Wednesday, January 17, 2024

#தைபொங்கல் -சிறுகிழங்கு -பனங்கிழங்கு -சுண்டக்கறி



————————————
தென் தமிழகத்து கரிசல் பூமியில் மட்டுமே அதிகம் விளையும் வருடத்தில் தை பொங்கல் முதல் 3 மாத காலங்கள் மட்டுமே கிடைக்க கூடிய சுவையான சிறு கிழங்கு நீங்கள் சாப்பிட்டது உண்டா? . சிறுகிழங்கு, (Coleus parviflorus அல்லது Plectranthus rotundifolius) லேபியேட்டே குடும்பத்தைச் சேர்ந்தது. இது கேரளா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் கிழங்கு வகைப்பயிராகும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை,ஆப்ரிக்கா போன்ற வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படுகிறது.

மற்றவை பொங்கலன்று அதிகாலையில் என் வீடு தேடி வந்தது ஒரு கட்டு பனங்கிழங்கு. பனங்கிழங்குகளை வேக வைத்து சாப்பிடும்போது நிஜமாகவே வேறு வகையான ருசி.. பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும். ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஓர் அடி வரை நீளமானது.
நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.

‘நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....’

பொங்கல்  காலம் என்றால்  மேலும் நினைவுக்கு வருவது சுண்டக்கறி .  சாப்பிட்டு பார்த்தால் தெரியும் இந்த சைவ உணவின் சுவை .

சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும்.

தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொறியல், சிறுகிழங்கு பொறியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.

இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொறியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார், அவியல், பச்சடி என அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

✨அதென்ன சுண்டக்கறி?✨

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொறியல் என அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

✨✨
பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்....

#பொங்கல்காட்சிகள்

#சிறுகிழங்கு
#பனங்கிழங்கு
#சுண்டக்கறி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-1-2024.


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...