்கிரசில் இருந்தபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். என் மீது அன்பும் பாசமும் கொண்ட மத்திய முன்னாள் அமைச்சர் தாரகேஸ்வர் சின்ஹாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து  வைத்தார்.
மொரார்ஜி தமிழகம் வரும்போதெல்லாம் சந்திப்பதுண்டு. எளிமையான உணவையே உட்கொள்வார். பெரிய பந்தாக்கள் இல்லாமல் தம்முடைய அரசியல் பணிகளில் ஈடுபடுவது இவருடைய வழக்கம். 

நண்பர் மதுரை மு.சிதம்பர பாரதிக்கும் நன்றாகத் தெரியும். மதுரையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த போது சர்க்யூட்   ஹவுசில்  தங்குவார். 
ஒருமுறை மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்தபோது செட்டிநாடு ராஜா சர்.முத்தையா செட்டியாரைச் சந்திக்க மொரார்ஜி விரும்பினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பின்னர் மொரார்ஜி பிரதமரானதும் மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்தபோது,   ராஜா சர்.முத்தையா செட்டியார் மொரார்ஜியைச் சந்திக்க விரும்பினார். அப்போது ஜான் மோசஸ், மு.சிதம்பர பாரதி   போன்றோரெல்லாம் ஆட்சேபித்தபோதும், முன்பு நடந்த நிகழ்வை  மனதில்  வைத்துக் கொள்ளாமல் முத்தையா செட்டியாரை சந்தித்தார்  மொரார்ஜி.

ஒரு முறை     திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்தோம். அப்போது இரவுநேர உணவு குறைவாக இருந்தது. இதைப்பற்றித் தெரிந்து கொண்ட அவர், எல்லோருக்கும் உணவு வந்த பின்னர் தான் சாப்பிட ஆரம்பித்தார். வெறும் பழங்களைமட்டும்உட்கொண்ட
தெல்லாம் நினைவில் உள்ளது. 
அப்போது காந்தியைப் போல் ஆட்டுப் பாலை நாட்டுச் சர்க்கரையோடுப் பருகுவது உண்டு. பப்பாளிப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவார். 

இதுபோன்ற அரசியல் ஆளுமைகளைப் பார்ப்பது அரிது.  மொரார்ஜி  குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரது மகள் மருத்துவப் படிப்பில்  இறுதித் தேர்வை எழுதினார்.   மதிப்பெண் குறைந்ததால்   மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினார் மகள். ஆனால் அதற்கு அனுமதி  மறுத்த மொரார்ஜி, அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற்றதாக மற்றவர்கள் கருதுவார்கள்.  அதற்கு முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தவர் மொரார்ஜி. 
இறுதிக் காலத்தில் தனது சொத்துக்களைப் பொதுநலனுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர் மொரார்ஜி தேசாய்.

#மொரார்ஜி_தேசாய்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-2-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...