Saturday, March 7, 2015

சீனாவும்- இந்தியப்பெருங்கடலும் -2 . (China- Indian Ocean –Part II)




பசிபிக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்திலும் சீனா தன்னுடைய ஆளுமையைக் காட்டி உலகப்பெரும் வல்லரசாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு இலங்கையின் முன்னாள் அதிபர் இராஜபக்‌ஷேவும் துணைபோனார்.

சீனாவுக்கு இப்போது பெருங்கடல்கள் மீது பேராசையும், அதன் வழியாக தன்னுடைய வாணிபத் தடங்களை உருவாக்கி, தங்களுடைய மற்ற வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்துமகாசமுத்திரத்தில், கடலுக்கடியில் உள்ள கனிமவளங்களைப் பற்றி ஆராய இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் தருணத்தில் சீனாவும், எரிபொருட்களின் மூலக்கூறு படிமங்கள் இந்துமகாக்கடலில் கிடைப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற விரும்புகின்றது. அதற்கேற்ப இலங்கையும் சீனாவுக்கு அனைத்து வகையிலும், உதவியாகவும் இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் துருப்புச்சீட்டாகவும் இருந்தது. இந்த இரண்டுநாடுகளும் ஒன்றுக்கொன்று உதவ கள்ளத்தனமாகக் கணக்குப் போட்டுக்கொண்டு உதவிகளைப் பெற்று வந்தனர்.

ஆனால் இன்றைக்கு (06-03-2015) இலங்கை அதிபர் மைத்ரி சிரிசேனா, சீனாவுடன் செய்துகொண்ட கொழும்பு துறைமுகத்தின் கட்டுமான ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது ஒரு நல்ல செய்திதான்.

16ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டின் துவக்கம் வரை, ஐரோப்பிய, அமெரிக்க ஆதிக்கத்தில் இந்துமகாசமுத்திரம் இருந்ததை மறுக்கமுடியாது. இந்துமகாக்கடலில் தொடர்ச்சியான அரபிக்கடலும், வங்கக்கடலும் முறையாக பாகிஸ்தான் மியான்மர் ஆளுமையில் ஒருபகுதியாக இருக்கின்றது. இந்த இருநாடுகளும் சீனாவுக்கு அனுசரணையாக உள்ளதால் கடல்பிராந்தியத்தில் சீனா நிகழ்த்த நினைக்கின்ற எண்ணங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

சீனா கடந்த காலத்தில் தைவானுடனும், வியட்நாம் பிரச்சனையிலும், கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, தனக்கு கடல்வழி மார்க்கத்தில் ஆதிக்கம் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் உள்நாட்டுப்பிரச்சனைகளிலும்,  தற்போது ஹாங்காங்கில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடக்குவதிலும் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டு அங்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது. புவியரசியலில் தெற்காசிய பிரதேசங்களில் நாளுக்குநாள் சீனா எடுக்கின்ற இதுமாதிரியான நடவடிக்கைகள் கவலையளிக்கின்ற வகையில் உள்ளது.

இன்றைக்கு (06-03-2015) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் கொழும்பு சென்றுள்ளார். அவர், கடந்தகாலத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணையையும், அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கும், வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இராணுவத்தை திரும்பப்பெறுவதற்கும் , தமிழர்களின் விவசாய நிலங்களைத் திரும்பக் கொடுப்பதற்கும், மாகாண கவுன்சிலுக்கு காவல்துறை, நிலவருவாய், மீன்பிடித்தொழில் அதிகாரங்களை வழங்குதல் பற்றியும், சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தையும் பற்றியும் பேசுவாரா என்று தெரியவில்லை.

அடிப்படையில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளில் இவைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் கொழும்பில் இருந்துவரும் செய்திகளின்படி பார்த்தால், பிரதமர் மோடி இலங்கைப் பயணம் பற்றியும்,  சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தைப்பற்றி மட்டும்தான் பேசுவார்கள் என்று தெரிகிறது.

1954ல் பஞ்சசீலத்தை நேருகாலத்தில் சீனா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து வெறும் ஒப்பந்தமாகத்தான் உள்ளது. எந்த இணக்கமான நிலையும் இதுகுறித்து ஏற்படவில்லை. பஞ்சசீலம் கையெழுத்தான உடனேயே திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அங்கிருந்து தலாய்லாமா அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு ஓடிவரவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.

சீனாவின் அடவாவடி அருணாச்சலப் பிரதேச எல்லைத் தலையீடு வரை இன்றும் தொடர்கின்றது. அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து இந்தியப்பெருங்கடலில் ரோந்து வந்து கொண்டிருப்பது கண்காணிக்கப் படவேண்டியது. சீனாவின் ட்ராகன் பசுபிக் கடலில் ஆட்டம் போட்டுவிட்டு, இலங்கையில் உள்ள திரிகோணமலை துறைமுகம் வரைக்கும் பக்கத்தில் வந்துவிட்டது. மன்னார் வளைகுடா கடந்து இராமேஸ்வரத்தை நெருங்க அதிக தூரமில்லை. ஏற்கனவே கடந்த 24-02-2015 பதிவில் திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவும், சீனாவும் குத்தகைக்குப் பெற முயற்சி எடுத்த்தை குறிப்பிட்டிருந்தேன்.

மைத்ரிபால் சிரிசேனா இன்றைக்கு கொழும்பு துறைமுகம் விரிவாக்க கட்டுமானத்திற்காக சீனாவோடு செய்துகொண்ட ஒப்பந்தந்தை இரத்து செய்ததாக அறிவித்திருந்தாலும், மற்ற ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருமா?, அவற்றை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெருமா? என்ற கேள்வியெல்லாம் நம் முன்னே இருக்கின்றன.

இந்த சூழ்நிலைகளை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு இந்துமகா சமுத்திரம் குறித்து ஒரு தொலைநோக்குப் பார்வையோடு இந்தியா தன் முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையோடு இருக்கின்றதோ, அதேஅளவு அக்கறையுடன் அந்நியசக்திகள் இந்தியப்பெருங்கடலில் அண்டாமல் கவனித்துக்கொள்வதும அவசரமும், அவசியமும் ஆகும். இந்தியப்பெருங்கடலில் அந்நியசக்திகள் தலைதூக்கினால், அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும் அவர்களின் விரிவாக்கம் ஏற்பட்டுவிடும்.

வங்கதேசப்போரின் போது, உலகஅரங்கில் எப்படி இந்திராகாந்தி காய்களை நகர்த்தினாரோ  அம்மாதிரி வலுவாகவும், தெளிவாகவும், வலிமையோடும், இந்தியா இந்துமகாசமுத்திரப் பிரச்சனையிலும், சீனாவுடனான அருணாச்சல பிரதேச எல்லை விவகாரம், பிரம்மப்புத்திராநதி பிரச்சனை, கடல்வழி சீனாவின் எரிவாயுக்குழாய் பதிப்பு நடவடிக்கைகளிலும், சில்க்வே என்ற சீனாவின் வியாபார மார்க்க முயற்சிகள், ஆகியவற்றில் இந்தியா சீனாவை கண்காணிப்பதோடல்லாமல் அதன் ஆதிக்கத்தையும் முறியடிக்க வேண்டும்.

இந்தியப்பெருங்கடலில், கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு முனைகளில், வலுவான இராணுவ கண்காணிப்புடன், கடற்படைத்தளங்களை  அமைக்க இந்தியா முயலவேண்டும். இதுபற்றி முறையாக கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-03-2015

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...