Sunday, March 29, 2015

விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் - பொருளாதார நிபுணரின் திமிரான பேச்சு "Get out from Agriculture" highly condemnable speech. (விவசாயிகள் 5)

விவசாயத்தை விட்டொழித்தால் நாடுமுன்னேறும் என்று பொருளாதாரம் படித்த பிரகஸ்பதியின் பேச்சு.  - "Get out from Agriculture" It is a condemnable speech. 




காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர், பொருளாதார நிபுணர்.  நீலகண்டன் என்பவர், “விவசாயம் ஒன்றும் உயிர்நாடி அல்ல; விவசாயத்தை விட்டு விவசாயிகளே  வெளியேருங்கள், அது தான் உங்களுக்கு நல்லது” என்று பேசியுள்ளார். இந்த செய்தி இன்றைக்கு (29-03-2015) நாளிதழ்களில் வந்துள்ளது.

இவருடைய இந்தப் பேச்சு கண்டனத்துக்குரியது. விவசாயிகளைப் புண்படுத்தும்படியாக இவர் பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தன்னுடைய இந்தப் பேச்சுக்குத் துணையாக அமெரிக்காவில் விவசாயம் நடக்கவில்லை என்றும், தொழில்கள் தான் அங்கே அதிகமாக உள்ளது என்றும், அங்கு ஒருசதவிகிதம் தான் விவசாயம் நடக்கிறது என்றும் , அதே போல சீனாவிலும் விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை என்றும்,  அங்கு விவசாயம் குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால்,  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் குடும்பம் இன்றைக்கும் நிலக்கடலை விவசாயம் செய்கின்றார்களே! . அங்கே பல காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விவசாயம் தான் முக்கியத்தொழில். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்  உலகிலேயே பெரிய ஆப்பிள் விவசாயி இல்லையா?

சீனாவிலும் தொழிலுக்கு ஒதுக்குவது போல விவசாயத்திற்கும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு, பொதுவுடமை நாடு எனச் சொல்லப்பட்டாலும் தனியார் பண்ணைகளும் தற்போது வளர்ந்து வருவதாகவே செய்திகள் உள்ளன.

இப்படியெல்லாம் இருப்பது நீலகண்டனுக்குத் தெரியாதா? ஒருவேலை சென்னையிலே வாழ்ந்து கிராமப்புறத்திலே ஒதுங்காத மனிதராக இருந்திருப்பாரோ?  இப்படிப்பட்ட ஞானசூன்யங்களும், மேதாவிகளும் பேசுகின்ற பேச்சுக்கு ஏற்பதான் அரசாங்கமும் நடந்துகொள்கின்றது.

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், நேரடியாக விவசாயத்திற்கு பயன்பாட்டை விட வேளாண் வணிகத்திற்குத்தான் முக்கியமாக நிதி ஒதுக்கீடும் அமைந்துள்ளன. விவசாயமில்லாமல், விவசாய வணிகம் எப்படி நடக்கும் என்று கூட கணிக்கமுடியாத கோட்டு சூட்டு போட்ட டெல்லி பரிவாரங்களுக்கு என்ன தெரியும் விவசாயிகளைப்பற்றி.

கிராம வளர்ச்சிக்கான  நிதி ஒதுக்கீடும்  இம்முறை குறைந்துவிட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையில் விவசாய, கிராமப்புற, ஏழைமக்களுக்கு ஒதுக்கிய 3000கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வ வரியைக் குறைக்கும் வகையில்  8,325கோடி ரூபாய் பெரும் முதலாளிகள் கொழுக்க ஒதுக்கியதில் என்ன நியாயம் இருக்கமுடியும்.

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 2015-2016ம் நிதி ஆண்டில் 171கோடி ரூபாய் எதற்காக சலுகை வழங்கப் படவேண்டும்? இதனைக் கணக்குப் பார்த்தால் ஒருநாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7கோடி ரூபாய்க்கு கூடுதலான தொகை பெருமுதலாளிகளுக்கு சலுகையாகக் கிடைக்கின்றது என்று
பிரபல  “தி இந்து பத்திரிகையாளர் பி.சாய் நாத்” கூறுகிறார்.

கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்ற கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 42டிரில்லியன் ரூபாய் (1-டிரில்லியன் = 100 ஆயிரம் கோடி) அளவைத் தாண்டி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சாய்நாத் மேலும் குறிப்பிடுகிறார்.

விவசாயம் அழியட்டும், பெரும் முதலாளிகள் கொழுக்கட்டும், பன்னாட்டு நிறுவனங்கள் உள்நுழையட்டும் என்ற மனப்பாங்கை, படித்த அதிகாரிகள், மற்றும் அரசாங்கங்கள் கொண்டுள்ளனர்.  விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் இவர்கள் எல்லாம் மானமுள்ள மனிதர்களா?

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களும் பறிக்கப்பட்டு, அதனை மலிவாகக் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கியும், பல இலவசங்களையும், சலுகைகளையும்  அவர்களுக்கு அளித்தும், டாடா, அம்பானி, அதானி, மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றோரையே தொடர்ந்து கொழுக்கச் செய்கிறது அரசுகள்.

ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் வெறுங்கையை நீட்டிக்கொண்டு விவசாயம் செய்யாதே என்று உபதேசம். அட மானங்கெட்டவர்களே!  மைதாசு போல சோறு இல்லாமல் பணத்தையா மெல்லப் போகிறீர்கள் வருங்காலத்தில்...

இப்படியெல்லாம் கண்ணெதிரே நடக்கும் கொள்ளைகளும், கேடுகளும். இதற்கு நீலகண்டன்கள் போன்ற மெத்தப் படித்த எமகண்டன்களும் காவடி தூக்குகிறார்கள்.   அடப்பாவிகளே! ஜான் அகஸ்டஸ் வால்க்கரும், ஆல்பர்ட் ஓவார்டும் போற்றிய ஞானம் இந்த மண்ணின் விவசாயிகளுக்குரியது. வேளாண்மையில் புரட்சிகளைக் கண்ட உழவர்களை அடையாளம் கண்ட விஞ்ஞானிகள் ரிச்சாரியாவும், யக்ஞராமனும் வாழ்ந்த பூமி இது.
கொஞ்சமாவது பாடுபடும் விவசாயி மீது மனசாட்சியைக் காட்டக்கூடாதா?






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-03-2015


No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...