Thursday, March 12, 2015

தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் - Pending Cases in Tamil Nadu Courts-12,04,410..



நீதித்துறையில் தீர்வுக்கு வராமல்,  வழக்குகள் நிலையில் இருக்கும் பிரச்சனை கடந்த 35ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றது..

 தற்போது  தமிழகம் மற்றும் புதுவையில்  12,லட்சத்து 4ஆயிரத்து 410 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. சென்னை உயர்நீதி மன்றம், இதன் மதுரை கிளை, மற்றும் கீழாண்மை நீதிமன்றங்களிலுமாக மொத்தம் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை இது.

தாமதத்திற்கு காரணம் என்னவென்றால், நீதிமன்றத்தில் போதுமான அலுவலர்கள் இல்லை. வழக்குகள் தீர்வை எட்டாமல் அடிக்கடி ஒத்திவைக்கப்படுகின்றது. சாட்சியங்கள் சரியான நேரத்தில நீதிமன்றம் வராமல் இழுத்தடிப்பது ,அரசு பிரதிவாதியாக இருந்தால் உடனடியாக பதில் மனு போடுவதற்கு மாதக்கணக்கில் இழுத்தடிப்பது  போன்ற பல்வேறு காரணங்களால் இத்தனை வழக்குகள் முடிவுக்குவராமல் இருக்கின்றது.

இத்தனைக்கும் லோக் அதாலத் அமைப்பின்  மூலம், 1986லிருந்து நிலுவையில் இருந்த  61.55லட்சம் வழக்குகள்  கடந்த டிசம்பர் 2014ல் தீர்வுகாணப்பட்டது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது,  அவர் அமைச்சரவையில் இரயில்வே அமைச்சராக இருந்த எல்.என்.மிஸ்ரா, பீஹார் மாநிலம்  சமஸ்டிப்பூர் ரயில்வே நிலைய விழாவுக்கு 02.01.1975அன்று செல்கின்றார். அங்கு மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றார்.
அந்த வழக்கு எப்போது முடிவுக்கு வந்தது தெரியுமா? ...

39ஆண்டுகளுக்குப் பின் கடந்த நவம்பர் மாதம் 2014ஆண்டு 10நாளில் விசாரணைகள் முடிந்து தீர்ப்புவழங்கப்பட்டது. அந்த தீர்ப்பிலும் தெளிவான விடைகளும் இல்லை.

அதே இந்திரா காந்தி காலத்தில், நகர்வாலா என்பவர் டெல்லி பாராளுமன்றத் தெருவில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் பிரதமர் இந்திராகாந்தியின் பெயரைச் சொல்லி லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். சிலநாட்களிலே அவர்  மர்மமான   முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கும் முடிவுக்கு வர 30ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பீஹாரில் ஒரு கிரிமினல் வழக்கு முடிவுக்குவர நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதுதான் இந்திய நீதித்துறையின் நிர்வாக மற்றும் நீதியின்  வேகம்.

நான் வெளிநாட்டுப் பயணங்கள் செல்லும்போது, அங்குள்ள  நாடாளுமன்றம் மற்றும்  நீதிமன்றங்களைக் காணச் செல்வது என்னுடைய வாடிக்கை. அவை எப்படி செயல்படுகின்றன என்று பார்க்க வாய்ப்புக்கிடைக்கும். அங்கே வழக்கறிஞர்கள் வாதத்தினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவேண்டும் என கால அளவு வரையறை செய்யப்பட்டிருக்கும். வாதம் செய்யும் நேரம் முடிந்துவிட்டதை குறிப்பிடும் விதமாக சிகப்பு விளக்கு எரியும்.

இம்மாதிரி சுருக்கமான  மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்களை கொண்டு வழக்குகள் விரைவில் விசாரணை செய்யப்பட்டு நீதி அளிக்கப்படுகின்றன.  அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்விச்சர்லாந்து நாடுகளில் கவனிக்கும் போது இது தெரியவந்தது.

ஆனால் நம் நாட்டில் வழக்கறிஞர் வாதம் பலநாட்களும், சாட்சிகள் வராமல் இழுத்தடிப்பது பல மாதங்களும், வாய்தா வாங்குவது வருடக்கணக்கிலுமாக நீட்டிப்பது போன்ற காரணங்களிலே வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மலைபோல் குவிந்துவருகின்றன.

முதலில் தெளிவான, சுருக்கமான, விவாதங்களும், எழுத்துப் பூர்வமான ஆதாரங்களையும் கொண்டு வழக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். மிகமுக்கியமாக நீதிமன்றத்திற்கு உரிய அலுவலர்கள் இருந்தாலே நிலுவை வழக்குகளை விரைவில் முடிக்க முடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் (2014 டிசம்பர் 31வரைக்கும்)
நிலுவையில் உள்ள,
சிவில் வழக்குகள் : 8.80லட்சம் ,
கிரிமினல் வழக்குகள் : 30,494.

புதுச்சேரியில்  (2014 டிசம்பர் 31வரைக்கும்)
நிலுவையில் உள்ள,
சிவில் வழக்குகள் : 17,780 ,
கிரிமினல் வழக்குகள் : 12,074.

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் பட்டியல்:

2,215.- கன்னியாகுமரி
1,998 - விருதுநகர்
1,917 - காஞ்சிபுரம்
1,834 - திருநெல்வேலி
1,594 - மதுரை
1,590 - விழுப்புரம்

மாவட்டநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் பட்டியல்:

57,728 - காஞ்சிபுரம்
52,892 - கோவை
46,455 - திருச்சி
45,976 - மதுரை
45,029 - சேலம்
43,788 - திருவள்ளூர்
40,752 - விழுப்புரம்
33,325 - சென்னை (நகர சிவில் நீதிமன்றம்)
30,938 - சென்னை (சிறு வழக்குகள் நீதிமன்றம்).



இப்படியே நிலைமைகள் நீடித்தால் வழக்குகள் தீவுக்கு வருவதென்பதே கேள்விக் குறியாகிவிடும்.  போதிய நீதிபதிகள், உரிய நீதிமன்றங்களில் நியமிக்கவேண்டும். ஜனநாயகத்தில் நீதித்துறை என்பது அடிப்படைக் கூறுஆகும். அதன் ஆளுமையை பாதுகாக்க வேண்டியது  முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-03-2015.

  

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...